பட்ஜட்; ஓய்விலுள்ள மஹிந்தவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி!



சுஐப்.எம்.காசிம்-
ணிலின் சவால்மிக்க பயணத்துக்கு கிடைத்த அங்கீகாரமே பட்ஜட் வெற்றி. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுக்கோப்புடன் உள்ளமையும் இந்த வெற்றியில் வௌிப்பட்டுள்ளது. நிறைவேற்றதிகாரம் கைமாறப்பட்ட பின்னர் நடப்பவற்றில் பல, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை புறந்தள்ளுவதாக உள்ளன.
நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படும் அமைச்சரவை நியமனம், மாவட்ட மற்றும் தொகுதி விடயங்களை கருவறுக்கும் ரணிலின் போக்குகளால் கட்சியின் முக்கியஸ்தர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். கடிவாளம் கட்சியிடம் உள்ளதால் காலோசித முடிவுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன காத்திருப்பதாகவே பலரும் கருதினர். பிறக்கவுள்ள புத்தாண்டு தேர்தலுக்கு வித்திடவுள்ளதால் கட்சி நலன்களே பட்ஜட்டில் செல்வாக்குச் செலுத்துமென்ற ஊகங்களும் உலவின. ஆனால், பட்ஜட்டின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் 21 இல், 45 மேலதிக வாக்குகளால் வெல்லப்பட்டதிலிருந்து இந்த ஊகங்கள் நீங்கத்தொடங்கின. இந்த ஊகங்கள் நீங்கத் தொடங்கியதிலிருந்து சில விடயங்கள் துலங்கவும் தொடங்கின.
மஹிந்த ராஜபக்ஷவின் மவுசு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நிலைக்கும் வரை, ரணிலின் மவுசுக்கு மறைமுகக்கரங்கள் பலமூட்டும். ரணிலைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பது, பொருளாதாரத்தை கட்டியெழுப்பி தம்மீதான பழிகளை போக்கிக்கொள்வது. இவையிரண்டும் இந்த அரசாங்கத்தின் இரட்டைச் சக்கரங்கள். இந்த நிலைப்பாட்டில்தான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வழிநடத்துகிறார் மஹிந்த.
மூன்றாம் வாசிப்பு வெல்லப்படும் வரை மஹிந்தவின் அரசியல் மூளை உறங்கியிருக்காது. உறங்கியிருந்தால் 41 மேலதிக வாக்குகளால் மூன்றாம் வாசிப்பு வென்றிருக்காது. இதனால்தான், ஓய்வுக்காக வீட்டிலிருக்கும் மஹிந்த, உழைப்போடுதான் ஓய்வெடுப்பதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகை கூறுகிறது. ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை பிடிக்குமளவுக்கு வளர முடியாதென்பது ஆசிரியரின்றி உணரப்படும் அறிவு போன்றது. இதனால், ரணிலின் எந்தளவு உயர்வும் ராஜபக்ஷக்களுக்கு பொருட்டில்லை. ஐக்கிய மக்கள் சக்தி தலைவரின் வளர்ச்சியையே சவாலெனக் கருதுகின்றனர். வளரும் தலைமைகளுக்குள்தானே போட்டி, வயதாவோருக்கிடையில் இல்லையே!
இதனால்தான், இரண்டு வாக்களிப்புக்களிலும் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவில்லை. தென்னிலங்கைத் தளங்களைத் துருவித்துருவி ஆராய்ந்தாலும் காரணத்தை கண்டுகொள்ள முடியவில்லை. முதுகெலும்புள்ள தலைவராக அடையாளம் காட்டப்படுவதற்காக இவர் பயிற்றப்படலாம் அல்லது பக்குவப்படுத்தப்படலாம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 02ஆவது மாநாட்டில் மஹிந்த ஆற்றிய உரைக்குள்ளிருந்த முடிச்சுக்களை இப்போது அவிழ்க்க முடியாது. ஏதாவதொரு தேர்தல் வரைக்கும் மெதமுலானவின் மூடிய அறைக்குள்ளேயே இந்த முடிச்சுக்கள் இருக்கும். எந்தத் தேர்தலுக்கும் தயாரென்கிற மஹிந்த, கட்சிக்கு ஒரு வாரிசைத் தேடாமலா இருப்பார்.
இதேபோன்ற ஒரு பொருளாதார வீழ்ச்சி இந்தியாவில் 1991இலும் தாய்லாந்தில் 1997இலும் ஏற்பட்டது. சர்வதேச நாணய நிதியம், ஜெயிக்கா நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகளின் உதவிகளோடுதான் இந்த நாடுகள் மீண்டெழுந்தன.
இப்போதுள்ள நிலையில், சர்வதேச உதவிகளைப் பெறுமளவுக்கு ராஜபக்ஷக்களின் செல்வாக்குகள் இல்லை. இதனால், ரணிலூடாக காய்களை நகர்த்துகிறது அரசாங்கம். சிறந்த பொருளியல் விவாதத்தை முன்வைத்து பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். நுகர்வுகளுக்காக கடன் பெறவில்லை, முதலீடுகளுக்காவே பெறப்படுகிறது. காப்பீட்டு நிதியாக 150 மில்லிய ன் டொலர் கிடைத்துள்ளது. இவற்றினால், நாட்டின் கடன்பத்திரங்களை சர்வதேச நாடுகள் ஏற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் பணம் இருக்கையில் காசோலை எழுதுவதுபோலதான் இது.
காப்பீட்டு நிதி கையிருப்பிலிருந்தால், கடன் பத்திரங்களை வழங்கி வௌிநாடுகளில் எரிவாயு, எண்ணெய் மற்றும் சீனி போன்ற எதையும் கொள்வனவு செய்ய முடியும். வந்ததை விற்று கடனை செலுத்துவதுடன், காப்பீட்டு நிதியை கையிருப்பாக பாதுகாக்கவும் இயலும். மேலும் 48 மாத விரிவாக்கப்பட்ட கடனாக 337 மில்லியன் டொலரையும் ரணில் கொண்டுவந்துள்ளார்.
இந்த முயற்சிகளுக்கு அரசியல் சாயம் பூசப்படுவதை ஜனாதிபதி விரும்பவில்லை. நாட்டை பொறுப்பேற்க பயந்தவர்கள், இன்று பிசாசுக் கதைகளை கூறுவதாக பாராளுமன்றத்தில் அவர் சாடியதும் இதைத்தான். ஆனால், ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் எதிரணிகளும் சந்தர்ப்ப சாயங்களைப் பூசிக்கொள்ளப் புறப்பட்டுள்ளன. அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும் என்றிருக்கையில், எவளோ பெற்ற பிள்ளைக்கு யாரோ அழுவது போலுள்ளன ரணிலின் முயற்சிகள்.
சர்வதேச நாணய நிதியத்துக்கு கட்டுப்பட்டு கடன்களை கொண்டுவருவதால் வரி, வட்டி, விலைகள் அதிகரிக்கின்றன. இந்த யதார்த்தம் அரசியல்வாதிகளுக்கு புரிந்தாலும் பாமர மக்களுக்கு புரியாமலாக்கும் முயற்சிகளே இன்றைய அரசியலாகியுள்ளன. பட்ஜட்டை எதிர்த்துப் பேசிய சில கட்சிகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாததும், மறைமுகமாக ரணிலுடன் பேசியதும் ஒரு வகை இயலாமைதான். சில வேளைகளில் மக்களே இந்த நியதிகளை உணரும் நிலை வரலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :