“எமது அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளராக கலாநிதி பெட்ரிக் மெக்னமாராவை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கலாநிதி மெக்னமாராவின் தலைமையின் கீழ், எமது இரு நாடுகளுக்குமிடையேயான பரிமாற்றங்கள், கல்விப் பங்காண்மைகள் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றை வளர்க்கும் ஒரு புதிய சகாப்தத்திற்குள் ஆணைக்குழு பிரவேசிக்கிறது. எல்லைகளுக்கு அப்பால் சென்று அறிஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான கல்விச் சூழலை மேம்படுத்தும் துடிப்பான அறிவுப் பரிமாற்றங்கள் ஊடாக, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே காணப்படும் மக்களுக்கிடையிலான, கல்வி மற்றும் அறிவியல் உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் ஆணைக்குழு ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் கூறினார்.
“ஃபுல்பிரைட் நிகழ்ச்சித்திட்டம் 71 ஆண்டுகளாக எமது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை கட்டமைத்து இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது. 2000 இற்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பயணம் செய்து நிகழ்ச்சித்திட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றுள்ளனர்” என ஆணைக்குழுவின் சபைத்தலைவராக இருக்கும் அமெரிக்கத் தூதரக பொது விவகாரங்களுக்கான ஆலோசகரான ஹைடி ஹட்டன்பாக் கூறினார். “உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி முதல் ஆங்கில மொழி கற்பித்தலின் காலனித்துவ நீக்கத்தை இலக்காகக் கொண்ட ஒரு ஆய்விற்கு உதவி செய்வது வரை, ஃபுல்பிரைட் மானியம் பெறுபவர்கள் வகுப்பறைக்கு அப்பாலும் நீடிக்கும் வாழ்நாள் உறவுகளை உருவாக்குகின்ற, பலரது வாழ்க்கையினை மாற்றியமைக்கின்ற கல்விப் பணிகளை மேற்கொள்கின்றனர். கலாநிதி மெக்னமாராவின் தலைமையின் கீழ், அந்த வலுவான பாரம்பரியத்தை அடித்தளமாகக் கொண்டு வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு கல்வி ஒத்துழைப்பை வளப்படுத்துவதற்கும், புரிந்துணர்வை உருவாக்குவதற்கும் ஃபுல்பிரைட் ஆணைக்குழு தயாராக இருக்கிறது.” என அவர் மேலும் கூறினார்.
“எனது வாழ்க்கையில் இந்தப் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கும், இங்குள்ள இரு-தேசிய ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் வலுவான அடித்தளத்தினை மேலும் விருத்தி செய்வதற்கும் நான் உற்சாகத்துடன் தயாராக இருக்கிறேன். இலங்கை மக்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் இடையில் புரிந்துணர்வு மற்றும் சமாதானப் பாலங்களை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம்” என கலாநிதி மெக்னமாரா கூறினார். “பல்வகைத்தன்மை, ஒற்றுமை மற்றும் பிறரை மதித்தல் போன்ற சிறந்த அமெரிக்க மற்றும் இலங்கை மதிப்பீடுகளை ஃபுல்பிரைட் நிகழ்ச்சித்திட்டம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கல்வி, கலாச்சார மற்றும் தொழில்வாண்மைப் பரிமாற்றங்கள் ஊடாக, இங்குள்ள வளமான வரலாற்றை அறிந்து கொள்வதற்காக அமெரிக்கர்களை இலங்கைக்கு அழைத்து வருவதுடன் அமெரிக்காவிலுள்ள கலாச்சாரம் மற்றும் கல்வி வாய்ப்புகளை அனுபவிப்பதற்காக இலங்கையர்களை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளராக, கலாநிதி மெக்னமாரா, கல்வி, ஆலோசனை, வணிகம் மற்றும் அரசாங்கம் ஆகிய துறைகளில் தான் பெற்றுக்கொண்ட மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட விரிவான தொழில்வாண்மை அனுபவத்தை இலங்கை-அமெரிக்க கல்வி பரிமாற்றங்களைக் கையாள்வதற்காகத் தன்னுடன் எடுத்து வருகிறார். எதிர்காலத் தலைவர்கள் மற்றும் உயர்கல்வியில் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட குழுக்களை வலுவூட்டுதல் மற்றும் எமது இரு நாடுகளிலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பல்வகைத்தன்மை கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான கருத்துப் பரிமாற்றம் மற்றும் கலாச்சார உரையாடல் ஆகியவற்றை மேம்படுத்துதல் போன்ற இலங்கையிலுள்ள ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் செயற்பணியினை முன்னெடுப்பதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் கலாநிதி மெக்னமாராவின் நிபுணத்துவம் ஒரு கருவியாகத் தொழிற்படும். ஃபுல்பிரைட்-நேரு சிரேஷ்ட புலமைப்பரிசிலைப் பெற்ற கலாநிதி மெக்னமாரா 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் விசேட சித்தியினைப் பெற்றார். இதன் போது அவர் ஒரு பிராந்திய பயண மானியத்தைப் பெற்று இலங்கைக்கும் விஜயம் செய்தார். அவர் ஒமாஹாவில் உள்ள நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகக் கல்லூரியிலிருந்து ஒரு கலாநிதிப் பட்டத்தினையும், ஜோர்ஜ் மேசன் பல்கலைக்கழகத்திலிருந்து முரண்பாட்டுப் பகுப்பாய்வு மற்றும் தீர்மானம் தொடர்பான விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும், மற்றும் ஸ்வாத்மோர் கல்லூரியிலிருந்து மதக்கற்கைகள் தொடர்பான கலை இளமானிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.
அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு: 1952ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி அமெரிக்க மற்றும் இலங்கை அரசாங்கங்களால் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. வரி செலுத்தும் அமெரிக்கக் குடிமக்களால் நிதியளிக்கப்பட்ட இவ்வாணைக்குழுவானது கல்வி, கலாச்சார மற்றும் தொழில்வாண்மைப் பரிமாற்றங்கள் ஊடாக பரஸ்பர புரிதலை ஊக்குவிக்கும் ஒரு தன்னாட்சியுடைய, இரு-தேசிய, அரசு சாரா அமைப்பாகும். பல்கலைக்கழகங்கள், வணிக, அரச, அரச சார்பற்ற மற்றும் கலை நிறுவனங்கள் ஆகியவற்றின் உயர் மட்டங்களில் பணியாற்றும் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் 2,000இற்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அமெரிக்கக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வியினைத் தொடர்வதற்கு ஊக்குவிக்கும் EducationUSA அமைப்பினையும் ஃபுல்பிரைட் ஆணைக்குழு மேற்பார்வை செய்கிறது. மேலதிக தகவல்களுக்கு http://www.fulbrightsrilanka.org எனும் இணையத்தளத்தினைப் பார்வையிடவும்.
புகைப்படம் 01: அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா.
புகைப்படம் 02: 2024 ஜனவரியில் சமுத்திரப் பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர்களுடன் உரையாடும் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா.
0 comments :
Post a Comment