தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் முஸ்தபா தெரிவு!



பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னோடிப் பீடங்களுள் ஒன்றாகிய வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த பீடத்தின் பீடாதிபதியினைத் தெரிவு செய்வதற்காக 2024 .06.28 ஆம் திகதி அன்று இடம்பெற்ற தெரிவுப் போட்டியில் பீடத்தின் உயர் சபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் பேராசிரியர் முஸ்தபா பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அடுத்த மூன்று வருட காலப்பகுதிக்கு வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் முஸ்தபா பணியாற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா அவர்கள் மீராலெப்பை அப்துல் மஜீத், முஹம்மது இஸ்மாயில் பாத்துமத்து தம்பதியினருக்கு 1970 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் பிறந்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வியாபாரப் பொருளியலில் சிறப்புப் பட்டம் பெற்ற இவர், தனது முதுதத்துவமாணிக் கற்கையினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கலாநிதிக் கற்கையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் கற்றுத் தேறினார். பேராசிரியர் முஸ்தபா இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்காலிக பொருளியல் கட்டுரையாளர், உதவி விரிவுரையாளர், தற்காலிக விரிவுரையாளர், ஒப்பந்த அடிப்படையிலான விரிவுரையாளர், சிரேஷ்ட விரிவுரையாளர், பேராசிரியர் என பல பதவி நிலைகளினூடாக, கடந்த 25 வருடங்களாக சிறப்பான சேவையை வழங்கி வருகிறார்.

பேராசிரியர் முஸ்தபா முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் ஒரேயொரு வியாபார பொருளியல் விரிவுரையாளராக கடமையாற்றி பல பொருளியல் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருவதோடு பல்கலைக்கழக மட்டத்தில் பகுதிநேர கடமையாளராக மாணவர் நலன்புரி பிரிவின் பணிப்பாளராகவும், வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கை நெறியின் பணிப்பாளராகவும் கல்விசார் விடுதி பொறுப்பாளராகவும், விசேட தேவையுடைய மாணவர்களின் இணைப்பாளராகவும், இடர் முகாமைத்துவ இணைப்பாளராகவும், வெளிவாரி கற்கைநெறியின் இணைப்பாளராகவும், சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.

அதேவேளை, Journal of Management மற்றும் journal of Business Economics இன் பிரதான ஆசிரியராகவும், விரிவுரையாளர் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் பொருளாளராகவும், பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் நிலையத்தின் பணிப்பாளராகவும் சிறப்பாக கடமையாற்றியதோடு, முகாமைத்துவ துறையின் தலைவராகவும் கடமை ஆற்றிவந்த நிலையில் தற்போது வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் தேசிய ரீதியில் பல பல்கலைக்கழகங்களில் வருகை தரு விரிவுரையாளராக கடமை ஆற்றுவதோடு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேசிய பல்கலைக்கழக தரநிலைப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தில் ஒரு மதிப்பீட்டாளராகவும் நியமிக்கப்பட்டதோடு இலங்கை பல்கலைக்கழக பொருளியல் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.

உலகளாவிய ரீதியில் பல கல்வி ஆய்வு மாநாடுகளில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டதோடு அமெரிக்க பொருளியலாளர் சங்கம் மற்றும் உலக பொருளியலாளர் சங்கத்திலும் ஆயுட்கால உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, பேராசிரியர் முஸ்தபா இலங்கை பொருளியலாளர் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் 2019 ஆம் ஆண்டு ஆராய்ச்சிக்கான விருதில் முதலாம் இடத்தினை பெற்றதோடு வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பல சிபார்சுகளை பொருளியலளவை மூலம் ஆய்வு செய்து இலங்கையின் சுற்றுலாத்துறை கொள்கை வகுப்பாளர்களுக்கு பல சிபாரிசுகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கால தொடர் தரவுகளும்; Eviews பயன்பாடும், ஐரோப்பிய யூனியனும் GSP+ உம், சர்வதேச நாணய நிதியம், சுற்றுலா பொருளியல் ஒரு அறிமுகம், இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடு, பணவீக்கம், பொருளியல் சொற்களஞ்சியம், தென்கிழக்காசிய நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு, நிலையான அபிவிருத்தியும் சமூக பொருளாதார போக்கும், நுண்ணியல் பொருளியல், பேரினப் பொருளியல், இலங்கையின் பொருளாதார வரலாறு, வெளிநாட்டு நேரடி முதலீடு கோட்பாடுகள், சர்வதேச வர்த்தகமும் நிதியும், இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடு போன்ற பல புத்தகங்களை வெளியீடு செய்துள்ளமை இவரின் ஆளுமைக்கு எடுத்துக்காட்டாகும்.

இவர் ஆய்வுக்கட்டுரைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சமர்ப்பித்துள்ளார். ஆய்வு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐரோப்பிய நாடுகள், சீனா, மலேசியா, UAE ஜப்பான், இந்தியா போன்ற பல நாடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மட்டத்திலும் தேசிய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தி இலங்கையில் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் முதலாவது வியாபார பொருளியல் பேராசிரியராக 10.12.2019 ஆம் ஆண்டு கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா பதவியுயர்வு பெற்றார்.

பல்கலைக்கழகமொன்றில் உள்ளக ரீதியாக உள்ள பல்வேறு பதவி நிலைகளில் சிறப்பாக செயற்பட்ட ஒருவராக பேராசிரியர் முஸ்தபாவினை அடையாளப்படுத்த முடியும். அவரது அயாரத சேவைக்கு உயரிய கௌரவத்தினை அளிக்கும் வகையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரது அடைவுகளுக்கு உறுதுணையாக இருக்கும் அவரது மனைவி உம்மு பரீதா முஸ்தபாவும் பாராட்டுக்குரியவர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :