இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும்.-டாக்டர் கியாஸ் சம்சுடீன்


தொடர் 14

சாமுவேல் ஃபிஸ்க் கிரீன்:தமிழ் மொழி மூலமான மேற்கத்திய மருத்துவக் கல்வியின் முன்னோடி
(மாசசூசெட்ஸில் இருந்து மானிப்பாய் வந்த மருத்துவரின் கதை)

டாக்டர் ஜான் ஸ்கடர் (ஜேஎஸ்) 1836 இல் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி தென்னிந்தியாவிற்குச் சென்றுஇ இந்தியாவில் முதல் அமெரிக்க மிஷனரி மருத்துவர் ஆனதை தொடர்ந்து அவரது பேத்தி ஐடா ஸ்கடர் மூலம் தென்னிந்தியாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி உருவானது .

டாக்டர் ஜான் ஸ்கடர் (ஜேஎஸ்) விட்டுச்சென்ற பணி டாக்டர் வார்டினால் வட்டுக்கோட்டையில் தொடரப்பட்டது.

செமினரியின் ஆசிரியராகவும் மருத்துவராகவும் இருந்த டாக்டர் வார்டுக்கு மருத்துவ பணியில் ஈடுபடவும் நோயாளிகளைப் பராமரிப்பதற்காகவும் 1841 இல் அங்குள்ள மிஷன் கட்டிடங்களில் அறைகள் வழங்கப்பட்டன. எட்டு அல்லது பத்து பாரம்பரிய மருத்துவர்கள் அவரிடம் ஆங்கில மருத்துவப் பயிற்சி பெற்றனர்.

டாக்டர் வார்ட் 1847 இல் அமெரிக்கா திரும்பியபோது கடல் பிரயாணத்தின் இடைநடுவில் காலமானதை தொடர்ந்து, டாக்டர். சாமுவேல் ஃபிஸ்க் கிரீன்(SG), அதே வருடம் அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து இ டாக்டர் வார்டின் பணியைத் தொடர்ந்தார்.
வட்டுக்கோட்டையில் சேவை செய்த சில மாதங்களுக்குப் பிறகு மிஷனரியின் பரந்த செல்வாக்கைச் செலுத்துவதற்காக டாக்டர். கிரீன்(SG) மானிப்பாய்க்கு அனுப்பப்பட்டார்.
மானிப்பாயில் மருத்துவ பணியுடன் தமிழ் இளைஞர்களுக்கு மருத்துவ பயிற்சியும் அளிக்கத் தொடங்கிய டாக்டர் கிறீன் , இந்த பயிற்சி 'தமிழர்களிடையே மருத்துவப் பணியின் முழுத் தரத்தையும் உயர்த்தி, அறிவியலை மரியாதைக்குரிய நடைமுறையாக மாற்றியமைக்கவும், மூடநம்பிக்கையை மாற்றவும்இ முடியும்' என்று நம்பினார்.

இந்த நம்பிக்கையில் இருந்து எழுந்ததுதான்

'நன்றாகப் படித்த மருத்துவர்களைக் கொண்டு மாகாணத்தை மக்கள்மயமாக்குதல்' என்ற அவரது தொலைநோக்குப் பார்வை.

டாக்டர் சாமுவேல் கிறீனுடைய மருத்துவப் பாடத்திட்டம் அக்கால பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைப் போலவே 3 ஆண்டுகள் கொண்டது.
டாக்டர். கிரீனின் முதல் வகுப்புகள் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்பட்டன. ஆனால் மருத்துவப் பாடப்புத்தகங்களில் உள்ள ஆங்கில கலை சொற்கள் படித்த தமிழர்களுக்குக்கூட நடைமுறையில் புரியாது என்பதை அவர் விரைவில் கண்டறிந்து கொண்டார். இதனால் டாக்டர் கிரீன் தனது வகுப்புகளுக்குத் தேவையான பாடப்புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை மேற்கொண்டார்.
தமிழில் பயன்படுத்தப்படும் சொற்களைத் துல்லியமாக வரையறுக்கும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது, தமிழ் மொழியில் மருத்துவப் பெயரிடலை உருவாக்குவது, பல ஆண்டுகளாக நீடித்த ஒரு அற்புதமான பணியாகவிருந்தது . இதனுடன் நிலையான ஒரு பாடப்புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியுடன் ஒரு அத்தியாயம் மொழிபெயர்க்கப்பட்டது. 
இந்த மொழிபெயர்ப்பானது விளக்கங்கள் மற்றும் விரிவுபடுத்துதலுடன் முழுமையாக புரிந்து கொள்ளும்படி இருக்க கட்டளையிடப்பட்டு, பின்னர் அவற்றின் பிரதிகள் டாக்டர் கிரீனுடன் கவனமாக ஒப்பிட்டு, திருத்தப்பட்டு நகல் செய்யப்பட்டது.

இந்த கடினமான செயல்முறை பல ஆண்டுகளாக நீடித்தது. கூடுதல் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் நகல் எழுதுபவர்கள் பணியமர்த்தப்பட்டனர், இறுதியாக டாக்டர் கிரீன் பின்வரும் புத்தகங்களைப் பெறுவதில் வெற்றி பெற்றார்.

கிறீன் அவர்களாலும் அவர்தம் மாணவர்களினாலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வைத்திய நூல்களின் விபரம் பின்வருமாறு.

1) Cutler’s Anatomy, Physiology & Hygiene,  கற்றரின் 'அங்காதிபாதம், சுகரணவாதம், உற்பாலனம்' (உடற்கூறியல், உடலியல் மற்றும் சுகாதாரம்)

2)மவுன்செல்லின் பிரசவ வைத்தியம்(மகப்பேறியல்) 1857

2) ட்ரூட்டின் அறுவை சிகிச்சை 'இரணவைத்தியம்'1867

3) கிரேஸ் 'அங்காதிபாதம் 1872 
Gray’s Anatomy

4) கூப்பரின் 'வைத்தியாகரம்'1872 Principles and Practice of Physical Medicine by Hooper

5) வெல்சின் 'கெமிஸ்தம்'1875 Well’s Chemistry

6) டால்தனின் 'மனுஷ சுகரணம் Dalton’s Human Physiology

7) வாறிங்கின் சிகிச்சா வாகடம் 1)      Waring’s Indian Pharmacopoeia.1884

8) இந்து பதார்ந்த சாரம்1888

10)மனுஷ சுகரண கலைச்சொற்கள்1872

11) அருஞ்சொல்லகராதி1875

பணியில் அவருக்கு விசுவாசமான உதவியாளர்களாக இருந்தவர்களில் பலர் டாக்டர். கிறீனின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

கிறீன் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்ட அங்காதி பாதம் என்னும் உடற்கூறு நூல் தமிழ்நாட்டிலுள்ள அரசினர் சித்தமருத்துவக் கல்லூரிகளில் பாடநூலாக அங்கீகரிக்கப் பட்டுள்ளமையும் இங்கு கவனிக்க த்தக்கது. சித்த ஆயுர்வேத மாணவர்கள் பயன்படுத்தும் 'பரராசசேகரம்' முதலிய சித்த மருத்துவ நூல்களைப் பதிப்பித்த ஜ. பொன்னையா கிறீனின் மாணவ பரம்பரையில் வந்த ஒருவர் என்பது கூடுதல் தகவல்.

அந்த வகையில் கிறீனின் சேவை இன்றுவரை பிரயோசனமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்புகளுக்கு மேலதிகமாக, இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்புமிக்க சொற்களஞ்சியம் அச்சிடப்பட்டது. விஞ்ஞான உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பல பிரபலமான கட்டுரைகளும் துண்டுப்பிரதிகளும் வெளியிடப்பட்டன. கிறீன் மானிப்பாயில் நிறுவிய தமிழ்மொழி மூலமான வைத்தியக் கல்லூரியில் கல்வி பயில்வதற்கும் சுதேச மருத்துவர்களுக்கு கிறீன் கூடுதல் சந்தர்ப்பம் வழங்கியதுடன் அவரின் மொழி பெயர்கப்பட்ட மருத்துவ புத்தங்கங்கள் மூலம்கிறீனின் வைத்தியக் கல்லூரியில் கல்வி பயிலாத சுதேச வைத்தியர்களின் கல்வி நிலையையும் மேம்படுத்துவதாக அமைந்தது.

கிறீனின் மாணவர் C. W.  சுப்பிரமணியபிள்ளையின்
'பாலவைத்தியம்' என்னும் நூல் சித்த மருத்துவ முறைகளையும்
ஆங்கில வைத்தியமுறைகளையும் தழுவி எழுதப்பட்ட நூல் என்பது
இங்கு குறிப்பிடத்தக்கது.

டாக்டர் கிறீன் யாழ்ப்பாணத்தில் 26 வருடங்கள் தங்கியிருந்த காலத்தில், 100 மருத்துவப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

டாக்டர் கிறீனும் யாழ் போதானா வைத்திய சாலையும்.

மேலும் அப்போதைய பிரித்தானிய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், பிரெண்ட்-இன்-நீட் (ஆபத்திற்கு உதவும் நண்பன்) சொசைட்டி மூலம் யாழ் வண்ணார் பண்ணை மருத்துவமனையை நிறுவி மக்களுக்கு சேவை செய்ததுடன் அதில் வேலை செய்த வைத்தியர்கள் முழுவதுமாக மானிப்பாய் டாக்டர். கிரீன் மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து பெறப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் ஆரம்பகாலத்தில் நாட்டின் இதர பகுதிகளில் பெரிதாக வைத்தியாசலைகள் காணப்படவில்லை. மேலும் இதர பகுதிகளில் மேலைத்தேய வைத்தியம் சுதேசிகளுக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் யாழ் பிராந்தியத்தில் மிஷனரிகளால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன் விளைவாக யாழ் வைத்தியாசலையில் கூடுதலான மக்கள் சிகிச்சை பெற்றிருந்தனர்.

யாழ்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட உருவாக்கத்துடன் 1980 இல் பல்கலைக்கழக போதனா வைத்தியசாலையின் அந்தஸ்தையும் அடைந்தது.

1980 ஆம் ஆண்டு யாழ் மருத்துவ பீடம் ளுபு யின் பங்களிப்பை கௌரவித்ததுடன், தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக இறுதிப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவருக்கான 'சாமுவேல் கிறீன் நினைவுப் பரிசை' வழங்கி கௌரவித்தது.

டாக்டர் கிறீனின் நோக்கம் முழுமையாக நிறைவேறியதா ?


இல்லை என்ற பதிலே விடையாக கிடைக்கும். பட்டதாரி வைத்தியர்களின் தேவை அதிகரித்ததால் , பலர் இலங்கையின் அரச துறையில் வேலைவாய்ப்பைப் பெற்றதாலும், சிலர் இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு சென்றதாலும் உள்ளூர் மக்களின் சுகாதார தேவைகளை வழங்குவதற்காக மருத்துவர்களை பயிற்றுவிக்கும் அவரது அசல் நோக்கம் நிலைக்கவில்லை.

மருத்துவர் DR  சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் 1848 இல் மானிப்பாயில் ஆரம்பித்த மருத்துவ பீடத்தை 1873 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் திகதி அன்று வண. ஹாஸ்ரிங்ஸ் (Rev. E.P.Hastings) அடிகளாரிடம் கையளித்துவிட்டு அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன், கொழும்பில் சில வாரங்கள் தங்கியிருந்த காலத்தில் கொழும்பு மருத்துவ கல்லூரியின் முதலாவது அதிபராகவும் குடியேற்றநாட்டு சத்திர சிகிச்சை வல்லுநராகவும் விளங்கிய மருத்துவர் ஜேம்ஸ் லூஸ், மார்ச் மாதம் 27 ஆம் திகதி அன்று கிறீனுக்கு எழுதிய கடிதத்தில் மருத்துவர் கிறீனினதும் அமெரிக்க மிசனரிகளினதும் பணியைப் பின்வருமாறு பாராட்டியிருந்தார் :

' எனது உடல்நலக் குறைவு காரணமாக தங்களைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. தங்களுடையதைப் பிரதி செய்து உருவாக்கப்பட்ட எமது கொழும்பு மருத்துவமனையை தங்களுக்குச் சுற்றிக் காண்பித்திருப்பின் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். இலங்கைத் தீவின் மருத்துவக் கல்வியானது தங்களுக்கும், தங்களுக்கு முன் பணியாற்றியவர்களுக்கும் மிகவும் கடன்பட்டிருக்கிறது. தாங்கள் போலியான மருத்துவத்தின் அடித்தளத்தை அசைத்திருக்கிறீர்கள்.

இலங்கைத் தீவின் மக்களிடைய அறிவுக்கு ஏற்புடையதும் விஞ்ஞான பூர்வமானதுமான மேலைத்தேச மருத்துவத்தை அறிமுகப்படுத்தி அதனை அவர்கள் பின்பற்ற மேற்கொண்ட எமது முயற்சிகளுக்கு கடவுளுடைய கிருபை கிடைக்கும் என்று நான் திடமாக நம்புகின்றேன். தாங்கள் தமிழில் மருத்துவத்தை அறிமுகப்படுத்தி ஆற்றிய பணியானது தாங்கள் இங்கிருந்து சென்ற பின்னரும் நினைவு கூரப்படும். இந்தத் தீவின் சுதேச மக்களாகிய நாம் கிறித்துவத்தையும் நாகரிகத்தையும் விஞ்ஞானத்தையும் எம்மிடையே அறிமுகப்படுத்திய அமெரிக்க மிசனரிகளின் முயற்சிகளுக்கு கடமைப்பட்டிருக்கிறோம் '.

கிறீன் யாழ்ப்பாணத்தில் தான் மேற்கொண்ட மருத்துவப் பணி அனுபவத்தை எடின்பரோ மிசன் சங்கத்துக்கு ' மருத்துவ மறை பரப்புநர்கள் (Medical Missions) ' என்ற கட்டுரையாக வரைந்து 1874 இல் சமர்ப்பித்திருந்தார்.

மருத்துவர் கிறீனது கட்டுரை எடின்பரோ மிசனரியின் 1874 ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்த காலாண்டு இதழில் பிரசுரமாகியிருந்தது. இந்த இதழின் ஆசிரியர் பின்வரும் குறிப்பையும் வரைந்திருந்தார் :

' மருத்துவர் கிறீன் இலங்கையில் ஆற்றிய மருத்துவ மிசன் பணி போன்று மருத்துவத் தொண்டாற்றிய எந்தவொரு மிசனரியையும் நம்காலத்தில் காண முடியாது. ஐரோப்பிய மருத்துவத்தின் நன்மையை அவர்களது தாய்மொழியில் வழங்கியதுடன் மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சை நூல்களைத் தென்னிந்திய மொழியில் மொழிபெயர்த்தும், அவற்றைப் பதிப்பித்தும் பிறதேசத்தவர்களுக்கு மருத்துவத்தைக் கற்பித்தும், அவர்களை மருத்துவத் தூதர்களாக்கிய பெருந் தொண்டை கிறீனைப் போல் உலகில் எந்த மிசனரியும் செய்யவில்லை. '
இதனை அமெரிக்க மிசனரிகளுக்கு ஐக்கிய இராச்சிய மிசனரிகள் வழங்கிய பாராட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

கிறீன் குடும்பத்துடன் 1873 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி கொழும்பிலிருந்து இலண்டன் நோக்கி கப்பலில் பயணமானார்.

1873 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய Dr. கிறீன் மீண்டும் இலங்கை செல்வதாக உறுதியளித்த போதிலும், உடல்நலக்குறைவு காரணமாக அவர் அவ்வாறு செய்யவில்லை, மே 28, 1884 அன்று மாசசூசெட்ஸில் உள்ள அவரது வீட்டில் காலமானார் அவரது மறைவு யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும்.

தொடரும்....

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :