இலங்கையின் மருத்துவ வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும் - டாக்டர் கியாஸ் சம்சுடீன்



தொடர் 15


பிரித்தானியர் காலத்தில் கிராமப்புறங்களின் சுகாதார நிலைமை

19ம் நூற்றாண்டின் முதல் பாதியில் கல்வியைப் போலவே, மருத்துவ உதவி மற்றும் சுகாதார வசதிகளும் மோசமாகவே இருந்தன. அனைத்து மருத்துவ உதவிகளும் முக்கிய நகரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இருந்ததால் கிராமப்புறங்களில் இது மிக மோசமாக இருந்தது.

"இந்த நிலைமைக்கு நிதி ஒரு காரணமாக இருந்தாலும், உள்ளூர் மக்களே, அதன் பலன்களைப் பெற முன்வருவதில் தயக்கம் காட்டினர். பொதுவாக மேற்கத்திய முறைகளை விட தங்கள் சொந்த மருத்துவ சிகிச்சை முறைகளையே அதிகம் விரும்பினர்" என 1858 வரை கொழும்பு ஒப்சர்வர் பத்திரிகை நிறுவன தலைவராக இருந்த ஆங்கிலேயர் டாக்டர். சி. எலியட் குறிப்பிடுகிறார். மேற்கத்தேய மருத்துவரான இவர் தனியார் மருத்துவராக ஏறக்குறைய இருபத்தி இரண்டு வருடங்களைச் செலவிட்டு மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

"நாட்டு வைத்தியர்களின் அறியாமையால் சில நோய்கள் மோசமடைந்தன. மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சையின் பயனை மக்கள் அறியாதுள்ளனர் என்றும் அதன் அறிவை மக்களுக்கு அறிவுறுத்துவது தேவை" என்றும் எலியட் மேலும் வலியுறுத்தினார் .

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரசவத்தின்போது அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இலங்கையில் காணப்பட்டாலும் இது முஸ்லீம் பெண்களிடையே அதிகளவில் நிகழ்ந்தன.

"ஒரு கிறிஸ்தவ ஆண் வைத்தியர் அவர்களைத் தொடுவதை அனுமதியாததன் காரணமாக." இந்த இறப்பு விகிதம் முஸ்லீம் பெண்களிடம் அதிகம் என அவர் தெரிவித்தார்.

அதிகளவு மலாய்க்காரர்களைக் கொண்ட சிலோன் ரைபிள் படைப்பிரிவு, ராணுவ வீரர்களின் குழந்தைகளில் இருந்து, ரெஜிமென்ட்டுக்கு போதுமான ஆட்களை வழங்க முடியாமல் போனதற்கு குழந்தை பிறப்பு இறப்பு ஒரு காரணம் என்று எலியட் கூறினார்.

பத்திரிகையின் பிரதம ஆசிரியரான டாக்டர் எலியட் காய்ச்சல், பிரசவம், பாம்புக்கடி மற்றும் தடுப்பூசிகள் குறித்து சிங்களம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பல்வேறு துண்டுப்பிரசுரம் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டார். அவரது துண்டுப் பிரசுரம் யாழ்ப்பாணத்தில் உள்ள அமெரிக்க மிஷனரிகளால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

சட்ட சபையால் வாக்களிக்கப்பட்ட நிதி மூலம் பராமரிக்கப்படும் காலனியின் மருத்துவ மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நேரடி இராணுவ கண்காணிப்பில் உள்ள சிவில் மருத்துவத்துறை போதுமானதாக இருக்கவில்லை. அப்போது

மருத்துவ மற்றும் மருத்துவமனைகளின் துணை அத்தியட்சகர் டாக்டர் பெர்குசன் முதன்மை சிவில் மருத்துவ அதிகாரியாகவும் இருந்தார்.

கொழும்பு, காலி, திருகோணமலை, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள "ஆபத்தில் உதவும் நண்பன்" ( Friend -In-Need) சொசைட்டிகள் போன்ற தொண்டு நிறுவனங்களின் பணி காரணமாகவே பெரும்பாலானவர்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டன.

இந்த நிறுவனங்கள் உள்ளூர்வாசிகள் மற்றும் ஒரு சில அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுக்களால் நிர்வகிக்கப்பட்டு, பிரண்ட் இன் நீட் அமைப்பின் நிதி மற்றும் சேவைகள் மூலம் வழிநடத்தப்பட்டன.

கட்டிடங்களுக்கான நிதி உதவிக்காக அவர்கள் தனியார் சந்தாக்கள் மற்றும் அரசாங்கத்தை சார்ந்து இருக்க வேண்டியிருந்தது.

திருகோணமலையில், கடற்படை அதிகாரிகளிடமிருந்து தாராளமய பங்களிப்புகள் கிடைத்தன, கண்டியில் உள்ள போகம்பர மருத்துவமனையில், அதிக பங்களிப்பு பெருந்த் தோட்ட உரிமையாளர்களிடமிருந்து வந்தது, மேலும் கிட்டத்தட்ட 635 நோயாளிகள், முக்கியமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆண்டுதோறும் அங்கு சிகிச்சை பெற்றனர்.
பிரன்ட் இன் நீட் மருத்துவமனை(தற்போதைய Jaffna Teaching Hospital) மற்றும் அமெரிக்க மிஷனின் கிரீன் வைத்தியசாலை யாழ்ப்பாணத்தில் மருத்துவ வசதிகளை வழங்கின.

பரவலான தொற்று நோய் தாக்கமும் பிரதான காரணங்களும்

இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட காலரா மற்றும் பெரியம்மை தொற்றுநோய்களுக்கு எதிராக அரசாங்கம் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது, மேலும் தனிமைப்படுத்துதல் (Quarantine) வசதிகள் குறைவாக இருந்ததாலும் தடுப்பூசி எற்றிக்கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லாததாலும் சில ஆண்டுகளாக பரவலாக பெருந்தொற்று காணப்பட்டன . வட மாகாணத்தில் மட்டும், 1853 -1855 ஆண்டுக்கு இடையில் காலராவின் தீவிர தொற்று காரணமாக 13,753 இறப்புகள் ஏற்பட்டன.

1854 இல், பெரியம்மை நோய் தீவிரமான பரவியதால் மேல் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு வழிவகுத்தது.

அரசாங்கம் நோயை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுத்தபோதும் பெரியம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி பரவலாக இல்லாதிருந்ததாலும் தடுப்பூசி போடவோ அல்லது பெரியம்மை நோய் மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்ல மறுப்பு தெரிவித்ததன் விளைவாக நோயை கட்டுப்படுத்த முடிந்திருக்கவில்லை. முஸ்லீம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு அதிக சிரமம் இருந்தது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே தொற்றுநோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதற்குரிய பிரதான காரணமாக அவர்களுடைய வாழ்கை தரம், சுகாதார பழக்க வழக்கங்கள், தடுப்பூசி போட தயக்கம் காட்டியமை மற்றும் புதிதாக நாட்டிற்கு வருபவர்கள் நோயை இந்தியாவிலிருந்து கொண்டுவருதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
புலம்பெயர் சமூகத்தினிடையே தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக "தடுப்பூசி போடப்படாத நபர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம்" என்று தோட்ட உரிமையாளர்களிடம் அரசாங்கம் கேட்டுக் கொண்டது.
ஜூலை 1858 இல், கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் காலரா பெருந்தொற்று ஏற்பட்டது . 1,031 தீவிர தாக்கங்களில் மொத்த இறப்புகள் 635 ஆகும். ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் வந்தவர்களுக்கு மட்டுமே அடங்கும். உண்மையில் இறப்பு எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும். இதற்கிடையில் 1859 இல் கிட்டத்தட்ட 60,273 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

நிதிப் பற்றாக்குறை

அரசினால் சுகாதார நடவடிக்கைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவுமில்லை. அநேகமாக உள்ளூர் முயற்சிகளால் தொடங்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு பங்களிப்பு செய்வதே அரசின் கொள்கையாக இருந்தது. இதனால், நாட்டின் சுகாதாரத்திற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கவில்லை.

1855 முதல் 1860 வரையிலான ஐந்து ஆண்டுகளில், 6,869 பவுண்டுகள் (£) மட்டுமே மருத்துவமனைகளுக்கு நிதி உதவி மூலம் செய்யப்பட்டது. இதில், 3,000 பவுண்டுகள், கொழும்பில் புதிய சிவில் மருத்துவமனையை கட்டுவதற்கும்,கண்டி போகம்பர வைத்தியசாலைக்கு 1,998. யாழ் பாணம் 400, கம்பளை 278, திருகோணமலை, காலி, கொழும்பு பெற்றா மருத்துவமனை, மற்றும் தொழுநோய் காப்பகம் என்பவற்றிற்கு , மிகுதி தொகையும் செலவு செய்யப்பட்டது.

சுகாதார துறைக்கான சிவில் தலைமை பொறுப்பு.

அப்போதிருந்த ஆளுநர் சேர் ஹென்றி வார்ட்(1855-60) கண்டியில் உள்ள போகம்பர வைத்தியசாலைக்கு விஜயம் செய்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வரும் பரிதாபகரமான நிலைமைகளைபார்த்து அதிகாரிகளை மிகவும் கண்டித்துள்ளார்.

சுகாதார துறை திணைக்களத்தின் தலைமை அலுவலகப் பொறுப்பை இராணுவத் தலைவரின் பொறுப்பிலிருந்து சிவில் தலைமைக்கு மாற்றுவதற்குரிய தேவை அப்போது உணரப்பட்டுள்ளது.

சட்டமன்ற கவுன்சில் 1855 ஆம் ஆண்டின் நிலையான நிறுவனங்களின் அட்டவணையில் ராணுவ தலைமையிலிருந்து சிவில் தலைவராக மாறும் மாற்றத்தை பரிந்துரைத்தது.
அந்தவகையில் 1855 ஆம் ஆண்டில், டாக்டர். எலியட் சிவில் மருத்துவத்துறை முதன்மை சிவில் மருத்துவ அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்தார், ஆனால் அப்போதைய லெப்டினன்ட்-கவர்னராக இருந்த மெக்கார்த்தி அதை பரிந்துரைக்கவில்லை, ஏனெனில் எலியட்டின் கொழும்பு ஒப்சர்வருடனான அரசியல் தொடர்புகள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவராக அவர் இருந்தமை இதற்கான கரணங்களாகும்.

இராணுவம் எப்போதும் திறமையான தலைவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களை வழங்க முடியும் என்பது ஹென்றி வார்டின் நிலைப்பாடாகும்.

எலியட் 1856 ஆம் ஆண்டு இந்தப் பதவிக்கு மீண்டும் விண்ணப்பித்தார், மேலும் அந்தத் துறையானது நாட்டின் மொழிகளைப் பற்றித் தெரியாத ஒரு வயதான இராணுவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இல்லாமல், நாட்டையும் அதன் மொழிகளையும் அறிந்த ஒரு சிவில் தலைவரின் கீழ் வைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
1856 இல் எலியட் இங்கிலாந்துக்கு விஜயம் செய்தபோது, ​​வார்டு தனது முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்ததால், அவரை பரிந்துரைப்பதாக வெளியுறவுத்துறை செயலாளர் உறுதியளித்தார். எலியட் இறுதியாக 1858 இல் நியமிக்கப்பட்டார்.

இருப்பினும் அடுத்த ஆண்டில் டாக்டர். எலியட் வயிற்றுப்போக்கால் இறந்தார், அவருக்குப் பிறகு டாக்டர் சார்ஸ்லி பதவியேற்றார்.



தொடரும்........
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :