ஓட்டமாவடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட ரிதிதென்ன இக்ரஃ வித்தியாலய ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச பாடசாலைளின் ஆசிரியர்களுக்கிடையில் நடைபெற்ற இக்ரஃ சம்பியன் லீக் (ICL) கிரிக்கெட் சுற்றுத் தொடரை காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய ஆசிரியர் அணி சுவீகரித்துக் கொண்டுள்ளது.
இந்த சுற்றுத் தொடர் 25, 26 ஆம் திகதிகளில் ஆசிரியர் நலன்புரி சங்க தலைவர் சட்டத்தரணி ரீ.எல்.ஏ.சக்கி தலைமையில் ரிதிதென்ன இக்ரஃ மைதானத்தில் இடம்பெற்றது.
அணிக்கு ஒன்பது பேர், ஆறு ஓவர்கள் கொண்ட இத் தொடரின் இறுதிப் போட்டியில் காவத்தமுனை அல் அமீன் ஆசிரியர் அணியும் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய ஆசிரியர் அணியும் மோதிக் கொண்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய பிறைந்துறைச்சேனை சாதுலியா அணியினர் ஆறு ஓவர்கள் முடிவில் 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காவத்தமுனை அல்-அமீன் அணினர் 5.3 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
இச் சுற்றுத் தொடரின் நாயகனாக வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலய ஆசிரியர் ஏ.எம்.அம்ஜத் தெரிவு செய்யப்பட்டார்.
சுற்றுத் தொடரின் வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக வாகரை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் பெட்டிக்கெலோ பல்கலைகழக முகாமையாளருமாகிய எஸ்.எம். தாஹிர் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக ரிதிதென்ன இக்ரஃ வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். றிஸ்மின், ஓட்டமாவடி கல்விக் கோட்ட அதிபர் சங்க தலைவர் என்.சஹாப்தீன், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஓய்வுபெற்ற கிராம சேவகர் எம்.எம்.எம். ஹனிபா, சாதுலியா வித்தியாலய அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் மற்றும் ஆசிரியர் நலன்புரி சங்க. உறுப்பினர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், உறுப்பினர்கள், அனுசரணையாளர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment