அரச நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இன்மையால் நாட்டின் அபிவிருத்தி தடைபடுகிறது. பிரசன்ன ரணதுங்க




முனீரா அபூபக்கர்-
அரச நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இன்மையால் நாட்டின் அபிவிருத்தி தடைபடுகிறது...

மத்திய அரசு, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற சபைகள் இணைந்து அபிவிருத்தி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்...

அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை உருவாக்கும் போது கிராமப்புற மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்...


அரச நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இன்மையால் நாட்டின் அபிவிருத்தி தடைபடுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார். நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டில் மத்திய அரசு, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பனவற்றுக்குமிடையிலான கூட்டு அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகல் மாவட்டச் செயலகத்தில் அண்மையில் (22) நடைபெற்ற குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை முன்வைக்கும் போது மத்திய அரசு, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் கிராமப்புற மக்களின் தேவைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக இந்த நிறுவனங்களுக்கிடையில் கூட்டு அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமானது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சில மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதில் மத்திய அரசு, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இணக்கப்பாட்டின்றி செயற்படுவதாகவும் மக்கள் பிரதிநிதிகளுக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுவதாகவும், இந்த இழுபறி காரணமாக மக்களுக்கு உரிய நன்மைகள் கிடைக்கப் பெறுவதில்லை எனவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

“மத்திய அரசு என்ன செய்கிறது என்பது மாகாண சபைக்குத் தெரியாது. மாகாண சபை என்ன செய்கிறது என்பது உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரியவில்லை. எனவே, இந்த நிறுவனங்களுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு பேணப்பட வேண்டும். இல்லை என்றால் நாட்டின் அபிவிருத்தி தடைபடும். அனைத்து திட்டங்களும் கிராமியக் குழுக்கள் மூலம் கண்டறியப்பட வேண்டும். அனைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளும் அந்த குழு மூலம் செய்யப்பட வேண்டும். கிராம அளவில் திட்டங்களைக் கண்டறிவதில் சிக்கல் இருந்தால், அதை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கவும். அங்கிருந்து தீர்வு வழங்க முடியாவிட்டால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அனுப்புங்கள். அங்கிருந்து தீர்வு கிடைக்காவிட்டால் பிரதமர் இருக்கும் தேசியக் குழுவுக்கு அனுப்புங்கள். திட்டங்களை அடையாளம் காணும் போது, ​​அவற்றை மத்திய அரசு, மாகாண சபை மற்றும் மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி அமைப்புகள் என தனித்தனியாக அடையாளம் காணவும். ஆரம்பித்த திகதி மற்றும் முடிவுத் திகதி உள்ளிட்ட திகதிகளுடன் திட்டங்களை உருவாக்கவும். அப்போதுதான் நம் அனைவருக்கும் வேலை செய்வது எளிதாக இருக்கும்." என்றும் கூறினார்.

நாட்டின் மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மலைப் பத்தாண்டு எனப்படும் பத்தாண்டு கால பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 10,000 மில்லியன் ரூபாவாகும்.

கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, களுத்துறை, பதுளை மற்றும் குருநாகல் ஆகிய 10 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குருநாகல் மாவட்டத்தின் மல்லவப்பிட்டிய, மாவத்தகம மற்றும் ரிதிகம ஆகிய 03 பிரதேச செயலாளர் பிரிவுகளின் 229 கிராம சேவகர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வாழ்வாதார மேம்பாடு, கல்வி, சுகாதாரம், மின்சாரம் மற்றும் வீடமைப்பு வசிகள் உள்ளிட்ட 10 பிரிவுகள் இத்திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் குருநாகல் மாவட்டம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இம்மாவட்டம் அளவிலும் மூன்றாவது பெரியது. வரலாற்று சிறப்பு மிக்க நகரம் என்று அழைக்கப்படும் குருநாகல் மாவட்டம், நாட்டில் நான்கு இராசதானிகள் இருந்த ஒரே மாவட்டமும் ஆகும்.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் மொத்த எண்ணிக்கை 30 ஆகும். இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான பிரதேச செயலகங்களைக் கொண்ட மாவட்டம் தற்போது பதினேழு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பொருளாதாரம் முக்கியமாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர்களான டீ.பீ. ஹேரத், சாந்த பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்சன் பெர்னாண்டோ, சுமித் உடுகும்புர, மஞ்சுளா திஸாநாயக்க, குருநாகல் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.ஆர். ரத்நாயக்க, வடமேல் மாகாண சபையின் பிரதம செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :