இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 50% எட்டாத வாக்களிப்பு முடிவு.



நவாஸ் சௌபி-
1982, 1988, 1994, 1999, 2005, 2010, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் இதுவரை 8 ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன.
இவற்றில் வெற்றி பெற்றவர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஒரே தடவையில் தங்களது வெற்றியை உறுதி செய்தனர்.
01. 1982 - ஜே.ஆர். ஜேவர்த்தன - 34 50 811 - 52.91%
02. 1988 - ரணசிங்கப் பிரமதாச - 25 69 199 - 50.43%
03. 1994 - சந்திரிக்கா ப.குமார - 47 09 205 - 62.28%
04. 1999 - சந்திரிக்கா ப.குமார - 43 12 157 - 51.12%
05. 2005 - மஹிந்த ராஜபக் ஷ - 48 87 152 - 50.29%
06. 2010 - மஹிந்த ராஜபக் ஷ - 60 15 934 - 57.88%
07. 2015 - மைத்திரிபால ஸ்ரீசேன - 62 17 162 - 51.28%
08. 2019 - கோதாபாய ராஜபக்ஸ - 69 24 255 - 52. 25%

இத்தகைய ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் 2024 இல் நடைபெற்றுள்ள 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தல் முடிவுகள் ஊடகங்களில் இன்னும் முற்றாக அறிவிக்கப்படாத நிலையில் யாரும் 50% ற்கு மேல் பெறவில்லை என்ற அடிப்படையில் இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளை கணிப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளரினால் ஊடகச் செய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நடைமுறை தேர்தல் மூலம் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் சட்டமாக்கப்பட்ட விதிமுறைகளின் படியே நடைபெறுகிறது. சட்டத்திற்கு முரணாக எந்த முடிவுகளையும் அறிவிக்க முடியாது என்பது இதன் தெளிவாகும்.
இதற்கமைய இச்சட்டத்தினை தெளிவுபடுத்துகின்ற 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டம் இதனைத் தெளிவாக வரையறுத்திருக்கிறது.
இச்சட்டம் ஜனாதிபதித் தெரிவிலுள்ள படிப்படியான நடைமுறை ஒழுங்குகளை பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
சட்டம் --- 56 (1) -
ஆணையாளர் எல்லாத் தெரிவத்தாட்சி அலுவலர்களாலும் அவருக்கு கொடுத்துதவப்பட்ட 55 ஆம் பிரிவின் கீழான கூற்றுக்களிலிருந்து அத்தேர்தலில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் அரைப்பங்கிற்கு மேற்பட்ட வாக்குகளை வேட்பாளரெவரும் பெற்றாராவென்பதனை உடனடியாக நிச்சயித்தல் வேண்டும்.
சட்டம் ---- 56 (2)
அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் அரைப்பங்கிற்கும் மேற்பட்ட வாக்குகளை வேட்பாளரெவரும் பெற்றுள்ளவிடத்து ஆனையாளர் அத்தகைய வேட்பாளர் சனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென உடனடியாக வெளிப்படுத்தல் வேண்டும்.
விளக்கம் ----
மேலுள்ள இரண்டு பந்திகளின் படி அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் அரைப்பங்கிற்கு மேலாக வெற்றி வேட்பாளர் பெற வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. அதாவது சதவீதத்தில் கூறும்போது 50%த்துக்கு மேல் பெற வேண்டும் என்பதாகும். இதனை சிலர் 51% பெற வேண்டும் என்று தவறாகவும் புரிந்துள்ளனர். அவ்வாறில்லை 50% த்துடன் இன்னும் 1 வாக்கினை மேலாகப் பெற்றால் அது போதுமானது அதாவது 50.01% பெற்றாலும் அது அரைவாசிக்கு மேற்பட்டதே!
மேலுள்ள பந்தி 56 (1) இல் உள்ள மற்றுமொரு முக்கிய விடயம் --- செல்லுபடியான வாக்குகளில் அரைப்பங்கிற்கு மேற்பட்ட வாக்குகளை வேட்பாளரெவரும் பெற்றாராவென்பதனை உடனடியாக நிச்சயித்தல் வேண்டும்.--- என்பதாகும்
அவ்வாறு பார்க்கும் போது யாராவது பெற்றிருந்தால்
(2) பந்தியில் குறிப்பிட்டவாறு சனாதிபதி பதவிக்குரிய வெற்றியாளரை உடனடியாக அறிவிக்க வேண்டும்,
பெறாதவிடத்து இறுதி முடிவினை உடனடியாக அறிவிக்காமல் இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு கணக்கெடுப்புக்குப் போக வேண்டும் என்பதே இதன் விளக்கமாகும்,
நடைபெற்று முடிந்த சானதிபதிர் தேர்தல் இறுதி முடிவு அறிவிக்காமல் எப்படி இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு கணக்கெடுப்புக்கு போக முடியும் என்று சிலர் சந்தேகப்படுவதற்கும் கேள்வி எழுப்புவதற்கும் மேலுள்ள 2 பந்திகளிலும் தௌவுள்ளதாகக் கூறலாம்.
இதன்படி தற்போது 2024 தேர்தல் முடிவில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசநாயக்க அவர்கள்
முந்நிலை வகித்தபோதும் செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேல் பெறவில்லை என்பதனால் இறுதி முடிவினை அறிவிக்காமலே இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் பணி நடைபெற்றிருக்கிறது.
இது அவரது வெற்றியை ஒருபோதும் பாதிக்காது
சனாதிபதித் தேர்தல் சட்டம் அதன் இறுதித் தெரிவை எவ்வாறு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறதோ அதனை அதே ஒழுங்கில் முழுமையாக நிறைவேற்றியே இறுதி முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக மேலும் 51 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க தேர்தல் சட்டம் இரண்டாம் விருப்பு வாக்கு தெரிவு தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
சட்டம் - 57 (1)
தேர்தலில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் அரைப்பங்கிற்கு மேற்பட்ட வாக்குகளை வேட்பாளரெவரும் பெற்றிராதவிடத்து ஆணையாளர் -
(அ) - தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் உள்ளவிடத்து
(i) மிகக் குறைந்த எண்ணிக்கையான வாக்கினைப் பெற்ற வேட்பாளரைப் போட்டியிலிருந்து நீக்குதல் வேண்டும். அத்துடன்
(ii) எவ்வாக்காளரின் வாக்கு இப்பந்தியின் (1) ஆம் உட்பந்தியின் கீழ் நீக்கப்பட்ட வாக்காளருக்கு அளிக்கப்பட்டதோ. அவ்வாக்காளர் ஒவ்வொருவரதும் இரண்டாம் விருப்புத் தெரிவினை எஞ்சியுள்ள வேட்பாளர்கள் இருவரில் ஒருவருக்கு ஆதரவான அல்லது மற்றையவருக்கு ஆதரவான வாக்காகக் கணிப்பதற்கு அவசியமாகக்கூடியவாறான அத்தகைய நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவத்தாட்சி அலுவலரைப் பணித்தல் வேண்டும்.
அல்லது
(ஆ) - தேர்தலில் மூன்று பேருக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் உள்ளவிடத்து
(i) மிகக்கூடியதும் இரண்டாவதாக மிகக்கூடியதுமான எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களைப் போட்டியிலிருந்து நீக்குதல் வேண்டும். அத்துடன்
(ii) தெரிவத்தாட்சி அலுவலர் ஒவ்வொருவரையும் -
(அஅ) எவ்வாக்காளரின் வாக்கு இப்பந்தியின் (1) ஆம் உட்பந்தியின் கீழ் நீக்கப்பட்ட வேட்பாளரொருவருக்கு அளிக்கப்பட்டுள்ளதோ அவ்வாக்காளரொவ்வொருவரதும் இரண்டாம் விருப்புத் தெரிவு அது எஞ்சியுள்ள இரு வேட்பாளர்களில் ஒருவொருக்கு அல்லது மற்றையவருக்கு ஆனதாயின் அத்தகைய எஞ்சியுள்ள வேட்பாளருக்கு ஆதரவான ஒரு வாக்காகக் கணிக்கப்படுவதற்கும்
அத்துடன் ...
(ஆஆ) வாக்காளரொருவரின் இரண்டாம் விருப்புத் தெரிவு இவ்வுட்பந்தியின் கீழ்க் கணிக்கப்படாதவிடத்து அத்தகைய வாக்காளரின் மூன்றாம் விருப்புத் தெரிவு. அது எஞ்சியுள்ள இரு வேட்பாளர்களில் ஒருவொருக்கு அல்லது மற்றையவருக்கு ஆனதாயின் அத்தகைய எஞ்சியுள்ள வேட்பாளருக்கு ஆதரவான ஒரு வாக்காகக் கணிக்கப்படுவதற்கும் அவசியமாகக்கூடியவாறான அத்தகைய நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்தல் வேண்டும்.
சட்டம் - 61 -
தேர்தல் மாவட்டம் ஒவ்வொன்றினதும் தெரிவத்தாட்சி அலுவலரிடமிருந்து 60 ஆம் பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட கூற்றுக்கள் கிடைக்கப்பெற்றதன் மேல் ஆணையாளர் 56 ஆம் பிரிவின் கீழ் ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குகளுடன் அத்தகைய கூற்றுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான இரண்டாம் மூன்றாம் விருப்புத் தெரிவுகளையும் சேர்த்து. அதிலிருந்து எஞ்சியுள்ள இரு வேட்பாளர்களில் எவர் அவ்வாறு எண்ணப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளாரென்பதைக் கண்டறிந்து அத்தகைய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள வேட்பாளர் சனாதிபதிப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென உடனடியாக வெளிப்படுத்துதல் வேண்டும்.
விளக்கம்
அரைப்பங்கிற்கு மேலான வாக்கினை வேட்பாளரொருவரும் பெறாதவிடத்து எவ்வாறு சானதிபதியைத் தெரிவு செய்வது என 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சானதிபதித் தேர்தல்கள் சட்டம் மேலுள்ள 56 - 57 - 61 இல் குறிப்பிட்டிருப்பதில் தெளிவு காணலாம்.
தற்போது கணிக்கப்பட்டும் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்குகள் ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குகளுடன் சேர்க்கப்படும் போது அது 50% மேலாக வரவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை இந்த இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்குகள் சேர்த்து யாருடைய மொத்த வாக்கு அதிகமாக வருகின்றதோ அவர் வெற்றி பெற்றவராக உடன் அறிவிக்கப்படுவார்,
இத்தகைய இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்குகளை எந்த வேட்பாளர்களும் அளிக்கவில்லை என்றாலும் இருக்கின்ற முடிவின்படி அதிகூடிய வாக்கினைப் பெற்றவர் சனாதிபதியாக அறிவிக்கப்படுவார்,
எப்படி நோக்கினாலும் 2024 சனாதிபதித் தேர்தலில் இலங்கை திருநாட்டின் 9 வது நிறைவேற்று அதிகாரம்கொண்ட சனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்படுவார் அல்லது தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதே இறுதி முடிவு,
அவரது ஆட்சிக்கான அரசியல் மாற்றத்தை மக்கள் ஆணையாக வழங்கியுள்ளார்கள் அதனை அவர் எவ்வாறு வெற்றிகொள்வார் என்ற கேள்வியுடன் அவருக்கான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் உரைக்கின்றேன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :