இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும் .-டாக்டர் கியாஸ் சம்சுடீன்





தொடர் 13
சுதேசிகளுக்கான ஆங்கில வைத்திய சேவையின் முதல் அறிமுகம் தெல்லிப்பழை, மற்றும் மானிப்பாயில்.19 ஆம் நூற்றாண்டில் கிறித்துவ மறை பரப்பும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய ராச்சிய மிஷனரிகளான சர்ச் மிஷனரி, வெஸ்லியன் மிஷனரி, பாப்டிஸ்ட் மிஷனரி, ரோமன் கத்தோலிக்க மிஷனரி ,கொஸ்பல் சொசைட்டி, பிரஸ்பைடெரின் சர்ச் அதேபோல் அமெரிக்கன் மிஷனரி 1805-1818 வரை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் பாடசாலைகளை நிறுவத் தொடங்கின. இக்காலம் 'மிஷனரிகளின் யுகம்' என வர்ணிக்கப்படுமளவிற்கு இவை இலங்கையின் கல்வி வரலாற்றை மாற்றி அமைத்தன.

இதில் 1816 இல் இலங்கை வந்திருந்த அமெரிக்க மிஷனரியினர் மாத்திரமே இலங்கையைக் கைப்பற்றி ஆட்சிசெய்த ஐக்கிய இராச்சியத்து மிஷன்களுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதவர்கள். மிஷனரிகளில் சிறந்ததும் பொருளாதார வளம் மிக்க குழுவாகவும் தனித்துவம் மிக்கதாகவும் அமெரிக்கன் மிஷனரி சொசைட்டி (American Missionary Society) பிரபல்யமாயிருந்தது.

இவர்கள் விஞ்ஞான – கணித அறிவுடன் ஏனைய பொது அறிவினையும் கல்வித்திட்டத்தில் இணைத்தனர். நூலக வசதி, தர்மப் பாடசாலை மாணவர்களுக்கு விடுதி வசதி, இலவச உணவு, உடை, நூல்கள் என்பவற்றையும் வழங்கினர். இவர்களின் அதிகளவான பாடசாலைகள் வடமாகாணத்தில் காணப்பட்டது.

வடமாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் 58 தாய் மொழி பாடசாலைகளும் உடுவிலிலும் உடுப்பிட்டியிலும் தலா 1 பெண்கள் பாடசாலையும் வட்டுக்கோட்டையில் தமிழ் மொழி மூலமான இறையியல் பயிற்சி நிறுவனத்தின் "அலோபதி மருத்துவ கல்லூரி" என மொத்தம் 61 கல்விக்கூடங்களை வைத்திருந்தனர்.

இலங்கையில் அலோபதி வைத்தியசேவையை பெருந்தோட்ட தொழிலாளிகளைத்தவிர ஏனைய சுதேசிகளுக்கு பிரித்தானியர் அறிமுகம் செய்வதற்கு சுமார் நான்கு தசாப்தங்களுக்குக்கு முன்னரே ஆங்கில வைத்தியம் யாழ்ப்பாணத்தில் அமெரிக்கன் மிசனறிகளால் அறிமுகம் செய்யப்பட்டு மக்களிடையே பிரபலப்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கை வடபகுதியில் தெல்லிப்பழை, பண்டத்தரிப்பு மற்றும் மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையூடாக முதன் முதலில் அறிமுகம் செய்ததுடன் தமிழ் மொழி மூலமான முதல் அலோபதி மருத்துவக் கல்லூரியை மானிப்பாயில் நிறுவி மேலைத்தேச மருத்துவத்தைப் போதித்து அறிமுகம் செய்த பெருமை அமெரிக்கன் மிஷனையே சாரும். மருத்துவர் கிறீனும் அவரிடம் மருத்துவம் பயின்ற தமிழர்களும் அலோபதி மருத்துவத்தை மக்களிடையே பிரபல்யப்படுத்துவதில் வெற்றிகண்டிருந்தனர் என குறிப்பிட்டுக் கூற முடியும் .

ஒரு வெளிநோயாளர் பிரிவு உட்பட மூன்று நிரந்தர வார்டுகள் கொண்ட கிறீன் வைத்தியசாலை 1855 இல் கிட்டத்தட்ட 5,500 வெளி நோயாளிகளுக்கும் 345 உள்ளக நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்திருந்தது.

அந்தவகையில் கல்வியையும் தாண்டி மருத்துவத்திலும் ஏனைய மிசனரிகளை விடவும் தனித்துவமும் சிறப்பும் வாய்ந்தவர்களாக அமெரிக்கன் மிசனரியினர் இருந்தார்கள் என்று சொல்வது மிகையில்லை .

பிரிட்டிஷ் அதிகாரிகளின் முக்கிய நோக்கம் மேற்கத்திய மருத்துவ சிகிச்சை பெற விரும்பும் தங்கள் சொந்த நாட்டினரின் ஆரோக்கியத்தையும் அவர்களுக்காக தொழில் புரியும் தோட்ட துறையினரையும் கவனிப்பதும் தங்களுடைய காலனித்துவ நலன்களை ஊக்குவிப்பதுமாகும். ஆனால் அமெரிக்க மிஷனரி அதிலிருந்து சற்று மாறுபட்டிருந்தது.

1816 இல் தெல்லிப்பழையில் ரிச்சர்ட்ஸ் மற்றும் வாரன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் பணி,டாக்டர் ஜான் ஸ்கடர் அவர்களால் பண்டத்தரிப்பு மற்றும் சாவகச்சேரியிலும் தொடர்ந்தது, பின்னர் 1834 இல் டாக்டர் நாதன் வார்டின் பராமரிப்பில் இந்த சேவை வந்தது. அடிப்படையில் ஒரு மருத்துவரான சுவிசேஷகர் டாக்டர் ஸ்கடர் அவரது உதவியாளர்களுக்கு 1832 ஆம் ஆண்டு பண்டத்தரிப்பில் அவர் கட்டிய சிறிய மருத்துவமனையில் நடைமுறை மருத்துவப் பயிற்சி வழங்கினார் . பின்னர் அவரின் இடமாற்றத்தினால் இது கைவிடப்பட்டது.ரெவரெண்ட் டாக்டர் ஜான் ஸ்கடர்: உலகின் முதல் மருத்துவ மிஷனரி என நம்பப்படுகிறார்.

டாக்டர் ஜான் ஸ்கடர் (ஜேஎஸ்) தெற்காசியாவில் மேற்கத்திய மருத்துவத்தை அறிமுகப்படுத்திய முதல் மருத்துவ மிஷனரி என்று அடிக்கடி விவரிக்கப்படுகிறார். ஜே.எஸ் 1819 டிசம்பரில் வட இலங்கைக்கு வந்து, அடுத்த ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமான பண்டதரிப்பில் ஒரு மருந்தகத்தை நிறுவி மக்களின் பல சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்தார். JS 1836 இல் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி தென்னிந்தியாவிற்குச் சென்று, இந்தியாவில் முதல் அமெரிக்க மருத்துவ மிஷனரி ஆனார். அவரைத் தொடர்ந்து ஸ்கடர் குடும்பத்தைச் சேர்ந்த பலர், அவரது பேத்தி ஐடா ஸ்கடர் மூலம் தென்னிந்தியாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவுவதில் உச்சக்கட்டத்தை அடைந்தனர்.

டாக்டர் ஜான் ஸ்கடரின் வெளியேற்றத்தை தொடர்ந்து வந்த டாக்டர் சாமுவேல் கிறீன் யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி மூலமான ஆங்கில மருத்துவ கல்லூரியை நிறுவி அலோபதி மருத்துவத்தை சுதேசிகளிடம் அறிமுகம் செய்தார்.1873இல் அவரும் இலங்கையை விட்டு வெளியேறியபின் அமெரிக்கவில் காலமானார்.

இவர்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து ஒரு 20 வருட வெற்றிடத்திற்குப் பின் மிஷனரிகளின் மீள் வருகையால் பிராந்தியத்தின் மருத்துவத்துறையின் இரண்டு எழுச்சிக்கு காரணமாக இருந்தன.

முதலாவதாக, கிறீன் வைத்தியசாலையில் சேவையாற்றிய மிஷனரி மருத்துவர்களின் துணைவியர் சிலரால் மானிப்பாயில் வில்லியம் எஃப் பியர்ஸ் தாதியர் பாடசாலை நிறுவப்பட்டது.

செவிலியர் தொழில் பெண்களுக்கு மட்டுமான தொழிலாக இருந்த காலகட்டம் அது . தாதியர் பாடசாலை ஸ்தாபிக்கப்பட்ட சரியான தேதி தெளிவாக தெரியவில்லை என்றாலும் 1890 களின் பிற்பகுதியில் அல்லது 1900 களின் முற்பகுதியில் என ஊகிக்கலாம், இது யாழ்ப்பாணத்தில் காணப்படும் தற்போதைய அரச தாதியர் பாடசாலை திறக்கப்படுவதற்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு.

1893 ஆம் ஆண்டு முதல் சில ஆண்டுகள் கிறீன் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் டாக்டர் ஸ்காட்டின் மனைவியான கனேடியரான டாக்டர் திருமதி மேரி ஸ்காட் என்பவருக்கு இந்த முயற்சிக்கான பெருமை கிடைத்தது. ஆரம்பத்தில் செவிலியராகப் பயிற்சி பெற்ற திருமதி ஸ்காட் பின்னர் மருத்துவ பயிற்சியில் சேர்ந்து மருத்துவரானார். சுகாதாரப் பராமரிப்பில் மருத்துவம் மற்றும் நர்சிங்கின் நேர்மறையான செயல்பாட்டு ஒருங்கிணைப்பின் அவசியத்தை அவரது தொலைநோக்குப் பார்வை காட்டுகிறது.

இரண்டாவது அபிவிருத்தியாக மானிப்பாய்க்கு 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இணுவிலில் மெக்லியோட் வைத்தியசாலை நிறுவப்பட்டது.

அன்றைய பழமைவாத சமூகச் சூழலால் உந்தப்பட்டு, சுகாதார வசதிகளைப் பெறுவதில் பெண்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாக 1880 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த மேரி & மார்கரெட் லீட்ச் என்ற அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் உணர்ந்தனர்.

அவர்களின் தொலைநோக்குப் பார்வையினால், பெண்களுக்குத் தனியான மருத்துவமனை தேவை என்று உணர்ந்ததால் இந்த முயற்சி ஏற்பட்டது.

பிரதான அனுசரணையாளர்களாக ரெவ் மற்றும் மிஸ்ஸஸ் மெக்லியோட் ஆகியோர் இருந்ததால் மெக்லியோட்டின் பெயரிடப்பட்ட இந்த மருத்துவமனை, முதன்மையாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையாகச் செயல்பட்டது.

தொடரும்......

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :