ஒரு பாடசாலை நூறு கோவில்களுக்கு சமன் என்பதை நிரூபித்து காட்டியவர் அமரர் மாணிக்கவாசகம்.- மனோ கணேசன் எம்பி



ரசாங்க பாடசாலைகளில் படிக்கும் பாமர பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடுவதை போன்ற பெரும் புண்ணியம் ஏதுமில்லை. அதுவே இறைவனுக்கு ஆற்றும் பணி. அதுதான் “ஒரு பாடசாலை நூறு ஆலயங்களுக்கு சமன்” என்ற கொள்கையாகும். இந்த கொள்கையை, தனது சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரண காணியை, வத்தளை வாழ் தமிழ் பிள்ளைகளின் பாடசாலை கனவுக்காக வழங்கி, தன் வாழ்வில் செய்து காட்டி நிரூபித்த மாமனிதர் அமரர் மாணிக்கவாசகம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

வத்தளை அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயத்தில் நடைபெற்ற கல்லூரி ஸ்தாபகர் அமரர் மாணிக்கவாசகம் சிலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

சுமார் முப்பது வருடங்களாக பெரும்பான்மை அரசியல்வாதிகள் வத்தளை வாழ் தமிழ் மக்களை ஏமாற்றி வந்தார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் “உங்களுக்கு தமிழ் பாடசாலை கட்டி தருவேன்”, என்று சொல்லி வாக்குகளை வாங்கி இவர்கள் சுருட்டுவதும், அப்பாவி தமிழர்கள் ஏமாறுவதும், தொடர்ந்து நிகழ்ந்து வந்தன. இதற்கிடையில் இங்கே வத்தளையில் இன்னொரு காணியில் சில எடுபிடி தமிழர்கள் இதே மோசடி அரசியல்வாதிகளை அழைத்து சென்று பலமுறை அடிக்கல்கள் நாட்டி ஏமாற்றியதும் நடந்து வந்தது.

இவ்வேளையில்தான் இறைவனின் பிரதிநிதியாக, 2019 வருடத்தில் சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரணமுள்ள தனது சொந்த காணியை அரசுக்கு வழங்கி வத்தளையில் அரசாங்க தமிழ் பாடசாலை அமைக்க மாமனிதர் அமரர் மாணிக்கவாசகம் என்னை தொடர்புகொண்டார். மக்களின் பிரதிநிதியாக நான் பொறுப்புடன் நடந்துக்கொண்டேன் என நினைக்கிறேன். அரசாங்க தமிழ் பாடசாலை அமைக்க அரசுக்கு காணிகளை வழங்கும் போது, நாம் கவனமாக செயற்பட வேண்டும் என்பதை நல்ல மனம் கொண்ட அவரது கவனத்துக்கு நான் கொண்டு வந்தேன்.

தமிழ் பாடசாலை அமைக்க காணியை அமரர் மாணிக்கவாசகம் மனமுவந்து வழங்குவதை “சரி, சரி தாருங்கள்” என வாங்கிக்கொண்டு, கடைசியில் பெரும்பான்மை இன பாடசாலைக்கு அந்த காணியை, பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் திருப்பி விடுவார்கள். கண்டியில் இப்படிதான் ஒரு தமிழ் தனவந்தர் ஒரு காலத்தில் தமிழ் பாடசாலைக்கு வழங்கிய காணியில் இன்று சிங்கள பாடசாலை இருக்கிறது. காணியை வழங்கிய அந்த தமிழ் தனவந்தரின் பெயர்கூட, பாடசாலை காணியின் சரித்திரம் கூட இப்பொழுது அங்கே எவருக்கும் தெரியாது.

ஆகவே நாம் எச்சரிகையுடன் செயற்பட வேண்டும் என தீர்மானித்தேன். சிங்கள பிள்ளைகளுக்கும் பாடசாலை தேவைதான். ஆனால், இங்கே சிங்கள பாடசாலைகள் அநேகம் உள்ளன. எமது பிரச்சினையே, வத்தளையில் முழுமையான தமிழ் பாடசாலை இல்லவே இல்லை என்பதுதானே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்பதையும் நாம் தீர்மானித்தோம்.

அதன்பிறகு நான் ஒரு அமைச்சரவை அமைச்சராக, இது தொடர்பில் ஒரு அமைச்சரவை பத்திரம் சமர்பித்து, இந்த காணி வழங்கலை ஒரு அமைச்சரவை நடவடிக்கையாக மாற்றினேன். பாடசாலையின் பெயர், மறைந்த தனது மகனின் பெயரில் அமைய வேண்டுமென, பாசமுள்ள தந்தை அமரர் மாணிக்கவாசகம் விரும்பினார். அந்த பெயருடன் “இந்து” என்ற பெயரையும் சேர்க்க வேண்டும் என நான் விரும்பி, அவரின் அனுமதியை பெற்று, இந்த பாடசாலையில் பெயரை “அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயம்” என முடிவு செய்தோம். அத்துடன் நான் நிறுத்தவில்லை. “பாடசாலையின் ஸ்தாபகர் தினம், பாடசாலையின் ஸ்தாபகர்களாக அருண் பிரசாந் மாணிக்கவாசகம் அறக்கட்டளை” என்ற விடயங்கள் எனது அமைச்சவை பத்திரத்தில் இடம் பெற்றன.

அது மட்டும் அல்லாமல், இந்த பாடசாலை, தமிழ் இந்து பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உருவாக்கப்படுகிறது. இந்த நோக்கம் ஒருபோதும் மாற்றப்படக்கூடாது. அப்படி அது மாறுமானால், இந்த காணி, மாணிக்கவாசகம் குடும்பத்துக்கு மீள கையளிக்கப்பட வேண்டும் என்ற பிரதான நிபந்தனையையும் நான் எனது அமைச்சரவை பத்திரத்தில் இடம்பெற செய்தேன்.
ஆகவே, இந்த பாடசாலை தமிழ் இந்து பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உருவாக்கப்படுகிறது என்ற நோக்கம் எக்காலத்திலும் மாறாது. அமரர் மாணிக்கவாசகத்தின் பெயரும், நற்கொடையும் மறுக்கப்படவோ, மறைக்கப்படவோ முடியாது என்பதை இலங்கை அமைச்சரவை தீர்மானித்து விட்டது. இந்த தீர்மானங்களை இன்னொரு அமைச்சரவை தீர்மானம் மூலமாகவே மாற்ற முடியும். வேறு எவராலும் மாற்ற முடியாது. இதுதான் சட்டம்.
முப்பது வருடங்களாக வத்தளை வாழ் தமிழ் மக்களை ஏமாற்றி வந்த, அந்த பெரும்பான்மை அரசியல்வாதியும் அமைச்சரவையில் சிரேஷ்ட அமைச்சராக இருந்தார். அவர் என்னிடம் அமைச்சரவையில் முரண்பட்டார். “நான்தானே, வத்தளை எம்பி. மனோ கணேசன் ஏன் இதில் தலையிட வேண்டும்?” என கேள்வி எழுப்பினார். “முப்பது வருடங்களாக நீங்கள் சொல்லி, சொல்லி வந்து செய்யாததை, அமரர் மாணிக்கவாசகம் செய்கிறார். நான் அவருக்கு பக்க பலமாக இருக்கிறேன். இதில் நீங்கள் தலையிட வேண்டாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைக்கிறோம். வாருங்கள்” என்று நான் அவருக்கு பதில் அளித்தேன். அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எனக்கு இதில் ஆதரவு அளித்தார் என்பதையும் நான் இங்கே கூறி விட வேண்டும்.

அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து விட்டு, நான் மூன்று கோடி ரூபாய் நிதியை இந்த பாடசாலை புதிய கட்டிட கட்டுமானத்திற்காக எனது அமைச்சில் இருந்து ஒதுக்கீடும் செய்தேன். எனது ஒதுக்கீடு கல்வி அமைச்சுக்கு சென்று, புதிய கட்டிட கட்டுமான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாயின. ஆனால், 2019 இறுதியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பதவிக்கு வந்த கோதாபய அரசாங்கத்தின் முதல் நடடிக்கையாக, எனது மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு இடைநிறுத்தம் செய்யப்பட்டது. ஏழை பிள்ளைகளின் பாடசாலை நிதியில் கைவைத்த அந்த ஜனாதிபதியின் ஆட்சிக்கு என ஆனது என்பதை நாம் இன்று கண்கூடாக பார்த்தோம்.

இன்று அமரர்கள் மாணிக்கவாசகம், அருண் ஆகியோரின் பெயர்களை தாங்கி இந்த பாடசாலை இங்கே தலை நிமிர்ந்து நிற்கிறது. அமரர் மாணிக்கவாசகம் குடும்பத்தினர் தொடர்ந்தும் இந்த பாடசாலை கட்டிட நிர்மாணத்துக்கு உதவுகிறார்கள். அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள். இன்னும் தமிழ் தனவந்தர்கள் எமக்கு உதவிட வேண்டும். ஆறாம் வகுப்பு வரை இன்று இருக்கும் இந்த பாடசாலையை நான் உயர்தரம் வரை கொண்டு செல்வேன். வத்தளை பிரதேசத்தில் தமிழ் பிள்ளைகளுக்காக இந்த பாடசாலையை முழுமை பெற்ற பாடசாலையாக மாற்றி, நமது பிள்ளைகள், தமிழ் பாடசாலை இல்லை என்ற காரணத்துக்காக தாய்மொழியில் கல்வி கற்கும் வாய்ப்புகளை இழப்பதை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்துவோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :