எங்களின் சகோதர இனமான கிறிஸ்தவ சமூகம் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதற்கு இந்த இலங்கையில் வாழும் அனைத்து அரசியல் தலைமைகளும், அன்றைய ஆளும்தரப்பாக இருந்து இப்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றவர்களும் கூட பொறுப்புக்கூற வேண்டும். இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாச அந்த காலத்தில் ஆளும் தரப்பில் ஒரு அமைச்சர். இன்று ஜனாதிபதி வேட்பாளராக இருந்து கொண்டு நீதியை நிலைநாட்டப் போவதாக கூறும் அவர் உட்பட பொறுப்பு கூற வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். ஆகவே அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைவர் அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார்.
ஜனாதிபதியை ஆதரித்து அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாங்கள் ஜனாதிபதியுடன் செய்த ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளில் நாங்கள் கேட்டுக் கொண்ட விடயம் என்ன என்றால், எதிர்வரும் காலங்களில் இன,மத பேதமற்ற அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தையும் அதற்கான கள நிலைமையும் ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதியை கேட்டுக் கொண்டோம். கடந்த காலங்களில் சில அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு நாட்டில் பல அசம்பாவிதங்கள் நடத்தப்பட்டது.
ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியை பொறுத்தவரையில் ஏனைய கட்சிகளைப் போன்று சமூக விடயங்களை மழுங்கடித்து நாட்டை சீரழிப்பது போன்றில்லாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு பேச்சுவார்த்தைகளை செய்வதற்கு தான் எங்களுடைய கட்சி ஜனாதிபதியின் தரப்பில் ஆதரவாக இருக்கிறது. அதுபோல மக்களின் நிலப் பிரச்சினைகள் சம்பந்தமாக ஜனாதிபதியிடம் பேசியிருக்கிறோம்.
அதேபோன்று அனைத்து சமூகத்தினரும் நிர்வாக ரீதியில் கட்டமைப்பை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டோம். ஆகவே இது சம்பந்தமாக எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி ஜனாதிபதி அவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் சில வேண்டுகோள்களை முன் வைப்பதற்கும் தயாராக இருக்கின்றோம் என்றார்.
0 comments :
Post a Comment