தனது தாய் நாட்டின் சுதந்திரத்தை வேண்டி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடியதற்காக அக்காலத்தில் ஏகாதிபத்தியங்களால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட முஸ்லிம் தேசபக்தர்களான திருகோணமலை சேகு தீதி, பீர்முஹம்மது மௌலவி, சலாம் உடையார் போன்றவர்களும் மட்டக்களப்பை சேர்ந்த மீரா ஹுசைன் காரியப்பர், ஹுசைன் லெப்பை உதுமா லெப்பை ஆகியோரும், அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த அபுபக்கர் ஈஸா, அனிஸ் லெப்பை ஆகியோரும் இருக்கத்தக்கதாக ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சியில் பங்கு பற்றிய தேசப்பற்றுள்ள சிங்கள பூமிபுத்திரர்களை மட்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வர்த்தமானி மூலம் ஹீரோவாக அறிவிக்கப்பட்ட மையானது அவரது நயவஞ்சக தனத்தை காட்டியது என ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், மைத்திரியின் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்களை சுதந்திர போராட்ட வீரர்களாக அறிவிக்காமை பற்றி வாய் திறக்கவில்லை. மட்டுமின்றி முஸ்லிம்களையும், முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளங்களையும், மத ஸ்தலங்களையும் பாதுகாக்கவும் அதற்காக போராடுவதற்கும் கூட அந்த அரசாங்கத்தில் இருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு துணிச்சல் இருக்கவில்லை. சுதந்திரத்தை கொண்டாடும் இன்றைய காலக்கட்டத்திலும் அரசியல் தலைவர்கள் பிளவுபட்டு, பதவிக்காக சண்டை போட்டு கொண்டுள்ளார்கள். இலங்கையை ஆட்சி செய்த பல அரசர்கள் நிலத்தை பிரித்து ஆட்சி செய்ததால் போர்த்துகீசியர்களும், டச்சுக்காரர்களும் அந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதன் காரணமாக இலங்கை மண்ணின் இறையாண்மை உடைக்கப்பட்டது. அப்படியான சந்தர்ப்பத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஏகாதிபத்தியவாதிகளான பிரித்தானியர்கள் இலங்கை மண்ணை முழுவதுமாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், ஆங்கிலேயர்களின் சிந்தனையைப்பரப்ப நினைத்தது. அன்றைய இலங்கையில் வாழ்ந்த சிங்கள, தமிழ் முஸ்லிம் சமூகத்தின் மத, அரசியல், சிவில் நடவடிக்கைகளில் ஏகாதிபத்தியவாத பிரித்தானியர் பல்வேறு சதிகளை செய்தனர்.
எனவே, தேசப்பற்றுள்ள சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகம் இவ்வாறான பலவந்தமான மத, கலாசாரப் படையெடுப்பிற்கு எதிராகப் போராடுவதற்கு பல்வேறு வழிகளில் ஒழுங்கமைக்கப்பட்டது. இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தில் மத மற்றும் சிவில் தலைவர்கள் சித்தி லெப்பை, வாப்பிச்சி மரிக்கார், ஒராபி பாஷா, மாப்பிள்ளை லெப்பை அலீம், அப்துல்லா பின் அல் பாதிப் அல் யெமன், ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் ஆகியோரும் அவர்களில் அரசியல் தலைவர்கள் டாக்டர். டி.பி. ஜாயா, சேர் ராசிக் ஃபரிட், டாக்டர் பதியுதீன் மஹ்மூத், சேர் மாக்கான் மாக்கார், என்.எச்.எம்.அப்துல் காதர், டாக்டர் எம்.சி.எம்.கலீல் மற்றும் ஏ.எம்.ஏ. அஸீஸ் இவ்வாறு சமய, சிவில், அரசியல் தலைவர்கள் விடுதலைக்காகப் போராடிய போது முஸ்லிம் சமூகத்தில் ஊடகவியலாளர்கள் முஸ்லிம் தேசம், ஞான தீபம், முஸ்லிம் பாதுகாவலன், இஸ்லாம் மித்திரன் என்ற சிந்தனைப் புரட்சியை முஸ்லிம் சமூகத்தில் விதைத்தனர்.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்நாட்டு முஸ்லிம்களின் சமய, கலாசார, அரசியல் உரிமைகளுக்காக அன்றைய கால கட்டத்தில் முஸ்லிம் சமூகத்தில் இருந்த மத, அரசியல் சிவில் தலைவர்கள் அளவற்ற தியாகங்களைச் செய்திருந்தனர். தற்போதைய அரசியல் தலைவர்கள் சிலர் தமது அரசியல் தியாகங்களை தமது அரசியல் நடைமுறைகளுக்காக பயன்படுத்தினாலும், கடந்த கால தலைவர்களுடன் ஒப்பிடுகையில், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அவர்கள் செய்த தியாகங்கள் எதுவுமில்லை. மேலும், முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாத்திற்காக அக்கால சமயத் தலைவர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் ஆங்கிலேயர்களின் உலக புவிசார் அரசியல் நலன்களுக்கான ஒப்பந்த சித்தாந்தத்தை நிறைவேற்றவில்லை மாறாக உஸ்மானிய ஆட்சியின் ஆசீர்வாதத்துடன் தான் இருந்ததே ஒளிய ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து உஸ்மானிய ஆட்சியை கவிழ்க்க சதி செய்த துரோகிகளுடன் அல்ல என்பதை இன்றைய மத தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் அன்றைய மத, சிவில், அரசியல் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களுக்காக செய்தித் தாள்களை உருவாக்கி முஸ்லிம் சமூகத்திற்கு மத, உள்ளூர், வெளிநாட்டு புவியியல் அரசியல் அறிவை வழங்கினர். ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? மாறாக அரசியல் தலைவர்கள் தமது தனிப்பட்ட அரசியல் அதிகாரத்திற்காக ஊடகவியலாளர்களைப் பயன்படுத்தியுள்ளனர். சுதந்திரத்தை வெல்வதற்காக இலங்கை தேசமாக ஒன்றிணைந்த தலைவர்கள் தற்போது அரசியல் தலைவர்களின் அதிகாரத்திற்காக பிளவுபட்டுள்ளன. மேலும் முஸ்லிம் சமூகத்தின் சில அரசியல் தலைவர்கள் பதவிக்காக முஸ்லிம்களை மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பிரித்ததால் நல்லாட்சி காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் சஹ்ரான் உட்பட சில தற்கொலை போராளிகள் பிறந்து முஸ்லிம்களிடையே துரோக தலைமுறையை உருவாக்கியுள்ளனர். இதனால் 30 வருட கொடிய போரின் போது முஸ்லிம்கள் செய்த தியாகம் கூட மாசடைந்துள்ளது.
உலகளாவிய புவிசார் அரசியல் நலன்களுக்காக முஸ்லிம்கள், முஸ்லிம்களை மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிரித்துள்ளனர் என்பதை தற்போதைய பாலஸ்தீன சுதந்திரப் போர் நமக்குக் கற்றுக் கொடுத்தது. எனவே, உலக புவியியல் மற்றும் அரசியலின் படிப்பினைகளைப் புரிந்துகொள்வதற்கு நாம் மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒன்றிணைந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதை புரிந்து கொள்ளாவிட்டால் முன்னேற நினைத்தால் பயந்து வாழ வேண்டியிருக்கும் என்பதை நினைவூட்டுகிறேன். எனவே முஸ்லிம் சமய, சிவில், அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மேற்கூறிய தேசப்பற்றுள்ள முஸ்லிம் புதல்வர்களை மாவீரர்களாக்கி 77வது சுதந்திர தினத்திற்கு முன்னராவது எமது கடமையை நிறைவேற்ற உறுதி பூண வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment