இஸ்ரேலின் அட்டூழியங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் அவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர்கள் 153 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கை கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் அனைத்துக் கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது.
"காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாகக் குண்டுகளை பொழிந்து வருகிறது. அவர்களின் ஈனச்செயல்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே உள்ளன. மனச்சாட்சியே இல்லாமல், மக்களின் குடியிருப்புகள் மீதும் வைத்தியசாலைகள் மீதும் அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களின் மீதும் ஏவுகணை தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.
மேலேத்தேய நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகள், இஸ்ரேலின் இந்தக் காட்டுமிராண்டி நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருந்து, தாக்குதல்களுக்கும் யுத்தத்தை தொடர்வதற்கும் ஊக்கமளித்து வருகின்றன. இதனை ஐ.நா சபை தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும். ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் 120 நாடுகள், யுத்த நிறுத்தத்தை உடனடியாகக் கொண்டுவருமாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ள போதும், இஸ்ரேல் எதையுமே பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. சண்டித்தனமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது" என்று கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
"தேர்தல் முறைமையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கொண்டுவந்த பிரேரணைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். தேர்தல் திருத்தங்களில் சிறுபான்மையினர் குறிப்பாக, தமிழ், முஸ்லிம் மலையகத்தவர்களின் விகிதாசாரம் பேணப்பட வேண்டும். அவர்களின் சனத்தொகை விகிதத்திற்கேற்ப பிரதிநிதித்துவங்கள் கொண்டுவரப்பட வேண்டும். எனவே, அவ்வாறான திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.
அதேபோன்று, உள்ளூராட்சி மன்றங்களில் கடந்த பல வருடங்களாக சுமார் 8,400 ஊழியர்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்றுகின்றனர். ஆளுநர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய அமைச்சர்கள், இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பல தடவைகள் உறுதியளித்துள்ள போதும் அது இன்னும் நடைபெறவில்லை. எனவே, ஜனாதிபதி இந்த விவகாரத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கிரிக்கெட்டில் ஊழல் துஷ்பிரயோகம் தலைவிரித்தாடுவது தொடர்பில், விளையாட்டுத் துறை அமைச்சரே பாராளுமன்றில் பிரஸ்தாபித்துள்ளார். இந்த ஊழலை கட்டுப்படுத்த முடியாத கையறுநிலையையும் அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார். எனவே, இந்த உயர் சபையானது அவற்றைக் கவனத்திற்கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கில் தகுதிவாய்ந்த, திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ள போதும், அவர்களை தேசிய அணியில் உள்வாங்க பின்னடித்து வருகின்றனர். இதற்கும் ஆக்கபூர்வமான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு அனுப்பவுள்ள கடிதத்தின் சாராம்சத்தையும் ரிஷாட் எம்.பி சபையில் வாசித்தார்.
"பாலஸ்தீன மக்களுடன் உறுதியாக நிற்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களது கோரிக்கைகள் பின்வருமாறு:
1. உலக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் முக்கிய பங்குதாரர்கள், மத்திய தரைக்கடல் பகுதியின் பிரச்சினையின் மூல காரணத்தை ஆராய வேண்டும். சரியான மற்றும் உண்மையான தீர்வை செயல்படுத்துவதன் மூலம், உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான நடைமுறை நடவடிக்கைகளின் வழிகளைக் கண்டறிய வேண்டும். கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட 1967 எல்லைகளின் சுதந்திர மற்றும் இறையாண்மையைக் கொண்ட பாலஸ்தீனத்தை நாம் உருவாக்கி அங்கீகரிக்க வேண்டும். பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் நியாயமான அமைதியை அடைவதற்கான ஒரே வழி இதுவாகும். மேலும், இஸ்ரேலும் அதை ஏற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த உலக நாடுகள் செயல்பட வேண்டும்.
2. உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், சர்வதேச சட்டங்கள் மற்றும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தமான தேவையை நிறைவேற்ற, உடனடியாகப் போரை நிறுத்தவும், பேச்சுவார்த்தைக்கு வருமாறும் நாங்கள் கோருகிறோம். பாலஸ்தீனத்தின் சுதந்திர அரசை உருவாக்குவதற்கு, சர்வதேச சமூகம் அதிகபட்சமாக தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
3. இஸ்ரேல், சர்வதேச சட்டங்கள் மற்றும் உலகளாவிய மனிதாபிமான விதிமுறைகளின் கீழ், இப்போதும் அதற்கு முன்னும் ஒரே மாதிரியான, அப்பட்டமான போர்க் குற்றத்தை மேற்கொண்டமைக்கு பொறுப்பேற்க வேண்டும்.
4. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் அனைத்து நிறுவனங்களும் சர்வதேச சமூகமும் அனைத்து அரச மற்றும் சிவில் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், உலகில் உள்ள அனைத்து சமூகப்பற்று எண்ணம் கொண்ட குடிமக்கள் மற்றும் உலகில் அமைதியை விரும்புவோர், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அதன் தாக்குதல்கள், அடக்குமுறைகள் மற்றும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்துவதற்கு, இஸ்ரேல் மீது திணிக்க தேவையான நடவடிக்கைகளில் விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
5. இஸ்ரேலை ஆதரிப்பதை நிறுத்திவிட்டு, சர்வதேச சட்டத்தின்படி, நயவஞ்சகத்தனம் மற்றும் இரட்டை நிலைப்பாடு இல்லாமல் நியாயமான ரீதியில் நடந்துகொள்ளுமாறு, மேற்கத்திய நாடுகளுக்கு குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்பு சபையின் மூன்று நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியோரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மனித விழுமியங்கள், மனித உரிமைகள் ஆகியவற்றைக் கையாள்வதில், நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டிய தருணம் இதுவாகும்." என்று கூறினார்.
0 comments :
Post a Comment