ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பகால போராளிகளில் ஒருவரான சகோதரர் ஏ.பி. தாசிம் அவர்கள், பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் காலத்தில் இருந்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மக்கள் மயப்படுத்துவதில் பெரும் பங்காற்றி வந்துள்ளார் என்று மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மு.கா. முக்கியஸ்தர் ஏ.பி.தாசிமின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது;
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனையை பூர்வீகமாகக் கொண்ட மர்ஹூம் தாசிம் பின்னர் பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைப் புறக் கிராமங்களில் ஒன்றான அளிஞ்சிப் பொத்தானையில் வசித்து வந்த நிலையில், அன்றைய யுத்த சூழ்நிலை காரணமாக பொலன்னறுவை, மசேனபுர கிராமத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார்.
எமது கட்சியின் அமைப்பாளராகவும் உயர்பீட உறுப்பினராகவும் இருந்து செயலாற்றி வந்த அன்னார் மக்களோடு மக்களாக புன்முறுவல் பூத்த முகத்துடன் அந்தப் பிரதேசத்தில் மட்டுமல்லாது, பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லா குக்கிராமங்களிலும் நன்கு அறியப்பட்டவராக சேவையாற்றி வந்தார்.
எங்களை சந்திக்கும் போதெல்லாம் பிரதேச மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறி, தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். குறிப்பாக பொலநறுவை மாவட்ட மற்றும் வெலிகந்த பிரதேசத்தை சூழவுள்ள கிராமங்களின் அபிவிருத்தி நடவடிக்கைளை மேற்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
அன்னாருடைய இழப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஓர் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற சுவன பாக்கியத்தை அருள்வானாக. அவரின் பிரிவினால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மன ஆறுதலையும் வழங்குவானாக- என்று மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment