இன்று ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட அனுராகுமார திசாநாயக்கவுக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
நடைப் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல், இலங்கையில் சரித்திரத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஜனநாயக செயன்முறையாகும்.
இந்த தருணத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை ஆதரித்து நாங்கள் ஆதரவு வழங்கிய சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து வாக்காளர்களுக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்ளவும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
இத்தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணைக்குழு, போலீசார் மற்றைய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தேர்தல் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்துகும், புதிய அரசியல் சிந்தனைக்கும், அது பற்றிய அணுகுமுறைக்குமான, மக்கள் எழுச்சியை உருவாக்கியுள்ளது. இது இலங்கைப் பிரஜைகளான நம் எல்லோருக்கும் கிடைக்கப் பெற்ற ஒருமித்த செய்தியாகும்.
சிங்கள மக்களின் ஆதரவை, அத்தகைய கொள்கைத்தளத்தின் மீது, அனுரகுமார திசாநாயக்க பெற்றிருப்பது அந்த புதிய அரசியல் கலாச்சாரத்தின் மூலக்கல் எனலாம்.
எந்த விதமான சிங்கள பௌத்த தேசிய உணர்வுகளோ, அல்லது வேறு எந்த மேலாண்மை வாதங்களோ முன்வைக்கப் படாமல் அடையப்பட்ட அனுர குமார திசாநாயக்கவின் வெற்றி கூர்ந்து கவனிக்கத் தக்கது.
மேலும் ஊழலற்ற அரசியலை, இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், ஒற்றுமைப் பட்ட தேசம் என்ற அடிப்படையில் இலங்கை மக்கள் விரும்பி நிற்பதையும் உணரக் கூடியதாக உள்ளது.
இந்தப் பின்னணியில் புதிய ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க மக்களின் நலனுக்காக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இந்த நாட்டின் ஜனாதிபதியாக தன்னுடைய வேலை திட்டங்களை முன்னெடுப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதற்கான சகல ஒத்துழைப்பை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு எப்பொழுதும் தயாராக உள்ளது.
செயலாளர்
எம். நிசாம் காரியப்பர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
0 comments :
Post a Comment