நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்தி போதையொழிப்பு செய்ய ஊடகவியலாளர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், மதுசாரத்தின் வரி விதிப்புக்கள், விலை நிர்ணயம், பெற்றுக் கொள்ளக்கூடிய தன்மை மற்றும் சட்ட விரோதமான மதுசாரத்தின் உருவாக்கம், அவற்றின் சந்தை நிலைமை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் சிலோன் மீடியா போரத்தின் ஒருங்கிணைப்பில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் பிரதான வளவாளராக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி ஏ.சி.றஹீம் கலந்து கொண்டு புள்ளிவிபரங்களுடனும், ஆதாரங்களுடனும் போதைப்பொருள் தொடர்பிலான பல்வேறு விடயங்களை விளக்கியதுடன் நாட்டில் போதைப்பொருள் எவ்வாறு கையாளப்படுகின்றது, தடுப்பதற்கான வழிகள், தடுப்பதில் உள்ள நெருக்கடிகள் மற்றும் அரசியலில் போதைப்பொருளின் வகிபாகம் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார்.
மேலும் சட்டவிரோதமான மதுசாரத்தினால் நோய்வாய்ப் பட்டவர்களின் கணக்குகளை சேகரிப்பதற்கான முறையான நெறிமுறை எமது நாட்டின் சுகாதாரப் பிரிவில் இல்லை. இவ்வாறான நிலைமையிலேயே சமூகத்தில் பல வதந்திகள் செய்திகளாக பரப்பப்படுகிறது. அத்தோடு எமது சமீபகால ஆய்வுக் கேற்ப சுமார் பத்து வீதமானவர்களே சட்டவிரோத மதுசாரத்தை பாவனை செய்கின்றனர் என தெரியவந்துள்ளது. கடந்த 30 வருடங்களாக மதுசார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விஞ்ஞான ரீதியான நிறுவனம் என்கிற ரீதியில் உங்களுக்கு மேலதிகமாக இவ்விடயம் தொடர்பான தகவல் அல்லது தரவுகள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றை வழங்குவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் கூறினார்.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், சிலோன் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான எஸ்.தஸ்தகீர், இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ஏ.ஹமீட், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீட் உட்பட ஊடக அமைப்புக்களின் பிரதானிகள், முக்கிய ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment