முடிந்தால் மலையக மக்கள் வாக்குகளை பெற்றுக்காட்டுமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றேன் - திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு



க.கிஷாந்தன்-
லையக மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் கூட்டம் (10.08.2024) இன்று அட்டனில் இடம் பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியன ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது .

இந்தத் தீர்மானம் தொடர்பாகவும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் உயர் பீட முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள், மகளிர் மற்றும் இளைஞர் அணி இணைப்பாளர்கள், பணிமனை உத்தியோகஸ்தர்கள், மாவட்டத் தலைவர்கள், தலைவிகள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள், நகர கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோருக்கு இந்தக் கூட்டத்தின் போது விளக்கமளிக்கப்பட்டது.

அட்டன் அஜந்தா விருந்தக மண்டபத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில்
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் பிரதித் தலைவர் எம். உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திகாம்பரம் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், தொழில் அமைச்சராக இருந்த மனுச நாணயக்காரவும் வீரவசனம் பேசினர். எனினும், அந்த சம்பள உயர்வு இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் கம்பனிக்காரர்களிடம் கூறி வழக்குபோடச் சொன்னதாக என்மீது மனுஷ நாணயக்கார இப்போது குற்றச்சாட்டு முன்வைக்கின்றார். இந்த குற்றச்சாட்டை நான் நிராகரிக்கின்றேன். மலையக மக்களை நான் ஒருபோதும் காட்டிக்கொடுத்தது கிடையாது.

தங்களால் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்பதற்காக தற்போது பந்தை என் பக்கம் வீசுகின்றனர், ஜனாதிபதியும், மனுஷ நாணயக்காரவும் பொய்யர்கள் என்பது உறுதியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார், மலையக மக்களும் அவருக்கே வாக்களிப்பார்கள், மாறாக துரோகம் செய்தவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள், சஜித் பிரேமதாச ஆட்சியில் காணி உரிமை ,வீட்டு உரிமை, கல்வி உரிமை என அத்தனை உரிமைகளும் கிடைக்கப்பெறும்.

முடிந்தால் மலையக மக்கள் வாக்குகளை பெற்றுக்காட்டுமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றேன்.” – என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :