இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும். -டாக்டர் கியாஸ் சம்சுடீன்



தொடர் 18
பல்கலைக்கழக அனுமதியில் 'தரப்படுத்தல்'

ஆங்கிலேயர்களாலும் ஏனைய மிசனறிகளாலும் குடாநாடு எங்கிலும் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்களால் அதிகம் யாழ்ப்பாண மக்களே பயன்பெற்றனர்.
இந்த வழங்களை பயன்படுத்தி யாழ்ப்பாணத் தமிழ் சமூகமானது காலனித்துவக் காலகட்டத்திலிருந்து கல்விச் சமூகமாக தன்னை வடிவமைத்ததுடன் அரசதுறை வேலைவாய்ப்பை தன் வசப்படுத்திக் கொண்டது .

ஆங்கில வழிக் கல்வியில் உயர் தேர்ச்சி பெற்றிருந்ததனால்தான் இலங்கையின் காலனித்துவ வரலாற்றிலும், சுதந்திரத்தின் பின்னரும் கூட, மிக முக்கிய பதவிகளிலும் மருத்துவம், பொறியியல், சட்டம் மற்றும் சிவில் உத்தியோகத்திலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் குறிப்பிடத்தக்க நிலையிலிருந்தனர்.
1956 இல் இலங்கை நிர்வாகச் சேவையில் தமிழர்கள், 30 சதவீதமாகவும், மருத்துவம், பொறியியல், விரிவுரை போன்ற துறைகளில் அரசபணியில் 60 சதவீதமாகவும்,எழுதுவினைஞர் சேவையில் 50 சதவீதமாகவும் ஆயுதப் படையில் 40 சதவீதம் இருந்தனர். இவர்களில் மிகப் பெரும்பான்மையினர் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பை சேர்ந்தவர்கள்.

இதேவேளை தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கின் இதர பகுதிகளான மன்னார் வவுனியா முல்லைத்தீவு மற்றும் கிழக்கின் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை அத்தோடு இந்திய வம்சாவளியினரான மலையக தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் பகுதிகளான பதுளை நுவரெலியா மாத்தளை போன்ற மாவட்டங்களும் கல்வியில் பின்தங்கி இருந்தன.

1942 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழகத்தின் நுழைவு, பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை , பரீட்சை அடைவு , அத்துடன் உள்ளகத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான அவர்களின் திறன் பற்றிய நேர்முக பரீட்சை(Viva voce) மற்றும் தங்களின் கல்வியை தொடர்வதற்கான நிதி நிலைமை போன்றவற்றில் தங்கியிருந்தது. இது மேட்டுக்குடியினருக்கு சாதகமாக இருந்ததால் இதை அப்போதிருந்த அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் எதிர்க்கவில்லை.
ஆனாலும் கிழக்கிலும் மலையகத்திலும் கல்வியின் நிலைமை வேறாக இருந்தது. காலணித்துவ ஆட்சிக்காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு கல்விக்கூடங்களே கிழக்கில் நிறுவப்பட்டன . முஸ்லிம் பிரதேசங்களில் இது பூச்சியமாகவே இருந்தது.

இதனால் வடக்கின் யாழ்ப்பாணம் தவிர்ந்த இதர மாவட்டங்களும், கிழக்கு மற்றும் மலையகமும் கல்வியில் பின்தங்கி இருந்தன.

இதேவேளை கிழக்கின் கல்வியில் அதீத அக்கறை காட்டிய சுவாமி விபுலானந்தரின் அன்புக்கு பாத்திரமான V. நல்லையா மாஸ்டர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபராக இருந்தபோது

இடைத்தேர்தல் மூலம் 1944 இல் மட்டக்களப்பு வடபகுதி அரசாங்க சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும் C.W.W. கன்னங்கராவின் கல்விக் குழுவில் ஒரு அங்கத்தவராகி மட்டக்களப்பில் உயர் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் அரசாங்க கல்லூரி ஒன்றை ஸ்தாபித்து , மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் செய்தார் . மேலும் மட்டக்களப்பு பிரதேசங்கள் பூராகவும் கல்வியை அபிவிருத்தி செய்யும் ஆர்வத்தால் உந்தப்பட்டு மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை உட்பட கிராமங்கள் பூராகவும் அரசாங்க பாடசாலைகளை நிறுவினார் . மாகாணத்திற்கு ஒன்று என்று கிடைக்கப்பெற்ற மத்திய கல்லூரியை வந்தாறுமூலையில் விடுதி வசதிகளோடு , தரமுயர்த்தி கிழக்கு மாகாண பாடசாலைகளிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 5 ம் தர மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்து படிக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தினார். பிற்காலத்தில் இதை ஒரு பல்கலைக்கழகமாக்க வேண்டும் என்று அப்போதே கனவுகண்டார்.இதுவே தற்போதைய கிழக்கு பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிழக்கு மற்றும் மலையக தமிழ் பேசும் மக்களின் பல்கலைக்கழக அனுமதியில் அக்கறை கொண்ட அவர் 1944 இல் அரசாங்க சபையில் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

"கௌரவ. தும்பர உறுப்பினர் ( திரு ரத்நாயக்க ) ,அவர்களின் பெயரில் நான் பின்வரும் பிரேரணையை முன்வைக்கிறேன்:
மற்ற மாகாணங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது கண்டி மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களின் தொகை குறைவாகவே உள்ளது . இந்த இரண்டு மாகாணங்களிலும் இருந்து வரும் மாணவர்கள் நியாயமான ஒரு தரத்தை எட்டியிருந்தால் போட்டியின்றி பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்படல்வேண்டும் .( Hansard July 12 1944 - Page 1197)
உண்மையில் கல்வியில் பின்தங்கி ய மாவட்ட மாணவர்களுக்கு நிவாரணம் தரப்படவேண்டும் என்ற வேண்டுகோளை முதலில் பிரேரித்தவர் திரு V. நல்லையா MSC, MP அவர்களே. உதவி அமைச்சராகவும் சிறிது காலம் அமைச்சராகவும் பதவி வகித்த நல்லையா அவர்களை காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியலில் இருந்து ஒதுக்கியது கிழக்கு மக்களுக்கு செய்த மாபெரும் துரோகமாகும்.
இவ்வாறு பல்கலைக்கழகத்திற்கு தகுதி அடிப்படையில் தெரிவுசெய்யும் நடைமுறை 1964 வரை தொடர்ந்தது.

1953 க்கு முன்னர் பல்கலைக்கழக அனுமதிக்கு நேர்முகப் பரீட்சையில்(Viva voce ) சித்தி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.

1964 இல், பல்கலைக்கழக அனுமதிக்கான அளவுகோல்கள் மீண்டும் மாறியது. 17 வயதுக்கு மேற்பட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்ப தாரிகள் விஞ்ஞான கற்கை நேறிகளுக்கு நடைமுறைத் தேர்வில் (Practical test) சித்தியடைவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

1968 முதல் 1969 வரை பல்கலைக்கழக அனுமதிகள் க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளால் பெறப்பட்ட மொத்த புள்ளிகளின் அடிப்படையில் மட்டுமே அமைந்தன.
1970ஆம் ஆண்டில் பல்கலைக்கழக அனுமதியை நோக்கும் இடத்தில் 40.8 வீதத்தினை பொறியியல் துறைக்கும் 35% விஞ்ஞான துறைக்கும்50 வீதத்தினை மருத்துவ துறையிலும் இலங்கைத் தமிழர்கள் பெற்றிருந்தனர். ஒரு நாட்டின் சனத்தொகையில் 11 வீதத்தினை மட்டுமே கொண்டுள்ள ஒரு இனம் கல்வியில் எல்லா பிரதேசங்களிலும் சம வாய்ப்பில்லாத அந்நாட்டின் பல்கலைக்கழக அனுமதியில் இவ்வாறு அதீத இடங்களை அனுபவித்து வருவதை பெரும்பான்மை சமூகம் ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது.

கல்வியில் சமவாய்ப்புகளற்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது நாம் அறியாததும் அல்ல. இவற்றிற்கு ஒப்பானதாக பின்தங்கிய மாவட்ட ஒதுக்கீடு மற்றும் மாவட்ட ஒதுக்கீடுகளை புரிந்துகொள்ளமுடியும்.

இன்று அம்பாறை மாவட்டம் கல்வியில் முன்னேறிய மாவட்டங்களுக்கு நிகராக முன்னேறியிருப்பதை அவதானிக்கலாம். இது தரப்படுத்தல் முறை மூலமே சாத்தியமானது என்பது மறுக்கமுடியாத உண்மை.

1970 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம், விஞ்ஞான கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு மொழிவாரியான முன் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் அளவுகளின் அடிப்படையில் அனுமதிக்கும் முடிவை எடுத்தது. எடுத்துக்காட்டாக, பௌதீகவியல் விஞ்ஞானத்துக்கு, தமிழ் மாணவர்களுக்கு 204 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டபோது, சிங்கள மாணவர்களுக்கு வெறும் 183 புள்ளிகளே வேண்டப்பட்டது. பொறியியலில், தமிழ் மாணவர்களுக்கு 250 புள்ளிகள் தேவை என நிர்ணயிக்கப்பட்ட போது, சிங்களவர்களுக்கு அது வெறும் 227 ஆக அமைந்தது.மருத்துவ பீடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு குறைந்தபட்ச நுழைவு மதிப்பெண் சிங்கள மொழிக்கு 229 ஆகவும் தமிழ் மொழிக்கு 250 ஆகவும் இருந்தது. ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் குறைந்தபட்ச மதிப்பெண் அவரவர் தாய்மொழிக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டது. இந்த முறை மூலம் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட பின்தங்கிய மாவட்ட மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக முஸ்லிம் மாணவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.கடும் விமர்சனத்திற்கு உள்ளான இந்த தேர்வு முறை அடுத்த ஆண்டே கைவிடப்பட்டது.

1971 முதல் 1977 வரை க.பொ.த உயர் தரத்தில் பெற்ற புள்ளிகள் மற்றும் பரீட்சைக்கு தோற்றிய மொழி மற்றும் மாவட்ட சனத்தொகை ஆகியவற்றின் அடிப்படையில் தரப்படுத்தல் பல்கலைக்கழக அனுமதியைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்பட்டது . இந்த அனுமதி முறையானது வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை, இது சிங்கள மொழி மூலப் பரீட்சார்த்திகளுக்கு ஆதரவாக மோசடி புள்ளிகள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இருந்த போதும் வடக்கு கிழக்கு மற்றும் மலையக கல்வியில் பின் தங்கிய தமிழ் முஸ்லிம் மாணவர்களும் விவசாயிகளையும் மீனவர்களையும் அதிகமாகக் கொண்டிருந்த அம்மாந்தோட்டை மாத்தறை மொனராகலை போன்ற மாவட்ட சிங்கள மாணவர்களும் இந்த தரப்படுத்தலால் பயனடைந்தனர்.

77இல் நியமிக்கபட்ட அமைச்சரவை உப குழு கல்வியில் சலுகை பெற்ற பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தும் பரிந்துரைகளை அளித்தது.

30 % அகில இலங்கை தகுதி ஒதுக்கீடும் , 55 % மாவட்ட அடிப்படையிலான தகுதி ஒதுக்கீடு மற்றும் மீதமுள்ள 15 % கல்வியில் பின்தங்கிய மாவட்டத்திற்கு என 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

1878இற்கும் 1984 இற்கும் இடைப்பட்ட காலத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பின் தங்கிய மாவட்ட மாணவர்கள் அதிகம் பயன் பெற்றனர். 1980 ஆம் ஆண்டு யாழ் மாவட்ட மருத்துவத்திற்கான வெட்டுப்புள்ளி 260 ஆகவும் உயிரியல் விஞ்ஞானத்திற்கு 240 இருந்த போது அம்பாறையில் முறையே 198 ஆகவும் 183 ஆகவும் இருந்தது. பொதுப்படையாக பார்க்கும் போது அநீதியாக தென்பட்டாலும் அம்பாறை மாவட்டத்தில் எண்பதுகளில் விஞ்ஞானக் கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகள் இருக்கவில்லை. சமமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுகின்ற பல்கலைக்கழகங்களில் இந்த மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்ட தவறவில்லை.

மீண்டும் 1984 இல் கல்வியில் பின்தங்கிய மாவட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட 15% நீக்கப்பட்டு மாவட்ட ஒதுக்கீடு 65% ஆக உயர்த்தப்பட்டது மேலும் சிறப்பு தகுதிக்கான தேசிய ஒதுக்கீடு 30% ஆக நிர்ணயிக்கப்பட்டது.

மாவட்டங்களுக்கு இடையில் இருந்த விஞ்ஞான அறிவியல் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க எந்த முன்முயற்சியும் இல்லாமல் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது என குற்றம் சாட்டப்பட்டாலும் மாவட்டங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய தரப்படுத்தலே உதவியது எனலாம். போதியளவு விஞ்ஞான ஆசிரியர்களை உருவாக்க இதுவே காரணமாயிருந்தது.

இதற்கு எதிர்மறையாக பல்கலைக்கழகங்களில் கலை மாணவர்களின் சதவீதமும் வேகமாக அதிகரித்தது - 1942 இல் 42% இலிருந்து 1970 இல் 70% ஆக கலை மாணவர்களின் விகிதம் அதிகரித்தது.இதே நேரத்தில் கல்வியில் முன்னேறிய கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் விஞ்ஞான கல்வியின் செறிவும் காணப்பட்டது .

2001 ஆம் ஆண்டிலிருந்து Z-ஸ்கோர் மூலம் பல்கலைக்கழகம் அனுமதி தீர்மானிக்கப்படுகிறது . இது இலகுவான மற்றும் சிரமமான பாடங்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை நீக்குவதாகக் கூறப்படுகிறது. 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் உயர் தர மாணவர்கள் 4 பாடங்களை எடுக்க வேண்டியிருந்தது . 2001 இல் இது சில பாடங்களை ஒன்றிணைப்பதன் மூலம் 3 பாடமாக குறைக்கப்பட்டது. உதாரணமாக விலங்கியல் விஞ்ஞானமும் தாவரவியல் விஞ்ஞானமும் ஒன்றிணைக்கப்பட்டு உயிரியல் விஞ்ஞானம் என சுருக்கப்பட்டது. இது தவிரவும் மேலதிகமாக பொது அறிவு மற்றும் ஆங்கில அறிவு தேர்வும் சேர்க்கப்பட்டுள்ளது .

கல்வியில் தரப்படுத்தல் அமுலானதின் பின்பு அதுவரை முழு இலங்கைக்குமான உயர்கல்வி வாய்ப்புகளை தமக்குள் பங்கிட்டுக்கொண்டிருந்த கல்வியில் முன்னேறிய மாவட்டங்களான யாழ்ப்பாணம் கொழும்பு காலி கம்பஹா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் இதனால் பயன்பெற்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய ஏழு தமிழ் மாவட்டங்களும் இந்த தரப்படுத்தலை எதிர்த்தது அல்லது எதிர்க்க தூண்டப்பட்டது ஆச்சரியமான ஒன்று.

தமிழரசுக் கட்சி தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை போன்ற அமைப்புகளை உருவாக்கி இந்த தரப்படுத்தலை கடுமையாக எதிர்த்தது. தரப்படுத்தல் முறையை எதிர்ப்பதற்காக சொல்லிக்கொண்டு அதைக் கொண்டு வந்த இன்னொரு சிறுபான்மை இன கல்வியமைச்சர் பதியுதீனை இனவாத அடிப்படையில் “முக்கால் " மந்திரி மஹ்மூத் ஒழிக” என்ற கோசம் எழுப்பப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக திறப்பு விழாவுக்கு வந்த Dr பதியுதீனுக்கு எதிராக காகங்களை மின் கம்பங்களில் கட்டி தொங்கவிடப்பட்டு மேற் சொன்ன கோஷங்கள் கூறப்பட்டு இனவாத எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
'பல்கலைகழக அனுமதியில் பாகுபாடு என்ற விடயமே, யாழ்ப்பாண இளைஞர்களை களத்திலிறங்கிப் போராடச் செய்தது. அதுவே, தமிழ் ஐக்கிய முன்னணி தனிநாடு பிரிவினையைக் கோரவும் செய்தது' என பேராசிரியர் சீ.ஆர்.டீ.சில்வா குறிப்பிடுகிறார்.

இதை வேறு விதமாக கூறுவதானால் குடியரசு எதிர்ப்பு, தரப்படுத்தல் எதிர்ப்பு என்ற இரட்டைக் குழல் துப்பாக்கி மூலம்தான் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்திற்கு கால்கோளும் இடப்பட்டது எனலாம்.



தொடரும்......
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :