அரசாங்கத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைப்பு, மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்காமை, பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்டகாலமாக வழங்கப்படாதுள்ள சம்பள அதிகரிப்பை வழங்க கோருதல், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊதிய அதிகரிப்புச் செய்ய வலியுறுத்தல், பல்கலைக்கழகங்களில் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்பி நிருவாக விடயங்களை சுமுகமாக முன்னெடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளல், பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை சீராக்குதல், இலவச உயர்கல்வி முறைமையை ஒழித்து தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் அரசின் சிந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிகளை வேறு தேவைகளுக்கு பயன்டுத்தும் அரசின் எத்தனங்களுக்கு எதிர்ப்பு வெளியிடல், அரசின் செயற்பாடுகள் காரணமாக கல்விமான்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதால் நாட்டின் கல்விக் கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க தவறியமை உட்பட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள் சங்கம் என்பன இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் நடைபெற்றது. பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தி சுமார் ஒரு மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயர் பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.
107 வீத அதிகரிப்பை - எத்தனைகாலம் ஏமாற்றுவாய்,
பொருளாதார பிரச்சினையை - தீர்க்க உமக்கு வழியில்லையா,
புத்திசாலிகளை உருவாக்க - ஒதுக்குவதற்கும் காசில்லையோ,
கல்விமான்களை உருவாக்க - அக்கறையில்லை அரசாங்கத்திற்கு.
ஓய்வூதியத்தை சீராக்கு - ஊழியர்களை சமமாக நடத்து,
ஒரே நாட்டு சட்டத்தில் - வேண்டாமே பிரிவினைகள்,
விற்காதே கல்வியினை - அழிக்காதே ஏழைகளின் கனவுகளை,
வேண்டாமே தனியார் மயமாக்கம் - அரச பல்கலைக்கழகத்தை பாதுகாப்போம்.
சம்பளப் பிரச்சினைக்கு தீர்வும் இல்லை - வெற்றிடங்களை நிரப்பவும் இல்லை,
கல்விக்கூட பிரச்சினைகள் - அரசாங்கத்திற்கு கணக்கும் இல்லை,
பல்கலைக்கழக பதவிகளில் - அதிகரித்த வெற்றிடங்கள்,
நாளடைவில் அதிகரித்து - வானுயர்ந்து போகிறது.
வங்குரோத்தை சமாளிக்க - EPFயையும் ETFயையும் கொள்ளையடிக்கப் போகிறாயா,
வேலைநேரத்தை அதிகரித்து - ஊழியர்களை நசுக்க வேண்டாம்,
தொழிலாளர் உரிமைகளில் - கைவைக்கும் அரசாங்கம்,
புதிது புதிதாய் சட்டம் இயற்றி - என்ன செய்யப் போகிறதோ.
ஊழியர்கள் தினந்தினமும் - செத்து செத்து மடிகின்றனர்,
உழைப்பை சுரண்டும் அரசாங்கம் - ஏறெடுத்தும் பார்க்கவில்லை,
அமைச்சரவையும் ஏற்றுக் கொண்ட - அதிகரித்த சம்பளத்தை,
கொடுத்துவிடு விரைவாக - வாழவிடு ஊழியரை.
புத்திசாலிகள் வெளியேற்றம் - அதிகரித்துச் செல்கிறது,
கல்விமான்கள் வெளியேறி - வெளிநாட்டுக்குச் செல்கின்றனர்,
உருவாக்கிய முறைமைகளும் - வீணாகிச் செல்கிறது,
நாட்டுநிலை வங்குரோத்தில் - பொதுமக்கள் திண்டாட்டத்தில்.
அமைச்சர்கள் சுகபோகத்தில் - பொதுமக்கள் அதாள பாதாளத்தில்,
நாட்டுநிலை வங்குரோத்தில் - ஆட்சியாளர்கள் நித்திரையில்,
போராடி வென்றெடுப்போம் - எமக்கான உரிமைகளை,
தொழிலாளர் உரிமைகளை - வென்றெடுக்கப் போராடுவோம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment