சேதமற்ற விட்டுக் கொடுப்புடன் அனுகும் போது எமக்கான தனியார் சட்டத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள முடியும். - தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி அஷ்ஷெய்ஹ் எம்.எச்.ஏ. முனாஸ்.



லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட உத்தேச மறுசீரமைப்பு தொடர்பான புலமைசார் செயலமர்வு நேற்று 2024.03.02ஆம் திகதி சனிக்கிழமை பீடத்தின் கேட்போர் கூடத்தில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரின் நெரிப்படுத்தலின் கீழ் பீடாதிபதி அஷ்ஷெய்ஹ் எம்.எச்.ஏ. முனாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்ஹ் எம்.எச்.ஏ. முனாஸ் அவர்கள் இவ்வாறு தனது கருத்துக்களை முன்வைத்தார்.

1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் என்பது முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து, காழி நீதிமன்ற முறைமை போன்றவற்றை நிர்வகிக்கும் தனித்துவமான ஒரு சட்டமாகும். இலங்கையில் நடைமுறையில் உள்ள தனியார் சட்டங்களில் பிரதேச அடிப்படையில் வேறுபாடுகளைக் காட்டாது இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவான அடிப்படையில் இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை இதன் சிறப்பம்சங்களில் உள்ளனவாகும். குறித்த இச்சட்டத்தில் சட்ட மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பில் காலா காலமாக பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்துள்ளன. அது இன்று இலங்கையில் எம் சமூகத்தை இரு பெரும் பிரிவுகளாக பிரித்துவிடப்பட்டிருக்கின்றது.

இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைக் கோட்பாட்டில் முஸ்லிம்கள் முரண்பட்டுக் கொள்ள முடியாது. அவ்வாறு முரண்பட்ட நிலைகள் ஏற்படுமெனில் அது எம்மை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கி விடும். ஆனால் இஸ்லாமிய சட்டவாக்கத்தில் பொதுவாக இஜ்திஹாதின் அடிப்படையில் பெறப்படும் முடிவுகள் முரண்பாட்டிற்கு உட்படுவது இஸ்லாமிய சட்டவாக்கத்தின் இயல்பான போக்குகளில் உள்ளனவாகும். இதனாலேயே நபி (ஸல்) அவர்கள் ஒரு முஜ்தஹிதின் முயற்சி அது சரியாக இருப்பினும், பிழையாக இருப்பினும் அதன்கு நன்மை உண்டு எனக் குறிப்பிட்டார்கள். இதற்கு மாற்றமாக அல்-குர்ஆனையும், ஸூன்னாவையும் ஒரே அடிப்படையில் புரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் இருந்திருக்குமெனில் மத்ஹபுகள் தோன்றி இருக்காது. அத்துடன் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் குறித்த ஒரு காலத்திற்கும் மாத்திரம் பொருத்தமான ஒன்றாக மாறி இருக்கும் என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனை ஒத்ததான இஜ்திஹாத் சார்ந்த சட்ட முரண்பாடுகளே இன்று எம்மத்தியில் குறிப்பாக முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்ட ஏற்பாடுகளிலும் தோன்றி இருக்கின்றன. இதன் பொருள் முஸ்லிம் தனியார் சட்டம் என்பது முழுவதுமாக ஷரீஆ சட்டம் என்பது அல்ல. ஆனால் ஷரீவின் சட்ட ஏற்பாடுகளையும் உள்ளடக்கியதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் சட்ட மாற்றங்களின் அடிப்படையில் அணுகும் தரப்பினரை நாம் பின்வரும் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும். முதலாவது - பாரம்பரியமாக மத்ஹபுடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அதனை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தரப்பினர். இரண்டாவது – மத்ஹபு சார்ந்த கருத்துக்களுக்ளை புறக்கணிக்காது அல்-குர்ஆன் ஸூன்னாவின் அடிப்படையில் நவீன இமாம்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மற்றய தரப்பு. இறுதியாக - இலங்கை நாட்டின் சட்டப் பிரயோகத்தில் ஒருமைப் பாட்டைக் கொண்டுவருவதற்காக (ஒரு நாடு ஒரு சட்டம்) மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்துக்களையும், நவீன சட்ட அறிஞர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாது புறக்கணிக்கும் தரப்பு. இம் மூன்றாவது தரப்பினரை நாம் முஸ்லிம் சமூகத்திற்குள்ளே காண முடியாது.

இந்நாட்டில் பிக்ஹ் சார்ந்த பிரச்சினைகளையும், சட்ட மாற்றங்களுக்கான முன்மொழிவுகளையும் பேசுவதற்கும், அது தொடர்பில் கொள்கை வகுப்பாளர்களை வழிநடாத்துவதற்குமான முழுமையான கடப்பாடு எம்மைப்போன்ற மார்க்க அறிஞர்களுக்கும், சட்ட அறிஞர்களுக்கும், கல்வியலாளர்களுக்குமே உள்ளது. ஆனால், இன்று இஸ்லாமிய சட்டம் பற்றிய புரிதல்களும், நாட்டின் சட்டம் தொடர்பில் பாண்டித்தியம் அற்ற நபர்களும் இது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதே பெரும்பான்மையான பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்குள் குறிப்பாக முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் எம்மத்தியில் முடுக்கி விடப்பட்டிருக்கும் கருத்து வேற்றுமைகளை ஒரு புள்ளியில் கொண்டுவந்து முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்காகவும், எமது சந்ததிகளின் நல்வாழ்வுக்காகவும் சமூக சிந்தனை நோக்கில் ஒவ்வொரு மார்க்க அறிஞர்களும், கல்வியியலாளர்களும், பல்கலைக்கழக சமூகமும் பணியாற்ற வேண்டிய கடப்பாடு உள்ளது. அந்தவகையில் இங்குள்ள நாம் ஒவ்வொருவரும் சிறப்பு வாய்ந்தவர்களே.

இன்றய தினம் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நாளாகும். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் இஸ்லாமிய சட்ட மற்றும் சட்டமியற்றல் பிரிவு அகில இலங்கைரீதியில் பிரசித்தி பெற்ற கல்வியலாளர்கள், மார்க்க அறிஞர்கள், பேரசிரியர்கள் என அனைவரையும் ஒன்றினைத்து உபவேந்தர் ரமீஸ் அபூபக்கரின் நெரிப்படுத்தலின் கீழ் இப் புலமைசார் செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் நாட்டின் ஏனைய சமூக மட்டங்களிலும் சகவாழ்வும், சமதானமும், நல்லினக்கமும் ஏற்பட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திற்கிறேன்.

இது ஒரு ஆரம்ப நிகழ்வு மாத்திரமே இது போன்ற தொடரான நிகழ்வுகள் கட்டங்கட்டமாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது, இது ஒரு கஷ்ட்டமான பணியாக இருப்பினும் இது போன்ற சந்திப்புக்கள் தேவையாக உள்ளன. இங்கு இச் செயலமர்வு மாலை 7.00 வரை வரையறுக்கப்பட்ட சுமார் 16 வளவாளர்கள் 3 அமர்வுகளில் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். ஏற்கனவே வளவாளர்கள் தங்களின் ஆக்கங்களை எழுத்து வடிவில் அனுப்பிவைத்துள்ளனர். இந்நிகழ்வின் ஆரம்பத்திலயே அவற்றை உங்கள் கைகளில் வழங்க உத்தேசித்திருந்த போதிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அவற்றை வழங்க முடியாதுள்ளது. இருப்பினும், வளவாளர்களின் ஆய்வு ஆக்கங்களை இங்கு பங்குபற்றுனர்களாக வந்துள்ள உங்கள் அனைவரினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு ஒரு Extended Chapter Compiling வடிவில் வெளியிட ஒத்தேசித்துள்ளோம். உண்மையில் இச் செயலமர்வு MMDA யின் பொதுவான பேசு பொருள்களான திருமண வயது, பெண்ணிண் சம்மதம், பெண்ணின் ஒப்புதல் கையெப்பம், வலியின் தேவைப்பாடு, திருமணப் பதிவு மற்றும் பெண்கள் நலன் சார்ந்த உடன்பாடின்மைகள் போன்ற தலைப்புக்களில் துறைசார்ந்த அறிஞர்கள் தெரிவு செய்யப்பட்டு இங்கு வளவாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

என்னைப் பொறுத்தமட்டில், MMDA சட்டத்தையும் ஷரீஆ சட்டத்தையும் ஒப்பீட்டு ஆய்வு செய்து ஷரீஆவின் நிழலில் ஒரு இனக்கப்பாட்டிக்குவர முடியும். பெண்ணின் சம்மதம் என்பதைச் சுற்றியே பிரதான வியாக்கியானங்களும் கருத்து ஒருமைப்பாடின்மைகளும் எழுவதைக் காணலாம். வலியின் சம்மதம், திருமண வயதெல்லை, திருமணத்திற்கான பெண்ணின் சம்மதம் பெறப்படல், பெண்ணின் ஒப்பம் ஆகிய விடயங்கள் பெண்ணின் சம்மதத்திலிருந்தே தொடங்குகின்றது. சேதமற்ற விட்டுக் கொடுப்புடன் அனுகும் போது எமக்கான தனியார் சட்டத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள முடியும். இதற்காக நாம் சார்ந்துள்ள கருத்தின் மீதான பிடிவாதப் போக்குகளை ஒதுக்கிவிட்டு நல்லதோர் முடிவை நோக்கி பயணிப்போம் எனில் இங்கு நாம் எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் முட்டுக்கட்டையை தாண்டிச் செல்ல முடியும் என்பதே எனது பரந்த பார்வையாகும். அந்தவகையில் இந்நிகழ்வுக்கு, இப்பீடத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கும் முஸ்லிம் அறிஞர்கள், பிராந்திய ஐம்மியத்துல் உலமா சபையின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், காழிமார்கள், பள்ளித் தலைவர்கள், சமூக ஆர்வளர்கள் அனைவரையும் வருக வருகவென வரவேற்றுக் கொண்டு விடைபெற்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :