சீன அரசின் உதவியுடன் 1,996 வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!



முனீரா அபூபக்கர்-
Ø சீன அரசின் உதவியுடன் 1,996 வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது.

Ø கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 108 வீடுகள்..

Ø குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 1,888 வீடுகள்.

Ø அடுத்த மார்ச் மாதம் நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து மூன்றாண்டுகளில் நிர்மாணப் பணிகள் நிறைவடையும்.

Ø வீடமைப்பு திட்டத்திற்கு 552 மில்லியன் சீன யுவான் உதவி.

குறைந்த வருமானம் பெறுபவர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் சீன அரசின் உதவியுடன் ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், சீன அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஷென்ஹோங்வும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (27) பத்தரமுல்ல, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மூன்றாண்டுகளில் நிர்மாணிக்கப்படும் இந்த 1,996 வீடுகளில் 1,888 வீடுகள் கொழும்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும், 108 வீடுகள் இந்நாட்டு படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.

இதன்படி, பேலியகொடை துடுகெமுனு வீதியில் 615 வீடுகளும், தெமட்டகொட எழுமடுவ தோட்டத்தில் 586 வீடுகளும், மொரட்டுவ பெட்டரி தோட்டத்தில் 575 வீடுகளும், மஹரகம அம்பவத்தையில் 112 வீடுகளும், கொட்டாவ பழத்துருவத்தையில் 108 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன. கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக 108 கொட்டாவ பழத்துருவத்தை வீடுகள் ஒதுக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்திற்கு சீன அரசு 552 மில்லியன் யுவான் நிதி உதவி வழங்குகிறது. இது இலங்கை நாணயத்தில் ஏறத்தாழ 24.48 பில்லியன் ரூபாவாகும்.

புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இந்த வீடுகளின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நாட்டில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக சீன அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுவது இது முதல் மற்றும் கடைசி முறையல்ல என சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்நாட்டு மக்களின் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு சீனா எப்போதும் நிவாரணம் வழங்க முன்வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் சார்பில் சீன ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்த அமைச்சர், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை விரிவுபடுத்துவதற்கு இத்திட்டங்கள் உதவும் எனவும் சுட்டிக்காட்டினார். சீனா எப்போதும் இலங்கையின் நண்பன். இலங்கை எதிர்கொள்ளும் ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையிலும் சீன அரசாங்கம் இலங்கைக்கு நெருங்கிய நண்பராக ஆதரவளித்து வருவதாகவும், மூன்று தசாப்த கால யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் இலங்கைக்கு சீனா எப்போதும் துணை நின்றதாகவும் அவர் கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஷென்ஹோங், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கு சீனா எப்போதும் ஆதரவளிப்பதாக வலியுறுத்தினார். சீன மானியத்தின் கீழ் இலங்கை மக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்த 100 க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு சீனா பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய தூதுவர், கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட பயங்கரவாத யுத்தம், கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு தன்னால் இயன்றவரை ஆதரவளித்துள்ளதாகவும் வலியுறுத்தினார். சீனா இலங்கையின் நல்ல அயல்நாடு மற்றும் நெருங்கிய நண்பன் என சுட்டிக்காட்டிய தூதுவர், இலங்கை மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்த சீனா உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்யானந்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், அதன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :