ஜனாதிபதி பிரேமதாசாவும், பட்டலந்த வதை முகாமும்.



ஏழாவது தொடர்
ஜே.வி.பி யின் இரண்டாவது எழுச்சி 1987, 1988, 1989 ஆகிய மூன்று ஆண்டுகள் வரை நீடித்தது. குறித்த காலகட்டத்தில் வடகிழக்கில் தமிழ் இயக்கங்களுடனான சமாதான பேச்சுவார்த்தை, இந்தியப் படைனர்களின் வருகை, தமிழ் இயக்கங்களின் ஆயுதக் களைவு, இந்தியப் படையுடன் விடுதலைப் புலிகளின் யுத்தம், வடகிழக்கு மாகாண சபை தேர்தல் என தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனம் அனைத்தும் வடகிழக்கு பகுதியை முதன்மைப் படுத்தியதாக இருந்தது. இதன் காரணமாக தென்னிலங்கையில் ஜே.வி.பி யின் தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் அதற்கு எதிராக நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகள் எதுவும் சர்வதேசத்தின் கவனத்தை முதன்மைப்படுத்தவில்லை.

இந்த நிலையில் ஆர்.பிரேமதாச ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்பு ஜே.வி.பி யினரை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் அவரது அழைப்பை ஜே.வி.பி நிராகரித்தது.

ஜனாதிபதி பிரேமதாசாவிடம் ஒரு கொள்கை இருந்தது. அவரது அரசியல் எதிரிகளை விட்டுவைப்பதில்லை. அதாவது மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள அமைப்புக்கள் குறிப்பாக தனக்கு போட்டியாக உள்ளவர்கள் அல்லது எதிர்காலத்தில் போட்டியாக வரக்கூடியவர்கள் ஆகியோர்களை முதலில் தனக்கு நண்பர்களாக மாற்றிகொண்டு அரசியல் செய்ய முற்படுவார். அது சாத்தியமற்றதாக இருந்தால் அவர்களை போட்டுத் தள்ளிவிடுவார். இதுதான் பிரேமதாசாவின் கொள்கை.

சிங்களப் பகுதிகளில் எப்போதுமில்லாத அளவில் ஜே.வி.பி க்கு செல்வாக்கு அதிகரித்துக் காணப்பட்டது. அதனால்தான் ஜே.வி.பி யின் கொள்கைகள் பற்றி முழுமையாக தெரிந்திருந்தும் அவர்களை அரசியல் பங்காளிகளாக ஆக்கிக்கொள்வதற்காக சமாதான பேச்சுக்கு அழைத்திருந்தார் பிரேமதாச.

தென்னிலங்கையில் ஜே.வி.பி யினர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை உக்கிரமடைந்தது. இதற்கென்று விசேடமாக “ப்ளக் கெட்ஸ், யெலோ கெட்ஸ், ஸ்கோபியன், ஈகிள்ஸ்” போன்ற துணைப்படைகள் அமைக்கப்பட்டதுடன், பல வதைமுகாம்கள் பிரேமதாசா அரசினால் உருவாக்கப்பட்டது.

அந்தவகையில் ஜே.வி.பி யின் தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய ரணில் விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டதுதான் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட “பட்டளந்த” வதைமுகாமாகும்.

சித்திரவதை என்ற வார்த்தைக்கு அர்த்தமே பட்டலந்ததான் என்று கூறப்படுகின்றது. பின்னாட்களில் சந்திரிக்கா ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்ததன் பின்பு பட்டலந்த விசாரணை ஆணைக்குழு 1996 இல் நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருந்தது. அதில் கொல்லப்பட்டவர்களில் இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என கண்டறியப்பட்டது.

1988 இல் கம்பஹா மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 64 கட்டடங்களை உள்ளடக்கிய இரசாயன உர ஆலை அதிகாரிகள் விடுதியையே இலங்கை பொலிஸ் தனது முக்கியமான சித்திரவதை முகாமாக மாற்றியிருந்தது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் அந்த சிறப்பு முகாமிற்கு பொறுப்பாக செயற்பட்டார். கடத்தி வரப்பட்ட இளைஞர்களும், யுவதிகளும் நிர்வாணமாக கைகளும், கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சுமார் பத்தாயிரம் இளைஞர்கள் இந்த வதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

பட்டலந்த வதைமுகாம் படுகொலைகள் பற்றி 1996 நவம்பரில் குற்றத்தடுப்பு பிரிவினராலும், 1997 ல் ஜனாதிபதி ஆணைக் குளுவினராலும் ரணில் விக்ரமசிங்க விசாரணை செய்யப்பட்டிருந்தார்.

பின்பு பதினொரு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் அவர்களை கைதுசெய்ய இருந்த நிலையில் அவர் நாட்டைவிட்டு தப்பிச்சென்றிருந்தார்.

தொடரும்............

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :