76 வது சுதந்திர தினத்தையொட்டி மருதமுனை மஸ்ஜிதுந் நூர் ஜுமுஆப் பள்ளிவாசல் விடுக்கும் செய்தி.



நூருல் ஹுதா உமர்-
மது தாய்நாட்டின் 76வது சுதந்திர தினத்தை நாம் நினைவு கூருகின்றோம். நம் முன்னோர்கள் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நமது தாய்நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளப் பாடுபட்டனர். சுதந்திரம் பெற்று நாட்டை சமூக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வளமான நாடாக மாற்றுவதும், ஒன்றுபட்ட தேசமாக வாழ்வதும் அவர்களின் ஒரே நோக்காக இருந்தது. இதனால், ஒவ்வொரு சமூகமும் தத்தமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடிந்ததோடு நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது முழு பங்களிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் நல்கினர் என்று 76 வது சுதந்திர தினத்தையொட்டி மருதமுனை மஸ்ஜிதுந் நூர் ஜுமுஆப் பள்ளிவாசல் விடுத்திருக்கும் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த அறிக்கையில் நாம், 76 ஆண்டுகளுக்கு முன்பு காலனித்துவவாதிகளிடமிருந்து அரசியல் ரீதியாக சுதந்திரம் பெற்ற போதிலும், இனக்கலவரங்கள், உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் துருவப்படுத்தல்கள் போன்ற இன்னோரன்ன காரணிகளால் பொருளாதார ரீதியாக நிலைபெறுவதில் பாரிய சவால்களுக்கும் அறைகூவல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம். இச் சந்தர்ப்பத்தில், மதத் தலைவர்கள், சமூக அரசியற் தலைமைகள், அரச அதிகாரிகள் மற்றும் அனைத்துக் குடிமக்களும் சமூக பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒன்றிணைந்து நம்மை வளப்படுத்துவதன் மூலம் இந் நிலையை வெற்றிகொண்டு நமது நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

தாய்நாட்டை நேசிப்பதும் விசுவாசமாக இருப்பதும் ஒவ்வொரு தனிமனிதனின் தார்மீகக் கடமையாகும். நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்பதும் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உயரிய பொறுப்பாகும். இந்த அம்சங்கள் மனித இயல்பை அடிப்படையாகக் கொண்டவை மாத்திரமல்லாது மார்க்க வழிகாட்டல்களிலும் வலியுறுத்தப்பட்ட விடயமாகக் காணப்படுகின்றன.

சுயநலம், காழ்ப்புணர்ச்சி, இன மத வெறி போன்ற கயமைகள் அகன்று பரிபூரண சுதந்திரத்தைப் பெறுவதற்கான பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொள்வதோடு நாம் அனைவரும் கைகோர்த்து, அமைதியானதும் முன்மாதிரியானதுமான தேசத்தைக் கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணுவோம்.

நம் நாட்டின் அனைத்து குடிமக்களும் தமது தாய் நாட்டின் மீதும் அதனது குடிமக்கள் மீதும் தமக்குள்ள கடப்பாடுகளை உணர்ந்து அவற்றை செவ்வனே நிறைவேற்றிய நிலையில் தங்களது உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கவும், ஜனநாயக விழுமியங்களை மதித்து சட்டவாட்சி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்தவும், நாட்டில் நிலையான அமைதியும் சமாதானமும் நிலவி அனைத்து சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை மேலோங்கவும், எங்கள் தாய்நாட்டின் வளர்ச்சி, செளபாக்கியம் மற்றும் செழிப்புக்காகவும் இச் சந்தர்ப்பத்தில் இருகரமேந்திப் பிரார்த்தனை செய்கிறோம். என்று தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :