சித்த மருத்துவக் கல்வி
சரித்திர காலந்தொட்டு வழக்கிலிருந்து வந்துள்ள சித்த மருத்துவம் பெரும்பாலும் குரு சிஷ்ய முறைக் கல்வி மூலமே அக்காலத்தில் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது . பிற்காலங்களில் சிலர் தென்னிந்தியாவிற்குச் சென்றும் சித்த மருத்துவத்தைக் கற்று வந்தனர். சித்த மருத்துவம் கற்பதற்கென்று தனியான பாடத்திட்டங்கள் ஏதும் அக்காலத்தில் இல்லாத போதிலும் வைத்தியத்துறையில் ஈடுபடுவோர், அத்துறை சார்ந்த அறிவு மட்டுமன்றி சமூகத்திற்குப் பயன்படும் சமயம் சோதிடம் சித்தாந்த சாத்திரங்கள் முதலிய துறைகளிலும் தேர்ச்சியுடையவராய் இருத்தல் வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தனியார் ஆயுர்வேத சித்த வைத்தியக் கல்லூரி
1925 ஆம் ஆண்டு மே மாதம் வைத்தியர் ஜே. பஸ்தியாம்பிள்ளை என்பவரால் யாழ்ப்பாண நகரில் தனியார் சுதேச வைத்தியக் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டது. இதுவே இலங்கையின் நிறுவப்பட்ட முதலாவது சுதேச வைத்தியக் கல்லூரியாகும். இந்த கல்லூரியை நிறுவியது மாத்திரமில்லாமல்
மருத்துவ மாணவர்களை பயிற்றுவிக்க ஒரு வைத்தியசாலையையும் அமைத்தார். அத்துடன் இக்கல்லூரியை நிர்வகிப்பதற்கு 'வட இலங்கை சுதேச வைத்திய சபை' என்ற ஒரு சபையை அமைத்து அதற்கு சேர். வைத்திலிங்கம் துரைசாமி அவர்களைத் தலைவராகவும் நியமித்தார்.
1951 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இக்கல்லூரியை அரசாங்கம் அங்கீகாரம் செய்து அரசாங்க வர்த்தமானியில் பிரகடனஞ் செய்தது. இக்கல்லூரியில் கற்றுத் தேறிய மாணவர்களுக்கு (Diploma in Ayurvedic Medicine) DAM என்னும் பட்டம் வழங்கப்பட்டது. அதன் பயனாக இக்கல்லூரியில் சித்தியடைந்த சகல டிப்ளமோ பட்டதாரிகளும் ஆயுர்வேத திணைக்களத்தில் எவ்வித பரீட்சையுமின்றிப் பதிவு செய்யப்பட்டனர். எனினும் 1962 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1961ம் ஆண்டின் 31ம் இலக்க
ஆயுர்வேத மசோதாவினால் கல்லூரியில் சில குறைபாடுகள் இருப்பதாக குறிப்பிட்டு கல்லூரியின் அங்கீகாரம் நீக்கப்பட்டது. அதன் பிறகு இக்கல்லூரியின் டிப்ளமோ பட்டதாரிகள் பதிவு பெற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கினர்.
முகாமைத்துவ சபையிலுள்ள சில அங்கத்தவர்கள் ஆயுர்வேத ஆணையாளரை சந்தித்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக ஒப்புக்கொண்டதன் பயனாக மாணவர்களின் இறுதிப் பரீட்சையை ஆயுர்வேத திணைக்களம் நடாத்தி அதில் சித்திபெற்ற டிப்ளமோ பட்டதாரிகளுக்கு ஆயுர்வேத வைத்தியப் பதிவு அங்கீகரிக்கப்பட்டது.
கொழும்பு சுதேச மருத்துவக் கல்லூரி
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், பிரித்தானியரின் காலணித்துவ ஆட்சிக்காலத்தில் சுதேச மருத்துவ முறை வழக்கத்தில் இருந்த போதும் உள்நாட்டு மருத்துவக் கல்வியை போதிக்க எந்தவொரு தேசிய கல்லூரியும் காணப்படவில்லை. பாரம்பரிய வைத்தியத்துறை மற்றும் பாரம்பரிய வைத்தியர்களின் தொழில் நிலையைப் பாதுகாப்பதற்கு இக்காலத்தில் " சிங்கள மருத்துவ சங்கம் (1891), இலங்கை வைத்ய மகா மண்டலயா (1901), மற்றும் ஸ்ரீலங்கா சமாஜ பிரதிசன்ஸ்கரன சங்கமயா (1915) என மூன்று அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
சட்ட சபை உறுப்பினர் ( Member of Legislative council )கௌரவ கே. பாலசிங்கம் இலங்கை நிர்வாக சபைக்கு நியமிக்கப்பட்டதும் அவர்களால் சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கமைய இலங்கை சுதேச மருத்துவக் கல்லூரி 1929 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு பொரளையில் அப்போதைய சிலோனின் கவர்னர் சர் ஹெர்பர்ட் ஜேம்ஸ் ஸ்டான்லி என்பவரால் திறக்கப்பட்டது.
ஆயுர்வேத அறிவியலில் சிறந்த பயிற்சி பெற்ற இந்திய மருத்துவ சேவையின் மேற்கத்திய மருத்துவர் கேப்டன் (டாக்டர்) A.N.N பணிக்கர், புதிதாக நிறுவப்பட்ட அக்கல்லூரிக்கு அரசாங்கத்தால் அதன் முதல் முதல்வராக நியமிக்கப்பட்டார். இதேபோல், டாக்டர் எச்.எம். ஜாஃபர் மற்றும் டாக்டர் எச். அஹமத் ஆகியோரும் யுனானி மருத்துவ முறையை உருவாக்க இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டனர்.
ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே அங்கு சித்த ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகள் மூன்றும் போதிக்கப்பட்டு வருகிறது.
கௌரவ எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்கள் சுகாதார அமைச்சராகவும், சுதேச வைத்திய ஆலோசனை சபையின் தலைவராகவும், இருந்தபோது தேசிய தரத்துடன் கல்லூரியின் கற்பித்தல் தரத்தை உயர்த்துவதற்காக 1941 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சுதேச மருத்துவக் கட்டளைச் சட்டத்தை கொண்டு வந்திருந்தார்.
ஆரம்பத்தில் இக்கல்லூரி 1926 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சுதேச வைத்திய சபையால் (Board of Indigenous Medicine) பராமரிக்கப்பட்டு வந்தது .
1961 ஆம் ஆண்டு, ஆயுர்வேத சுகாதார வழங்கல் மற்றும் கல்வி முறைகளின் தரத்தை நிலைநிறுத்துவதற்காக மேலும் ஒரு நடவடிக்கையாக
1941 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சுதேச மருத்துவ கட்டளைச் சட்டத்தை ரத்து செய்து 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேத கட்டளை சட்டம் இயற்றப்பட்டது.
அதன் விளைவாக ஆயுர்வேத மருத்துவ சபை , ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாக சபை, ஆயுர்வேத ஆராய்ச்சி குழு மற்றும் ஆயுர்வேத மருந்து முறைக் குழு ஆகிய நான்கு சட்டபூர்வ வாரியங்கள் உருவாக்கப்பட்டன. கல்லூரி "உள்நாட்டு மருத்துவக் கல்லூரி" என்று பெயர் மாற்றப்பட்டு கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாக சபையின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
மேலும் 1963 ஆம் ஆண்டில், புதிய ஆயுர்வேத சட்டத்தின் கீழ் முன்னைய DIMS டிப்ளோமா பட்டம் DAMS (ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சை டிப்ளமோ) என மாற்றப்பட்டது.
ஸ்ரீமா அம்மையாரின் சுதந்திர கட்சி ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் கல்வியமைச்சராக இருந்த போது
1972 ஆம் ஆண்டின் பல்கலைக்கழகச் சட்டத்தின் இலக்கம் 1 இன் கீழ் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு மார்ச் 30, 1977 இன் 258 எண் கொண்ட அதிவிசேட அரசாங்க வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டு
1977 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி இக்கல்லூரி இலங்கைப் பல்கலைக்கழகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் ஒரு அங்கமாக மாறியது.
உயர்கல்வி அமைச்சின் ACT. No. 16 of 1978 என்ற சட்டத்தின் கீழ் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்நாட்டு மருத்துவக் கல்வி நிறுவனமாகவும் (Institute of Indigenous Medicine) பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாகவும் மாறியது.
ஐந்து வருடப்பட்டப் படிப்பும் ஒரு வருட மருத்துவமனைப் பயிற்சியும் அளிக்கப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட D. A. M. S. (Diploma in Ayurvedic Medicine and Surgery) என்னும் பட்டத்திற்கு பதிலாக BAMS (இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை)/BSMS (இளங்கலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) மற்றும் BUMS (இளங்கலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ) பட்டம் வழங்கப்பட்டது.
முதல் தொகுதி மாணவர்கள் 1983 இல் பட்டம் பெற்று வெளியேறினர் . இந்த பட்டங்கள் 26.10.1992 இல் நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வழங்கப்பட்டன .
சித்த மருத்துவர்களும், சித்த மருத்துவ பாரம்பரியமும் யாழ்ப்பாணத்தில் அதிகமிருந்ததனால் சித்த மருத்துவப் பிரிவை யாழ்ப்பாணத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கருத்தும் பலகாலமாக இருந்துவந்த
நிலையில், பொரளை உள்நாட்டு மருத்துவக் கல்வி நிறுவகத்தின் பரிபாலன சபையின் சிபார்சின் பயனாகவும் உயர்கல்வி அமைச்சின் அனுமதியுடன்
1978 ஆம் ஆண்டின் பல்கலைக்கழகச் சட்டம் இல 16 இன் பிரகாரம் 21.12.1979 வெளிவந்த அரச சிறப்பு வர்த்தமானி 67/14 மூலம் கொழும்பு பல்கலைக்கழக சித்த பிரிவு மாற்றப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டது. இருந்தபோதும் இது உடனடியாக அமுலுக்கு வராத நிலையில் 1983 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் ஏற்பட்ட கலவரங்களை அடுத்து யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்த சித்த மருத்துவ மாணவர்களும், விரிவுரையாளர்களும் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாகவும்,
1984ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி சித்த மருத்துவத்துறையானது கொழும்பு உள்நாட்டு மருத்துவக் கல்வி நிறுவகத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்தின் ஓரங்கமாகக் கைதடியில் செயற்பட ஆரம்பித்தது. எனினும் கைதடி சித்த மருத்துவத்துறையில் விரிவுரைகள் 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதியே ஆரம்பமாகின.
அன்றிலிருந்து சித்த வைத்திய பிரிவு யாழ் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக இயங்குகிறது.
மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பீடம் 2319/22 வர்த்தமானியின் அறிவித்தல் மூலம் பெப்ரவரி 13, 2023 புதன்கிழமை, பல்கலைக்கழகத்தின் 10 வது பீடமாக மார்ச் 1, 2023 முதல் பிரகடணப்படுத்தப்பட்டது.
தற்போது பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கு அமைய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு BAMS/ BUMS பட்டம் வழங்கப்படுகிறது. மேலும் பட்ட பின் படிப்பு பட்டங்களும் வழங்கப்படுகிறது.
முதுகலை திட்டங்களாக
M Phil (ஆயுர்வேதம்)
MD (AYU)- (வச்சஸ்பதி)
ஆயுர்வேதத்தில் முதுகலை டிப்ளமோ
யுனானியில் முதுகலை டிப்ளமோ ஆகியனவும் வழங்கப்படுகின்றன.
தொடரும்.....
0 comments :
Post a Comment