ஜனநாயக செயற்பாட்டுக்கான ஜே.வி.பி மீதான தடையும், மீள் எழுச்சியும்



ஐந்தாவது தொடர்
சில நேரம் ஜே.வி.பி.யின் புரட்சி வெற்றியடைந்திருந்தால், இன்று நாட்டின் அரசியல் நிலைமை முற்றாக வேறுவிதத்தில் இருந்திருக்கும். குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அது மட்டுமல்லாது தமிழர்களின் விடுதலை போராட்டம் எழுச்சி பெறவேண்டிய தேவை இருந்திருக்காது. அல்லது முதலாளித்துவ சக்திகளான மேற்கு நாடுகளின் ஆதரவுடன் தமிழர்களின் அரசியல் நோக்கம் இலக்கை அடைந்திருக்கலாம்.

1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்ததன் பின்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் கொள்கைக்கு முற்றிலும் மாற்றமான கொள்கையினை கடைப்பிடித்தார். அந்தவகையில் 1978 இல் ரோகன விஜயவீர சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதுடன், ஜே.வி.பி மீதான தடை நீக்கப்பட்டது. எதிர்காலத்தில் ஜே.வி.பி தனக்கு சவாலாக உருவாகுமென்று தெரிந்திருந்தால் அதன் தலைவரை ஜனாதிபதி ஜே.ஆர் விடுதலை செய்திருக்க வாய்ப்பில்லை.

வன்முறை அரசியலை கைவிட்டுவிட்டு ஜனநாயக அரசியலில் ஈடுபட்டனர். அதன் வெளிப்பாடாக 1982 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி யின் தலைவர் ரோகன விஜயவீர போட்டியிட்டு 4.19 வீதமான வாக்குகளை பெற்றிருந்தார். இது சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் ஜே.வி.பி புத்துயிர் பெறுவதனை காண்பித்தது.

ஜே.வி.பி யின் பெயரை உச்சரித்தாலே தங்களை இராணுவம் போட்டுத் தள்ளிவிடும் என்ற அச்சம் மக்கள் மத்தியிலிருந்து நீங்கியது. அதன் பின்பு மீண்டும் ஜே.வி.பி யின் செல்வாக்கு தென்னிலங்கையில் படிப்படியாக வலுப்பெற ஆரம்பித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்கு சரிவை சந்தித்தது.

இந்த நிலையில் பொது தேர்தலை நடாத்துவதற்கு ஜே.ஆர் விரும்பவில்லை. அவ்வாறு தேர்தல் நடந்தால் தனது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் இருந்த ஆறில் ஐந்து வீதமான செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்படுவதுடன், ஜே.வி.பி க்கு கணிசமான பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கும் என்ற காரனத்தினாலேயே நேரடியாக பொது தேர்தலுக்கு செல்லவில்லை.

பொது தேர்தலுக்கு செல்லாமல் சர்வர்சன வாக்கெடுப்புக்கு சென்றதானது ஜே.ஆரின் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடு என்று தெரிவித்து அதனை எதிர்த்து ஜே.வி.பி யினர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

பொது தேர்தலை நடத்த வேண்டுமா ? வேண்டாமா ? என்று மக்களிடம் கருத்தறிதல் என்ற போர்வையில் 1982 இல் சர்வர்சன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இந்த தேர்தலானது அதிகாரத்தை பயன்படுத்தி மிகவும் முறைகேடாக நடைபெற்ற தேர்தல் என்று அப்போது விமர்சிக்கப்பட்டதுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சிறிமாவோ பண்டாரநாயக்காவின் பிரஜா உரிமை பறிக்கப்பட்ட நிலையில், ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிமீது வெறுப்புக்கொண்ட சிங்கள மக்கள் மாற்று முகாமாக ஜே.வி.பி யை நாடினர்.

சிங்கள மக்கள் மத்தியில் ஜே.வி.பி யினரின் செல்வாக்கு அதிகரித்து வருவதனை அறிந்துகொண்ட ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன அவர்கள், அதனை தடுக்கும் நோக்கில் அவ்வப்போது பல அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அந்தவகையில் 1983 இல் தமிழர்களுக்கு எதிரான ஜூலைக் கலவரம் நடைபெற்றதற்கு ஜே.வி.பி யினரே முழுக் காரணம் என்று குற்றம் சுமத்தியதுடன் மீண்டும் அவ்வியக்கம் தடை செய்யப்பட்டது. அந்த தடையினால் ஜே.வி.பி யினர் தாக்கல் செய்திருந்த வழக்கு புஸ்வாணமானது. ஜனநாயக அரசியலில் ஈடுபடுவதற்கும் தடை ஏற்பட்டது.

மறுபுறத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் இளைஞர்களின் தனி நாடு கோரிய போராட்டம் எழுச்சியடைந்தது. ஜே.வி.பி தங்களை மீளக் கட்டமைத்தாலும் தென்னிலங்கையில் மீண்டுமொரு கிளர்ச்சியில் இறங்குவதற்குரிய சூழ்நிலை இல்லாததன் காரணமாக அரசாங்கத்தின் முழுக் கவனமும் வடகிழக்கு பகுதிகளில் இருந்தது.

தொடரும்..........


முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :