பிள்ளையானின் முஸ்லிம் தீவிரவாத கருத்துக்களை கண்டித்து நிராகரிக்கிறேன் : ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் கண்டனம்!



நூருல் ஹுதா உமர்-
மிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவ. சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்கள் தொடர்ந்தும் பொது மேடைகளில் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற கருத்தை முன்வைத்து வருகிறார். அந்த கருத்துக்களை பொறுப்புள்ள முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகளில் ஒருவர் என்ற அடிப்படையில் முற்றாக கண்டித்து நிராகரிக்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும், தான் ஒழுங்கானவராக இருந்து கொண்டுதான் மற்றவர்களைப் பற்றி குறை கூற வேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் அவர்களின் கடந்த காலம் எப்படிப்பட்டது என்பது இந்த நாட்டுக்கு மட்டுமல்ல சர்வதேசமே அறிந்தது. தான் சார்ந்த தமிழ் சமூகத்தை கவர்ந்து சந்தர்ப்பவாத அரசியலை செய்ய இன்னொரு சகோதர சமூகத்தை நோக்கி அவதூறான கருத்துக்களை முன்வைப்பதையும், அழிக்க நினைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தொடர்ந்தும் வெளியிட்டுவரும் இவ்வாறான இனவாத கருத்துக்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த நாடு தொடர்பிலும், நாட்டின் மக்கள் தொடர்பிலும், சமூக ஒற்றுமை தொடர்பிலும் வெளிப்படையான ஒப்புவிப்புக்களை வெளிப்படுத்தி சகல இன மக்களுடனும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவரும் முஸ்லிங்களை நோக்கி பிள்ளையான் அவர்களின் இப்படியான எண்ணங்கள் உருவாகியிருப்பதை எண்ணி கவலையடைகிறேன். தமிழ் சினிமாவையும், முஸ்லிம் தீவிரவாதத்தையும் இணைத்து பேசிவருவது கேலிக்கூத்தாகவும் சிறுபிள்ளை தனமாகவும் இருக்கிறது.

அம்பாறை மாவட்டம் அதிலும் குறிப்பாக கல்முனை மாநகரில் இன விரிசலை உண்டாக்கி சகோதரத்துவத்தை சீரழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தமிழ் அரசியல்வாதிகள் செய்து வருவதையிட்டு கவலையடைகிறேன். இப்படியான தேவையற்ற கருத்துக்களை தமிழ் மக்களிடம் விதைத்து தமது அரசியல் இலாபங்களுக்காக பிரச்சாரம் செய்வதை நிறுத்திக்கொண்டு சிறுபான்மை மக்கள் ஒற்றுமையாக தமது உரிமைகளை பெற்று நிம்மதியாக வாழ வழிசமைக்கச் செய்ய சகல சிறுபான்மை அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று இன ஒற்றுமையை எப்போதும் விரும்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்தவரான நான் இதனை பொறுப்புணர்வுடன் கூறிவைக்க விரும்புகிறேன்.

அண்மையில் நடைபெற்ற இந்திய தேர்தலில் இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பில் பிரச்சாரம் செய்த இடங்களிலெல்லாம் அவர்கள் தோற்றே போனார்கள். அதனால் நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்பதை நாம் மறந்து போக கூடாது. பிள்ளையான் எம்.பி யார்? அவரின் கடந்தகாலம் எப்படியானது என்பதை மக்கள் அறிந்துவைத்துள்ளனர். இருந்தாலும் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை எல்லோரும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :