செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவா செங்கடலுக்கு இலங்கை கப்பல்? -சுஐப் எம்.காசிம்



ஸ்ரேல், காஸா மோதல்கள் மத்திய கிழக்கு அரசியலில் மாத்திரமன்றி சர்வதேச அளவிலும் நெருக்கடியை திணித்திருக்கிறது. நான்கு மாதங்களாகியும் வெற்றி, தோல்விகள் நிச்சயிக்கப்படாமல் தொடரும் யுத்தம் இது. இதனால், பல கோணங்களில் பலரையும் பாதிக்கிறது. இராணுவ, பொருளாதார, மனிதாபிமான மற்றும் அரசியல் ரீதியில் இந்தளவு இது பாதிப்பை ஏற்படுத்தும் என எவரும் நினைக்கவில்லை. எவரும் நினைப்பதை அல்லது நினைக்காததை எப்படி எழுத்தில் சொல்வதென வாசகர்கள் கருதலாம். மத்தியகிழக்கிலிருந்து பல்லாயிரக்கணக்கான தூரத்திலுள்ள நாடுகள், விமானத்தில் 12 மணி நேரம் பறக்க வேண்டிய தூரத்திலுள்ள வல்லரசுகளின் கவனங்களும் இந்த யுத்தத்தின் பக்கம் திரும்பியுள்ளதே! இதை கருத்திலெடுத்துத்தான் அந்நாடுகளின் நிலைமைகளை எழுதுகிறேன்.

நாட்டின் கிழக்கு மாகாணமளவுள்ள ஒரு நிலப்பரப்பு காஸா. 23 இலட்சம் மக்கள் வாழும் இங்கு இந்த யுத்தம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கள் பல. இவ்வளவு சிறிய குட்டி நிலத்தில் எவ்வளவு பெரிய குண்டுகள் கொட்டப்படுகின்றன. வல்லரசுகளின் பலமும் தொழினுட்பத் திறனின் உச்சமும் பயன்படுத்தப்பட்டும் “காஸா என்ன லேசா?” என வல்லரசுகள் வாய்பிளக்கின்றன.

பிரதேச பின்புலம், பிராந்திய மூலை முடுக்குகளின் தெளிவு இன்னும் கெரில்லாப்பாணியிலான தாக்குதல்களுக்கு முன்னால் வல்லரசுகளின் பலம் கேள்விக்குள்ளான யுத்தங்கள் பல. இப்போது, இதே கேள்விக்குள்ளாகிறது இந்த யுத்தம். ஹமாஸின் இருப்பு இல்லாதொழிவது மத்தியகிழக்கு மன்னர்களுக்கும் மகிழ்ச்சிக்குரியதுதான். பகிரங்கமாக இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளுமளவுக்கு அங்கு நிலைமைகள் இல்லை. லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் யெமனில் ஹூதி போன்ற அமைப்புக்கள் அதிரடியாகக் களமிறங்கியுள்ளதால், பிராந்தியப் போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்படுவது மத்தியகிழக்கிலுள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நலன்களுக்கு ஆபத்து. முதலில் ஏற்படப்போவது பொருளாதாரப் பாதிப்புக்களே!
ஹமாஸுக்கு நேரடியாக உதவும் இயலுமை ஹூதிகளுக்கு இல்லை. இதனால், செங்கடல் மற்றும் பாரசீகக் கடல்களில் கெரில்லாப்பாணியிலான தாக்குதல்களை நடத்தி, இஸ்ரேலுக்கு வரும் உதவிகளைத் தடுக்கும் உபாயங்களை ஹூதி போராளிகள் கட்டவிழ்த்துள்ளனர். நிலத்தோடு தொடர்புள்ள பகுதிகளில் இஸ்ரேலைப் பின்வாங்கச் செய்ய ஹிஸ்புல்லா அமைப்பும் பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இவைகள், களநிலவரங்களை தளம்பச் செய்கின்றன. இத்தளம்பல்கள், இலங்கையையும் பாதிக்குமென அரசாங்கம் அச்சப்படுகிறது. செங்கடலூடாக வரும் சரக்குக் கப்பல்கள் தாக்கப்பட்டால் கொழும்பு துறைமுகம், இந்தியாவின் கொச்சின் துறைமுகம் பாகிஸ்தானின் லாஹுர் துறைமுகங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையலாம். இந்நிலையில், இவ்விரு நாடுகளையும் முந்திக்கொண்டு இலங்கை கடற்படையை அனுப்புவது ஏன்? அணிசேரா கொள்கையைப் பின்பற்றும் இலங்கை அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டிலா உள்ளது? உகண்டாவில் அணிசேரா மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ஹூதி அமைப்புக்கு எதிராக களமிறங்கி உள்நாட்டில் ஒரு தாக்குதலையா இலங்கை எதிர்பார்க்கிறது? 2019 தாக்குதலால் பெறப்பட்ட அரசியல் ஆதாயமா இதில் எதிர்பார்க்கப்படுகிறது? இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கப்பல்களையே ஹூதி அமைப்பினர் தாக்குகின்றனர். இலங்கைக்கு ஏன் இதில் அவசரம்? 250 மில்லியன் செலவு செய்து இப்படியொரு ஏற்பாடு எதற்கு? தமிழக மீனவர்களின் ஊடுருவலையே கட்டுப்படுத்த இயலாதுள்ள கடற்படையா ட்ரோனர் விமானங்களில் தாக்கும் ஹூதியை கட்டுப்படுத்துவது?

இவ்வாறுள்ள விமர்சனங்களுக்கு அரசாங்கம் வழங்கும் பதில்களை மக்கள் பொருட்படுத்துவதாக இல்லை. அரசியலுக்காகவல்ல. பட்டினியாலும், விலைப்பட்டியல்களாலும் அல்லலுறும் மக்கள், 250 மில்லியன் செலவாவதை விரும்பாதுள்ளனர். ‘பசி வந்தால் பத்தும் பறக்கும்’ என்பதைப்போல, செங்கடலுக்கு கப்பலை அனுப்புவதிலுள்ள யதார்த்தம் பறந்துபோய்விட்டது.

ஹூதி அமைப்பினரின் கட்டுப்பாட்டில் செங்கடல் வந்தால், நாட்டுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் தென்னாபிரிக்க வழியாக வர நேரிடும். இவ்வாறு வருவது பொருட்களின் விலைகளை அதிகரிக்கும். பொருளாதார மீட்சிக்கு சர்வதேச ஒத்துழைப்பை நாடுவதால் பூகோள அரசியலுடன் இணங்கிச்செல்ல நேரிடுகிறது என்கிறது அரசாங்கம்.

மகா பராக்கிரம பாகு மன்னனுக்குப் பின்னர் கடற்படையை அனுப்புவதில் பெருமைப்படும் ரணில், இவையெல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றைச் சிந்திக்க வேண்டும். முஸ்லிம்களின் மத உணர்வுடன் தொடர்புள்ள மோதல் இது. தேர்தல்கள் நெருங்குவதால், செங்கடல் விடயத்தில் அவதானமான காய் நகர்த்தல்களே அவசியமென ரணிலுக்கு நெருக்கமான முஸ்லிம் தலைவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஐம்பதாயிரம் பலஸ்தீனர்களை அங்கவீனர்களாக்கி, 25000 பேரைக் கொன்றொழித்து மற்றும் மூன்று இலட்சம் வீடுகளைத் தரைமட்டமாக்கியுள்ள இஸ்ரேலை பாதுகாக்காமல், இலங்கையரை பாதுகாக்கும் விடயத்தில் ரணில் கவனம் செலுத்தட்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :