இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தினால் அப்பீடத்தினுடைய பேராசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்தமைக்காக நன்றி தெரிவிக்கின்றேன். குறிப்பாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக மிகவும் பிரயத்தனப்பட்ட பீடத்தினுடைய பீடாதிபதி அஷ்ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ் அவர்களுக்கு எனது விசேடமான நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பேராசிரியராகப் பதவி உயர்வு பெறுவதற்கான எனது பயணம் கிட்டத்தட்ட 25 வருடங்கள் கொண்டது. அப்பயணம் மலர்கள் தூவிய அழகிய பயணமாக அமையவில்லை. மாறாக அது கரடுமுரடானதாகவும் பல்வேறு இன்னல்களைத் தரக்கூடியதாகவுமே இருந்தது. 1995இல் நான் தற்காலிக விரிவுரையாளராக இணைந்து கொண்ட போது மிக எளிமையான, அடிப்படை வசதிகள் கூட இப்பல்கலைக்கழகத்தில் இருக்கவில்லை. இஸ்லாமிய கற்கைகள் பாடத்தைப் பொறுத்தளவில் அப்போது இருவர் மாத்திரமே விரிவுரையாளர்களாக இருந்தனர். அதில் மறைந்த துணைப் பேராசிரியர் கே.எம்.எச். காலிதீன் ரஹிமஹூல்லாஹ் அவர்கள் கலை, கலாசாரப் பீடத்தின் பீடாதிபதியாகவும் சிறிது காலத்தின் பின்னர் வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் பதில் பீடாதிபதியாகவும் ஒரே நேரத்தில் செயற்பட்டதால் பாடத்தோடு தொடர்பான அனைத்து வேலைகளும் என் மீதே சுமத்தப்பட்டிருந்தது. ஆரம்ப காலத்தில் பேராசிரியர்களோ கலாநிதிகளோ பல்கலைக்கழகத்தில் இல்லாதிருந்ததால் ஆய்வு பற்றிய விழிப்புணர்வோ அது பற்றிய வழிகாட்டல்களோ எனக்குக் கிடைக்கவில்லை. அத்துடன் 2009 வரை இனப் பிரச்சினையால் ஏற்பட்டிருந்த கஷ்டங்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியிருந்தது. நான் கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்பதனால் ஒவ்வொரு முறையும் எனது சொந்த ஊருக்குப் போகும் போதெல்லாம் 8 சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அவற்றில் சிலவற்றில் எனது பிரயாணப் பொதிகளைச் சுமந்து கொண்டு சுமார் 200 மீற்றர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டியிருந்தது. இவ்வாறான பல்வேறு துன்பங்களையும் அசௌகரியங்களையும் பொறுமையாக ஏற்றுச் செயற்பட்டதற்குப் பரிசாக இப்பதவி கிடைத்துள்ளதாக நான் நம்புகின்றேன்.
ஒரு பல்கலைக்கழகத்தை, அதன் பீடங்களை அளவீடு செய்வதற்கு அங்குள்ள பேராசிரியர்களின் எண்ணிக்கையும் ஒன்றாகும். அதிகமான பேராசிரியர்களைக் கொண்ட, அவர்களின் ஆய்வு வெளியீடுகளைக் கொண்ட ஒரு பல்கலைக்கழகம், பீடம் வளர்ச்சியுற்றதாகக் கருதப்படுகின்றது. அந்த வகையில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடமும் எதிர்காலத்தில் மேலும் பல பேராசிரியர்களைக் காண வேண்டும். அதற்காக நான் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
எனது பேராசிரியர் பதவி உயர்வுக்கு பின்னணியில் இருந்தவர்களுக்கு இந்நிகழ்வில் நன்றி கூறுவது எனது கடமை என நான் நினைக்கின்றேன். முதலில் எனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு வழிகாட்டி, நான் திசை திரும்பிப் போகும் போதெல்லாம் சரியான திசைக்கு என்னை அழைத்துச் சென்ற அல்லாஹ்வுக்கு எனது நன்றிகள் உரியன. அவனே அனைத்துப் புகழ்களுக்கும் உரித்தாளன். அல்ஹம்து லில்லாஹ்.
அடுத்து மண்ணறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது பெற்றோர்களை (ரஹிமஹூமல்லாஹ்) நன்றியோடு நினைவு கூர்கின்றேன். அவர்கள்தான் எனது சிறிய பருவத்திலிருந்து என்னை சீராக வளர்த்து, கல்வி அடைவுகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள்.
எனது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் துணையாக இருந்து, என்னோடு சேர்ந்து பயணிக்கின்ற எனது துணைவி நன்றிக்குரியவர். அவரின் உதவியும் ஒத்தாசையும் இல்லாதிருந்தால் என்னால் இந்த உச்சத்தைத் தொட முடியாதிருந்திருக்கும். அத்தோடு எனது பிள்ளைகளும் நன்றியோடு பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இந்த இடத்தில் ஒரு நபரைக் குறிப்பிடாவிட்டால் இந்த உரை முளுமை பெறாது. அவர்தான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்கள். அவர் 2015ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகத்தில் உபவேந்தராகப் பதவி ஏற்ற போது ஒரு பேராசிரியர் கூட இங்கு இருக்கவில்லை. அவர் இங்குள்ள முதுநிலை விரிவுரையாளர்களை பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு தூண்டியது மட்டுமன்றி அதற்கான அனைத்து விதமான ஒழுங்குகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவர் 2021இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை விட்டுச் செல்லும் போது 17 பேராசிரியர்கள் இங்கு பதவி உயர்வு பெற்றிருந்தனர். தற்போது 30இற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த அடைவுகளுக்கு மூலகாரணமாக பேராசிரியர் நாஜிம் அவர்கள் இருந்துள்ளார்கள்.
இறுதியாக எனது பீடத்தைச் சேர்ந்த சக விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எனது பேராசிரியர் பதவிக்கு பங்காற்றியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகும் என்றார்.
நிகழ்வின்போது பேராசிரியர்களான எஸ்.எம்.எம். மஸாஹிர், ஆர்.ஏ.சர்ஜூன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் எஸ். எம். எம். மஸாஹிர் கடந்த பாதை:
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் துறையில் கடமையாற்றி வரும் கலாநிதி எஸ். ஏம். எம். மஸாஹிர் அவர்கள் இஸ்லாமிய கலாசாரத் துறை பேராசியராவார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை அதன் ஸ்தாபக விரிவுரையாளர்களுள் ஒருவராக 1995.11.01ஆம் திகதி இணைந்து கொண்ட இவர், அன்று முதல் அவர் 25.02.1998 வரை தற்காலிக விரிவுரையாளராகவும், 31.07.2006 வரை தகுதிகாண் விரிவுரையாளராகவும், 31.07.2011 வரை முதுநிலை விரிவுரையாளர் (தரம் II) ஆகவும், 11.12.2019 வரை முதுநிலை விரிவுரையாளர் (தரம் I ) ஆகவும் பதவி வகித்தார். பின்னர் 12.12.2019 முதல் செல்லுபடியாகும் வண்ணம் பேராசியராகப் பதவி பெற்ற அவர் குறித்த துறையில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற முதல் இலங்கைப் பிரஜையாவார். அத்துடன் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் துறை மற்றும் ஜாமிஆ நளீமிய்யா பட்டதாரிகளுள் முதல் பேராசிரியர் என்ற மகுடத்தையும் இவரே பெற்றுக் கொள்கிறார்.
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரபல வர்த்தக நகரான அக்குரணையில் பிறந்த இவர், மர்ஹும்களான செய்யித் முஹம்மத், ஸபா உம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வராவார். சாதாரண வியாபாரியான இவரது தந்தை, தனது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் கொண்டிருந்த அதீத ஆர்வமே தென்னிலங்கையின் பிரபல உயர் இஸ்லாமிய கலாபீடமான ஜாமிஆ நளீமிய்யாவில் இவர் இணைவதற்கான முக்கிய தூண்டுகோலாக அமைந்தது.
பேராசிரியர் மஸாஹிர் அவர்கள் அக்குரணை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலத்தில் (அப்போது அது ஒரு கலவன் பாடசாலை) தனது ஆரம்பக் கல்வியைக் (தரம் 1-5 வரை) கற்ற இவர் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தார். அத்துடன் தனது இரண்டாம் நிலைக் கல்வியை (தரம் 6-11 வரை) அக்குரணை அஸ்ஹர் கல்லூரியில் கற்ற இவர் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்று 1984இல் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நுழைந்தார்.
இலங்கையின் பிரபல முஸ்லிம் அறிஞர்களான கலாநிதி எம்.ஏம். சுக்ரி (ரஹிமஹுல்லாஹ, உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர், அஷ்ஷைக் ஏ.சி. அகார் முஹம்மத் (முதல்வர், ஜாமிஆ நளீமிய்யா), அஷ்ஷைக் ஸீ. ஐயூப் அலி போன்ற பலரின் வழிகாட்டுதல்களின் கீழ் பண்பாடும், அறிவும், ஒழுக்கமும் நிறைந்த ஆன்மீக கூழலில் சுமார் ஏழு வருடங்கள் (1984 - 1991) இக்கலாசாலையில் கல்வியைத் தொடந்த இக்காலப்பகுதி இவரது வாழ்வில் பல்வேறு திரும்புமுனைகளை ஏற்படுத்தியது. அத்துடன் அக்கலாசாலையில் சுமார் நான்கு வருடங்கள் (1991-1995) உதவி வரிவுரையாளராகவும் கடமையாற்றி மாணவர்களின் பல்துறைசார் ஆளுமை விருத்தியில் காத்திரமான பங்களிப்புக்களை ஆற்றினார்.
1991இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கலாசாரத்துறை விசேட கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொண்டு இரண்டாம் நிலை (உயர் பிரிவில்) (Second Class (Upper Division)) சித்தி பெற்ற இவர், 1997இல் சவுதி அரேபியத் தலைநகர் ரியாதில் அமைந்துள்ள மன்னர் ஸுஊத் (King Saud) பல்கலைக்கலத்தில் “Post Graduate Diploma in Teaching Arabic for non-Arabic Speakers” எனும் கற்கையை பயில்வதற்கான புலமைப் பரிசிலைப் பெற்று இரண்டாம் நிலை (உயர் பிரிவில்) சித்தி பெற்று அக்கற்கையை பூர்த்தி செய்தார்.
பின்னர் 2006ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிக் கற்கையை ((M. Phil.) பூர்த்தி செய்த இவர் இக்கற்கைக்காக அறபுத் தமிழில் வந்துள்ள அவ்குர்ஆன் விரிவுரை (தப்ஸீர்) நூல்கள் தொடர்பாக சமர்ப்பித்த சுமார் 700 பக்கங்களைக் கொண்ட ஆய்வேடு குறித்த பல்கலைக்கலகத்தில் முதுமாணிக் கற்கைக்காக (M. Phill) சமர்ப்பிக்கப்பட்ட மிகப் பெரிய ஆய்வேடாக இன்றுவரை திகழ்கிறது.
அதனைத் தொடர்ந்து மலேசியாவின் கோலாலம்பூரில் அமைந்துள்ள உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான மலாயா பல்கலைக்கழகத்தில் (University of Malaya) 2017ஆம் ஆண்டு தனது கலாநிதிக் கற்கையை பூர்த்தி செய்த பேராசிரியர் இக்கற்கையை பூர்த்தி செய்வதற்காக தகாபுல் (Takaful/ இஸ்லாமிய காப்புறுதி) தொடர்பான தனது ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார். தகாபுல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டு உதயமான இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் துரித வளர்ச்சிக்கு பேராசிரியர் மஸாஹிர் பல்வேறு காத்திரமான பணிகளை தொடர்ந்தும் ஆற்றி வருகிறார்.
இப்பல்கலைக்கழகத்தில் பல உயர்பதவிகளை வகித்தவர்களுள் ஒருவராகத் திகழும் இவர் இருமுறை இஸ்லாமிய கற்கைகள் துறைத் தலைவராக கடமையாற்றியுள்ள அதேவேளை மூன்று முறை இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பீடாதிபதியாக அப்பீட அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்டு 31.01.2023 வரை கடமையாற்றினார்.
எழுத்துத் துறைக்கான இவரது பங்களிப்புக்களும் காத்திரமானவையாகும். இதுவரை 16 க்கு மேற்பட்ட நூல்களையும் 50 க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்விதழ்களில் பிரசுரித்துள்ள இவர் 40க்கு மேற்பட்ட ஆய்வுகளை பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆய்வரங்குகளில் சமர்ப்பித்துள்ளார். அத்தோடு ஏழு சர்வதேச ஆய்வரங்குகளை தலைமையேற்று நடாத்தியுள்ளதோடு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் ஆய்வுச் சஞ்சிகையான “Sri Lankan Journal of Arabic and Islamic Studies” இன் பிரதம ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார்.
பேராசிரியர் மஸாஹிர் அவர்களின் குடும்ப வாழ்வைப் பொறுத்தளவில் அவர் 1996ஆம் ஆண்டு எம்.என்.எஸ். நிபாஸாவைக் கரம்பிடித்தார். அவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளையுமாக மூன்று பிள்ளைகள். அவர்களுள் மூத்த பெண் பிள்ளை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டதாரியாவார்.
சமூகத்தின் அறிவு, கல்வி, பண்பாடு போன்ற பல்துறைசார் மேம்பாட்டில் அக்கறை கொண்டுள்ள பேராசிரியர் அவர்கள் பல்கலைக்கழக ரீதியாகவும் பல்கலைக்கழகத்துக்கு வெளியிலும் இவ்விடயம் தொடர்பில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
எடுத்துக்காட்டாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தில் மாணவர்களிடையே ஆய்வுக் கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சமூக ஆய்வுகளுக்கான மாணவர் ஆய்வு மன்றம் ((Students’ Research Forum for Social Research)இன் முதுநிலை தவிசாளர் (Senior Treasurer) ஆக அதன் ஸ்தாபகம் முதல் 2023ஆம் ஆண்டுவரை செயற்பட்டு வருகினறார். இம்மன்றின் உருவாக்கத்தின் பின்னர் மாணவர்களிடையே ஆய்வுக் கலாசாரம் அபரிமிதமாக வளர்ச்சியைக் கண்டுள்ளமை கண்கூடாகும்.
அத்துடன் தனது பிறப்பிடமான அக்குரணை நகரில் இயங்கி வரும் அக்குரணை ஆய்வு மன்றம' (Akurana Research Forum) இன் ஸ்தாகர்களுள் ஒருவராகவும் அதன் தலைராவும் தொடர்ந்தும் தொண்டாற்றி வருவதோடு இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகத்துக்கான பாடசாலை பாடவிதானத் தயாரிப்பு, பரீட்சை வினாத்தாள் ஒழுங்கமைப்பு போன்ற பல்வேறு முக்கிய துறைகளில் உறுப்பினராவும், ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
மானிட மறுமலர்ச்சிக்கான சங்கம் (Assembly for Human renaissance), அக்குரணையில் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான அமைப்பு (Association for Social & Educational Development in Akurana (ASEDA)), நீதி மற்றும் மேம்பாட்டுக்கான மக்கள் இயக்கம் (People’s Movement for Justice and Development (PMJD))) போன்ற பல்வேறு சமூக நிறுவனங்களில் உறுப்பினராவும் பல்வேறு பதவிகளிலும் சேவையாற்றி வரும் இவர் சமூகம் வேண்டி நிற்கும் பல்வேறு தலைப்புக்களில் சொற்பொழிவுகளையும் மேற்கொண்டுள்ளதோடு பல்வேறு சமூக அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் பங்கு கொண்டுள்ளமை அவரது சமூக சேவை ஈடுபாட்டை பிரதிபலிக்கின்றன.
இவரது சேவைகள் மென்மேலும் தொடர வேண்டும் எனவும் அதனூடாக சமூக எழுச்சியும் மேம்பாடும் ஏற்பட வேண்டும் எனவும் வல்ல இறைவனை நாம் பிரார்த்திக்கிறோம்.
0 comments :
Post a Comment