வி.ரி. சகாதேவராஜா-
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் 16 நாள் செயற்பாட்டு வாதத்தின் ஓரங்கமாக இன்று(6) புதன்கிழமை காரைதீவில் இருந்து கல்முனை வரை பெண்கள் பேரணி இடம் பெற்றது.
அம்பாறை மாவட்ட பெண்கள் வலை அமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரனின் ஏற்பாட்டில் தலைவி திருமதி தியாகேஸ்வரி ரூபன் தலைமையில் பேரணி காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து கொண்டார்.
அம்பாறை மாவட்ட செயலகங்களில் கடமையாற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் அமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
இன்று புதன்கிழமை காலை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் இருந்து இந்த பேரணி ஆரம்பமானது .
தமிழ் சிங்கள முஸ்லிம் மகளிர் மாவட்டம் எங்குமிருந்து வந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
"வீட்டு வன்முறையை இல்லாது ஒழிப்போம், சிறுவர் உரிமையை பாதுகாப்போம், பெண்கள் உரிமையை பாதுகாப்போம், பெண்கள் சிறுவர்கள் வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம், ஆண் பெண் சமத்துவம் பேணுவோம், பணிப் பெண்களாக வெளிநாடு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவோம்,
பேருந்துகளில் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இந்த ஊர்வலத்தில் சென்றோர் கொண்டு சென்றனர் .
இவர்கள் ஐந்து கிலோமீட்டர் பிரதான வீதி ஊடாக கல்முனையை 11 மணியளவில் சென்றடைந்து கல்முனை பிரதான மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் பெண்கள் சிறுவர் உரிமை தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகத்தை நடத்தினர்.
அங்கிருந்து பேரணி கலைந்து சென்றது.
பேரணிக்கு அரச அதிபர் அங்கீகாரம் அளித்ததோடு போலீசாரின் பாதுகாப்பும் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment