கிழக்கில் எச்.என்.டி.ஏ. ஆசிரியர் நியமனம் இழுத்தடிப்பு; தேசிய பாடசாலைகளுக்கு நியமிக்கக் கோருகிறது கிழக்கு கல்வி நிருவாக சேவை சங்கம்



சாய்ந்தமருது செய்தியாளர்-
கிழக்கு மாகாண பாடசாலைகளில் உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா (எச்.என்.டி.ஈ) ஆசிரியர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இன்னும் நியமனம் வழங்காமல் கிழக்கு மாகாண சபை இழுத்தடிப்பு செய்து வருவதால் அவர்களை கிழக்கிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு நியமிக்க கல்வி அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஏ.எல்.எம். முக்தார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை வலியுறுத்தி கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவர் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

கல்வி அமைச்சினால் போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு, கிழக்கு மாகாண சபை பாடசாலைகளுக்கு நியமனம் செய்வதற்காக தெரிவானோரின் 60 பேர் கொண்ட பெயர்ப் பட்டியல் ஜூலை 03 ஆம் திகதி கிழக்கு மாகாண சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.


ஆனால் ஒரு மாத காலமாகியும் அந்த ஆசிரியர் நியமனம் கிழக்கு மாகாண சபையினால் இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது.

எனினும் இதுபோல் ஏனைய மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெயர் பட்டியலுக்கு அமைவாக குறித்த ஆசிரியர் நியமனங்கள் கடந்த 08 ஆம் திகதி வழங்கப்பட்டு விட்டது.

எனினும் கிழக்கு மாகாண சபையானது ஒரு மாத காலமாகியும் உரியவர்களுக்கு இந்த ஆசிரியர் நியமனங்களை வழங்காமல் பல்வேறு சாக்குப் போக்குகளை கூறி காலம் கடத்தி வருகிறது.

இதனால் நியமனத்திற்காக காத்திருக்கும் 60 வேலையற்ற ஆங்கில டிப்ளோமாதாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரச தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் அவர்களது அடிப்படை மனித உரிமை கிழக்கு மாகாண சபை அதிகாரிகளால் மீறப்படுகின்றது.

இது தொடர்பாக கடந்த 24 ஆம் திகதி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சின் மேலதிக செயலாளர் அமல் எதிரிசூரிய ஆகியோரை தாம் நேரடியாக சந்தித்து கலந்துரையாடினோம். அதன்போது இவர்களது ஆசிரியர் நியமனம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டதுடன் கிழக்கு மாகாண அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

எனவே, கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலை கல்வி அமைச்சு உடனடியாக மீளப்பெற்று அவர்களை தேசிய பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மகஜரில் வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு வட மாகாணத்தில் நியமனம் வழங்கப்படாதிருந்த 13 பேருக்குரிய நியமனம் தேசிய பாடசாலைகளுக்கு மாற்றி வழங்கப்பட்டுள்ளதை முன்னுதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளோம்- என்றார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :