இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழக ஊழியர்கள் 15% சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கும் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு அங்கமாக கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுக்கும் ஒருநாள் பணி பகிஷ்கரிப்பு மற்றும் அரசிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலையம் முன்பாக நடைபெற்றது.
இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு, இலங்கை பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை பல்கலைக்கழக நிருவாக மற்றும் நிதி உத்தியோகத்தர்கள் சங்கம், அனைத்து பல்கலைக்கழக கல்விசார் ஆதரவு ஊழியர் சங்கங்கள், அனைத்து பல்கலைக்கழக உபவிடுதிக் காப்பாளர் சங்கம், அனைத்து பல்கலைக்கழக சேவை தொழிற்சங்கம், ஐக்கிய தொழிலாளர் சங்கம், முற்போக்கு தொழிலாளர் சங்கம், இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்க பல்கலைக்கழக அதிகாரசபை மற்றும் இலங்கை பல்கலைக்கழக தகவல் தொழிநுட்பவியலாளர்கள் சங்கம் ஆகிய 10 தொழிற்சங்க அமைப்புகள் அடங்கிய கூட்டு தீர்மானத்தின் அடிப்படையில் இந்த பணிபகிஷ்கரிப்பு நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்ய முடியாத நிலையில், பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகால சம்பள மற்றும் ஏனைய கொடுப்பனவு முரண்பாடுகளை தீர்க்குமாறு பல்கலைக்கழக தொழிற்சங்கங்களால் 2016ம் ஆண்டு தொடக்கம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இக்கோரிக்கைகள் கடந்த 8 வருடங்களாக அரசினால் தொடர்ந்தும் புறக்கணிப்புச் செய்யப்படுவதைக் கண்டித்து அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் உள்ள ஊழியர்களால் இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 2024.02.20ம் திகதி இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவருக்கு சம்பள உயர்வு குறித்து அனுப்பிய கடிதத்திற்கு அரசு, கல்வியமைச்சு மற்றும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு ஆகிய உரிய நடவடிக்கை எடுக்க தவறியமை காரணமாக 2024.03.11ம் திகதிய மேற்படி கூட்டமைப்பின் கூட்டு அறிக்கையின் பிரகாரம், 2024.03.07 தொடக்கம் வாராந்தம் எழுந்த வாரியாக நாட்கள் தெரிவுசெய்து அதில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வாராந்த ரீதியான தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் பணிபகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழகங்களில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகள் குறிப்பாக மாணவர்களின் இறுதிப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதுடன் ஏனைய நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
சம்பள முரண்பாடு தீர்க்கப்படும்வரை முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல்கலைக்கழக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு, கல்வியமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பொறுபேற்க வேண்டுமென கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment