இந்த அரசியலில் தலைகள் இடம் மாறிக் கொண்டிருக்கின்றன. பணத்துக்காகவும், தரகுத் தொகைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும், வரப்பிரசாதங்களுக்காகவும், வைன் ஸ்டோஸ்களுக்காகவும் தமது சுய கௌரவத்தை இழக்கின்ற ஒரு அரசியல் கலாச்சாரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தாம் உள்ளிட்டவர்கள் எடுத்திருக்கின்ற தீர்மானம் குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன். அதிலும் பல அழுத்தங்களும் கோரிக்கைகளும் வந்தாலும் திருடர்களோடு அல்லாமல் 220 இலட்சம் மக்களோடு ஒன்றாக இருப்பதற்கு தாமும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் தீர்மானித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டி காட்டினார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஒன்பதாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மொறட்டுவை சொய்சாபுர விளையாட்டரங்கில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் போலவே அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
தான் எடுத்த தீர்மானம் சரியானது என்று இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயற்பாடு என உயர் நீதிமன்ற நீதியரசர் உட்பட ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் வழங்கிய தீர்ப்பு சுட்டிக் காட்டுகின்றது. இந்த தன்னிச்சையான தான்தோன்றித்தனமான தீர்மானத்திற்கு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும். நிதி அமைச்சராக அவர் மக்களின் அடிப்படை உரிமையை மீறி இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த உயரிய சட்டத்தை மீறுகின்ற நாடானது ஏல நிலமாக மாற்றுகின்ற ஆட்சியாளர்களோடு ஒன்றாக இருக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இன்னும் சில தினங்களில் பொது மக்களின் யுகத்தை ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கும். மக்களின் அடிப்படை உரிமையை மீறிய ஒருவராகவே ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கி இருக்கிறார். மக்களின் வாக்குரிமையை மீறச் செய்திருக்கின்ற இவர்கள் எதிர்காலத்தில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும். நாட்டை சீரழித்த மக்களை ஏமாற்றியுள்ள மோசடிக்காரர்களின் ஆதரவோடு நியமிக்கப்பட்ட ஜனாதிபதியையும், இந்த ஆட்சியையும் நிராகரித்து மக்களின் துன்ப துயரங்களை உணருகின்ற ஆட்சி ஒன்றை கொண்டு வருவதற்கு ஒன்றிணையுமாறு அனைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார்.
220 இலட்சம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் தேசியக் கொள்கை ஒன்று முன்னெடுக்கப்படும். ஜனாதிபதி நடமாடும் சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்படும். இந்த நாட்டில் பெரும்பான்மையானோர் வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள். தான் ஜனாதிபதி ஆனவுடன் ஜனநாயகத்துடன் கூடிய வளமான நாடொன்றை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுப்பேன் என்று இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment