புத்தளம் மாவட்ட பிரச்சினைகள் குறித்து ஆளுநர் தலைமையில் ஆராய்வு



ஏ.எம். ஆஷிப்-
புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடலொன்று, குருநாகல் நகரில் அமைந்துள்ள மாகாண ஆளுனர் அலுவலகத்தில், வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் தலைமையில் புதன்கிழமை (29) நடைபெற்றது

இதன்போது புத்தளம் தள மருத்துவமனையின் பௌதீக மற்றும் ஆளணி வளப்பற்றாக்குறை குறித்தும், கல்வி , மருத்துவம், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் புத்தளத்துக்கான நிதி ஒதுக்கீடுகளின் குறைபாடுகள் குறித்தும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த பிரமுகர்கள், கருத்துக்களை முன்வைத்திருந்தனர்
புத்தளம் மாவட்டத்தின் தலைநகரமாக புத்தளம் நகரம் காணப்பட்ட போதிலும் நாத்தாண்டிய, சிலாபம் , மாரவில போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் புத்தளம் நகரில் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது

புத்தளம் நகர மருத்துவமனையானது புத்தளம், முந்தல், கல்பிட்டிய வரையான பிரதேசங்களில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் முப்படையினருக்கு மருத்துவ வசதிகளை வழங்குகின்ற போதிலும், புத்தளம் மருத்துவமனை ஏ தரத்திலான தள மருத்துவமனையாக இருந்தாலும் ஆதார மருத்துவமனைகளில் காணப்படும் வசதிகள் கூட அங்கு காணப்படுவதில்லை என்றும், இருதய நோய் சிகிச்சைப்பிரிவு எதுவித வசதிகளும் அற்ற சாதாரண சிறிய அறையொன்றுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கல்வித்துறை மட்டுமன்றி உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் இதே புறக்கணிப்பு தொடர்வதாகவும் ஆளுனரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு இருந்தபோதும் நிதி ஒதுக்கீடு விடயத்தில் காணப்படும் சிக்கலே இவ்வாறான பிரச்சினைகளின் அடிப்படையாக இருப்பதாக குறிப்பிட்டார். தான் கிழக்கு மாகாண முதலமைச்சராக செயற்பட்ட காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பதாகவும், மாகாண மட்ட பிரச்சினைகள் மற்றும் நிதிப் பகிர்வில் காணப்படும் குறைபாடுகளை களையும் நோக்கில் மாகாண ஆளுனர்களின் ஒன்றியம் ஒன்றை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டார்

இந்நிலையில் புத்தளம் மாவட்டத்தில் களப்பு மற்றும் சுற்றாடல் சார்ந்த சுற்றுலா செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் தான் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஆளுனர், அவ்வாறான நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு மருத்துவ வசதிகளை வழங்கக் கூடிய வகையில் புத்தளம் மருத்துவமனையின் வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :