நாட்டில் மரணங்கள் சம்பவிக்கும்போது சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக சில பிரதேசங்களில் தேவையற்ற விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சிக்கப்படுவதை நிறுத்தி, அவர்களுக்கு நியாயம் வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நீதி அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
மரண விசாரணை அதிகாரிகள் கடந்த பல்லாண்டு காலமாக மிக பொறுப்பு வாய்ந்ததொரு காரியத்தை நிறைவேற்றி வருகிறார்கள். அவர்களை கண்காணிப்பது என்ற போர்வையில் நீதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் அவர்களுக்கு எதிராக முறையற்ற விதத்தில் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக அறியக் கிடைக்கின்றது.
இலங்கை மரண விசாரணை அதிகாரிகள் சங்கம், அதன் உறுப்பினர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் அவர்களது நிலைமையைச் சுட்டிக்காட்டியும் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை முன்வைத்தே நீதி அமைச்சரின் கவனத்திற்கு இவ்விவகாரத்தை கொண்டு வருகிறேன்.
இறந்தவரின் நோய் நிர்ணய அட்டை, மருத்துவ குறிப்புகள் மற்றும் நம்பத்தகுந்த போதிய சாட்சியங்கள் என்பன இருந்தால், கட்டாயமாக உடற்கூற்று பரிசோதனை (Postmortem) நடத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தமற்ற சடலங்களை விடுவிக்கும் அதிகாரம் மரண விசாரணை அதிகாரிகளுக்கு இருக்கின்றது.
ஆயினும், அவர்கள் சரியான முறையில் நடந்து கொள்கின்ற போதிலும் தேவையற்ற விதத்தில் குறை கண்டு அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நீதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் முயற்சிக்கின்றனர்.
பாரியதொரு பொறுப்பை நிறைவேற்றுகின்ற மரண விசாரணை அதிகாரிகளுக்கு அநீதி இழைக்காதவாறு நியாயமான ஒரு முடிவை இது விடயத்தில் மேற்கொள்ளுமாறு நீதியமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்- என்றார்.
0 comments :
Post a Comment