சிகிரியா/தம்புள்ளை மற்றும் திருகோணமலையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.-பிரசன்ன ரணதுங்க



முனீரா அபூபக்கர்-

Ø சிகிரியா/தம்புள்ளை மற்றும் திருகோணமலையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது...

Ø இத்திட்டத்தின் மொத்தச் செலவு 1045 மில்லியன் ரூபா...

Ø சிகிரியா/தம்புள்ளை 8 உப திட்டங்களும், திருகோணமலை 6 உப திட்டங்களும் அபிவிருத்தி செய்யப்படும்...

Ø சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே முக்கிய நோக்கமாகும்...


கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட சிகிரியா/தம்புள்ளை மற்றும் திருகோணமலையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிலையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அது விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பிரகாரம் ஆகும். 2019 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நாட்டில் ஏற்பட்ட கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த வருடத்தில் அந்தத் திட்டத்தை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சிகிரியா / தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் அடையாளம் காணப்பட்ட இடங்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி இதன் கீழ் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பாரிய வருமானத்தை ஈட்ட முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். திட்டத்தின் மொத்த செலவு 1045 மில்லியன் ரூபாவாகும். 320 மில்லியன் ரூபா இந்த வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டங்களை செயல்படுத்தப் பிரதான இலக்குகள் பல இருக்கின்றன. சுற்றுலாத் துறைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தொல்பொருள் நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் வருமானம் ஈட்டுதல் என்பதோடு சூழல் முகாமைத்துவம் போன்றவை அவற்றுள் அடங்கும். பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிடுவதன்படி சிகிரியா / தம்புள்ளை மற்றும் திருகோணமலை நகரங்களில் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கு உரிய பங்குதாரர்களான நிறுவனங்களுடன் இணைந்து ஏற்கனவே இது சம்பந்தமான திட்டங்கள் தயார்படுத்தப்பட்டிருக்கின்றன.

சிகிரியா சுற்றுலா வலயம் ஒன்றாக அபிவிருத்தி செய்தல் துணை செயற்திட்டங்கள் 8 இன் கீழ் செயற்படுத்தபடும். அதாவது சிகிரியா புதிய கிராமம் வாகனத் தரிப்பிடம், சுகாதார வசதிகள் மற்றும் சிகிரியா குன்றின் நுழைவு வழி வரையுமான அபிவிருத்தி, பிதுரங்கல மாபாகல தொல்பொருள் இடங்களைப் பாதுகாத்தல், களுதிய பொக்குன குட்டையை அபிவிருத்தி செய்தல், ராமகலே இலிருந்து பிதுரங்கல வரையான மரபுரிமை வீதியை அபிவிருத்தி செய்தல், சிகிரியாக் குளத்தை அபிவிருத்தி செய்தல், தகவல் மையம் ஒன்றை அமைத்தல், இனாமலுவ குளம் மற்றும் கலேவல குளத்தின் அண்மையில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், கழிவு முகாமைத்துவத் தொகுதி ஒன்றை அபிவிருத்தி செய்தல் ஆகியனவாகும்.

திருகோணமலைத் திட்டம் 6 உப திட்டங்களைக் கொண்டுள்ளது. டச்சு பே ( Dutch Bay) மற்றும் பெக் பே ( Back Bay) கடற்கரை அபிவிருத்தி, ஃபிரடெரிக் கோட்டையை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், வெந்நீரூற்றுகளில் பொது வசதிகளை அபிவிருத்தி செய்தல், மிதக்கும் உணவகம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காக்கள் மூலம் சாம்பல் தீவு மற்றும் காக்கை தீவு பகுதிகளை மேம்படுத்துதல் மற்றும் காலனித்துவ கட்டிடங்களை புனரமைப்பு செய்தல் மற்றும் திருகோணமலை துறைமுக தலைமை அலுவலக வளாகத்தின் ஆகியவை 6 அபிவிருத்தித் திட்டங்களாகும்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சிகிரியா/தம்புள்ளை, திருகோணமலை ஆகிய நகரங்களும் அவற்றைச் சூழவுள்ள பிரதேசங்களும் பிளாஸ்டிக் பாவனையற்ற சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்தப் பிரதேசங்களை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் போது உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சிகிரியா/தம்புள்ளை திட்டத்திற்கான மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திருகோணமலை திட்டத்திற்கான திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஆகியவற்றின் அனுமதி இதுவரை கிடைத்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :