பிரித்தானிய இராணுவ வைத்தியர் ஜோன் டேவி, பாரம்பரிய மருத்துவம் மற்றும் அதன் இணைப் பிரிவுகள் உள்நாட்டு மக்களின் ஜோதிட அறிவுக்கு சமமான ஒரு பிரிவு என்றும் மேலும் பாரம்பரிய வைத்தியர்கள் மனிதனின் உடல் கூறுவியல் பற்றியும் அறுவை சிகிச்சைபற்றியும் முற்றிலும் அறியாதவர்கள், என்றும் நம்பினார்.
ஆனால் அவரது சகோதரர் சேர் ஹம்ப்ரி டேவி, ஜோன் டேவியின் கருத்தின் முடிவுகள் சரியான அறிவியல் ஆய்வுகள் மூலம் எட்டப்படவில்லை என்பதனால் ஆதாரமற்றது என்று சுட்டிக்காட்டினார்.
மேற்கத்திய மருத்துவர் டாக்டர் C. G. ஊரகொட, இலங்கையின் கரையோர மாகாணங்களை ஆட்சிசெய்த போர்த்துகீச மற்றும் டச்சு ஆட்சியின் கீழ், பாரம்பரிய மருத்துவத்திற்க்கு அச்சுறுத்தல் குறிப்பிடத்தக்கதாக இருக்கவில்லை என்றும் நாடு முழுவதையும் ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்தில் இது வேறுவிதமாக இருந்தது என்றும் குறிப்பிடுகிறார்.
மேற்கத்திய மருத்துவத்தின் நேர்மறையான அரச அனுசரணையானது ஆயுர்வேதத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பமாகவும் தொடர்ச்சியான வீழ்ச்சி அவர்களின் ஆட்சியின் இறுதி வரையும் நீடித்தது.
இருந்தபோதிலும், பாரம்பரிய வைத்தியம் அதன் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்துடன், குறிப்பாக ஆங்கிலேயர் ஆதிக்கம் குறைந்த கிராமப்புற மக்களிடையே தப்பிப்பிழைக்க முடிந்தது .
பிரிட்டிஷ் ஆட்சியினரின் மேற்கத்திய நாகரிகம் பழங்குடியினரை விட உயர்ந்தது என்று பெருமை கொண்டு அவர்களை பின்பற்றுகின்ற வெள்ளை மனநிலை கொண்ட கறுப்பு நிற வகுப்பை உருவாக்கிய போதும், சுதேச வைத்திய தொடர்பான இலக்கியங்கள் பல அழிக்கப்பட்ட போதும் சிலர் பாரம்பரிய வைத்தியத்தின் தொடர்புடையை இலக்கியங்களை பாதுக்காத்தும் வைத்திருந்தனர்.
அந்த நேரத்தில் மேற்கத்திய மருத்துவம் அதன் ஆரம்ப நிலையில் இருந்தபோதிலும், காலனித்துவவாதிகள் நம் நாட்டில் தங்கள் மருத்துவத்தை உறுதியாக நிறுவினர். இதே வேளை சுதேச வைத்தியம் அரசின் ஆதரவின்றி நிர்க்கதியாக மாறியது.
முன்னைய காலங்களில் பாரம்பரிய மருத்துவ பயிற்சியாளர்களுக்கு தனித்துவமான "குரு சிஷ்ய" பயிற்சி அளிக்கப்பட்டது. எனினும்
இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக குருகுல கல்வி அழிந்தது போலவே பாரம்பரிய வைத்திய பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட தனித்துவமான பயிற்சி அளிக்கும் முறையும் வழக்கொழிந்ததாகவும்
பயிற்சியாளர் செல்லாத நாணயத்தைப் போன்ற ஒரு நபராக மாறினர் எனவும் மரபு வைத்தியத்தை ஆதரிப்பவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும் மதங்கள் சிதைவடையாமல் பாதுகாத்ததைப் போன்று ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையான உள்ளூர் மரபுகளை கொண்ட சுதேச வைத்தியம் சுதேசிகளால் தொடர்ந்தும் பாதுகாத்து வந்ததால், அது முழுமையாக அழிவடையாமல் தப்பிப்பிழைத்தது.
1920 ஆம் ஆண்டில் பாரம்பரிய வைத்திய கல்லூரியை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு தொடர்பான எதிர்ப்பைப் பதிவுசெய்ய பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் சிலோன் கிளை ஒரு கூட்டத்தை நடாத்தி பாரம்பரிய மருத்துவப் பயிற்சிக்கு அரச அங்கீகாரம் அளிக்கும் வகையில் எதையும் அரசு செய்யக்கூடாது என ஏகோபித்த முடிவை எடுத்தது .
சுதேச வைத்தியத்தை மேம்படுத்துவதற்கான காலனித்துவ அரசாங்கத்தின் முடிவை எதிர்ப்பதில் இலங்கை மேற்கத்திய மருத்துவப் பயிற்சி பெற்ற வைத்தியர்களுக்கு மேலதிகமாக , முறைசாரா பயிற்சி பெற்ற பாரம்பரிய மருத்துவர்களில் ஒரு பகுதியினரும் , ஆயுர்வேதத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்தியாவிற்கு மாணவர்களை அனுப்பும் மருத்துவ நிதியத்தின் முன்மொழிவை எதித்தனர் என்பதுவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதே போன்ற விரோதங்கள் தொழில்முறை போட்டிகள் இன்றுவரை தொடர்வதை அவதானிக்கலாம்.
இறுதியாக, சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கமைய இலங்கை சுதேச மருத்துவக் கல்லூரி 1929 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு பொரளையில் அப்போதைய சிலோனின் கவர்னர் சர் ஹெர்பர்ட் ஜேம்ஸ் ஸ்டான்லி என்பவரால் திறக்கப்பட்டது என்பதை முன்னர் பார்த்தோம். இறுதியில் சுதேச மருத்துவம் சவால்களுக்கு மத்தியிலும் தப்பிப்பிழைக்க முடிந்தது.
தொடரும்......
0 comments :
Post a Comment