திருகோணமலை - புல்மோட்டை தள வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த வைத்திய பொறுப்பதிகாரிக்கு எந்த பதிலீடுகளும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புல்மோட்டை தள வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வந்த வைத்தியர் எம்.எ.எம்.மொஹைதீனுக்கு மேற்கொள்ளப்பட்ட வருடாந்த இடமாற்றத்தில், எந்த பதிலீடுகளும் இல்லாமல் இடம்பெற்றது. இந்த இடமாற்றத்தை, நிறுத்தக்கோரி புல்மோட்டை பிரதேசத்திலுள்ள பல அமைப்புக்களும், பொதுமக்களும் இணைந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை நேற்று முன்தினம் சந்தித்து இதுதொடர்பான விடயங்கள் முன்வைத்தனர்.
குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமாகிய ஏ.முபாறக் தலைமையில், புல்மோட்டை காட்டுத்தென்னை விவசாய சம்மேளனம், புல்மோட்டை அல் - மஸ்ஜிதுல் நூறானியா பள்ளிவாசல் நிர்வாகம் உள்ளிட்ட அப்பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இச்சந்தர்ப்பத்தில், எங்களது வைத்தியாலைக்கு 7 வைத்தியர்களுக்கான வெற்றிடம் காணப்படுகின்றது. ஆனால், 3 வைத்தியர்கள் மாந்திரமே கடமை புரிந்து வருகின்றனர். இந்நிலைமையில், வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வருகின்ற வைத்தியர் எம்.எ.எம்.மொஹைதீனின் வருடாந்த இடமாற்றத்திலும், அவருக்குப் பதிலாக எந்த பதிலீடுகளும் இல்லாமல் இடம்பெற்றுள்ளது. அவரும் சென்றால் 2 வைத்தியர்கள் மாத்திரமே இருப்பார்கள். இது எங்களுக்கும் எங்கள் பிரதேசத்தில் வாழ்கின்ற 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும் செய்யும் பாரிய அநீதியாகும் என்றும் இந்த இடமாற்றத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக, வைத்தியர் எம்.எ.எம்.மொஹைதீன் கடந்த COVID-19 காலப்பகுதியில் வைத்தியர்கள் ஒருவருமே இல்லாத சந்தர்ப்பத்திலும், தன்னுயிரையும் பாராது தனியாளாக நின்று, எந்த விடுமுறையும் பெற்றுக்கொள்ளாமல் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த வைத்தியர் என்ற விடயத்தையும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், உரிய வைத்தியரின் இடமாற்றத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர்களுக்கு உத்தரவிட்டார்.
இச்சந்தர்ப்பத்தில், புல்மோட்டை காட்டுத்தென்னை விவசாய சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.அஸீஸ், அதன் செயலாளர் ஏ.எல்.அப்துல் சலாம் மற்றும் புல்மோட்டை அல் - மஸ்ஜிதுல் நூறானியா பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவர் கே.ரீ.மசூர்டீன், அதன் செயலாளர் ஐ.எம்.வசீம், புல்மோட்டை ஜம்மியத்துல் உலமாசபை கிளையின் தலைவர் எம்ஏ.சி.சலாம் மௌலவி புல்மோட்டை விவாகப் பதிவாளர் ஏ.எல்.ஏ.கலீல், புல்மோட்டை தக்வா பள்ளிவாசல் தலைவர் மஹ்றூப் அன்சார்,
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுநரின் சேவைகளைப் பாராட்டி உரிய அமைப்புக்களினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment