𝗚𝗘𝗢𝗣𝗢𝗟𝗜𝗧𝗜𝗖𝗦 - புவிசார் அரசியல் ஜனாதிபதி தேர்தலும், உலக வல்லாதிக்க சக்திகளும். இதில் எந்தநாடு வெற்றிபெறும் ?



லங்கையின் ஜனாதிபதி தேர்தலானது இந்தியா, சீனா, அமெரிக்க மேற்குலக நாடுகளின் பலப்பரீட்சைக் களமாக அமைந்துள்ளது.
தெற்காசியாவின் வல்லரசு நாடான இந்தியா, பிராந்தியத்தில் தன்னை சுற்றியுள்ள நாடுகளின் அரசியல் விவகாரங்களில் மறைமுக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
 
சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தெற்காசிய பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்துவதனை தடுத்து நிறுத்துவதுடன், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வழங்கக்கூடிய அமெரிக்கா போன்ற வெளி சக்திகள் தன்னை சுற்றி தளம் அமைத்துவிடக் கூடாது என்பதில் இந்தியா மிகக் கவனமாக செயற்படுவதே இதற்கு காரணமாகும்.
 
மேற்கு நாடுகள் தைவானுக்கு இராணுவ உதவிகள் வழங்கும்போது சீனா அதை எச்சரித்தது. கியுபாவில் ரஷ்யா தளம் அமைத்தபோது அமெரிக்கா அச்சுருத்தியது. அதுபோல் உக்ரேனில் அமெரிக்கா காலூன்ற முட்பட்டபோது ரஷ்யா உக்ரேனுக்கு எதிராக போர் தொடுத்தது. ஆனால் இலங்கையில் மேற்குலகம், சீனா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்த முற்படுகின்றபோது அதனை தடுத்து நிறுத்துகின்ற சக்தி இந்தியாவிடம் இல்லை.
தற்போது நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப செயற்படக்கூடியவரை வெற்றிபெற செய்யும் நோக்கில் இந்தியா களம் இறங்கியுள்ளது. அதேபோல் அமெரிக்காவும் மிகத்தீவிரமாக இயங்கி வருகின்றது.
 
மக்களின் வாக்குகளினாலேயே தங்களது அரசுத் தலைவரை தெரிவு செய்கின்றபோது வெளிநாட்டு சக்திகளினால் எவ்வாறு எமது ஜனாதிபதியை தீர்மானிக்க முடியும் என்ற கேள்வி எழும்புகிறது.
விடையம் இதுதான், மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள், சிறுபான்மைக் கட்சிகள், சிறிய கட்சிகள், குழுக்கள், பிரபலமான ஊடகங்கள் ஆகியவற்றுக்கு பெருமளவான பணத் தொகையை வழங்குவதன் மூலம் தான் ஆட்சியில் அமர்த்த விரும்புகின்ற வேட்பாளரை வெற்றிபெற செய்வதற்கு வெளிநாட்டு சக்திகள் நீண்டகாலங்களாக செயற்பட்டு வருகின்றது. இதற்காக பலநூறு கோடிகளை வாரி இறைக்கினறது.
 
இவ்வாறான தலையீடுகள் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாது தமது வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக செயற்படுகின்ற ஆட்சியாளர்களை ஆட்சி கவிழ்ப்பு அல்லது அச்சுறுத்தல் ஏற்படுத்துவது சர்வசாதாரனமாகும்.
ஜனாதிபதி ஜே.ஆர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக செயற்பட்டதனால் அவரை பணியவைப்பதற்காக இலங்கையில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களும், பயிற்சிகளும் வழங்கி போரிட அனுப்பியது. அதன் தாக்கம் இன்னமும் முடியவில்லை.
 
இவ்வாறான செயற்பாடுகளை வல்லரசு நாடுகள் மேற்கொண்டு வருவதன் மூலம் பலயீனமான நாடுகளின் உள்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், பிராந்தியத்தில் தனது மேலாதிக்க சக்தியை நிலைநிறுத்துகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டபோது தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் தெற்கின் முக்கிய செல்வாக்குள்ள அரசியல்வாதிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருந்தனர். ரணிலுக்காக சில முஸ்லிம் உறுப்பினர்கள் தங்களது தலைவருடன் முரண்பட்டனர்.
 
ரணில் மேற்குலகின் ஆதரவாளர் என்பதனால் அவரை தோற்கடிக்கும் நோக்கிலேயே ரணிலுடன் இருந்த பலரை பிரித்தெடுத்து அவர்களை சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்கான ஏற்பாடுகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
 
ஆனாலும் நீண்டகாலமாக இந்தியாவின் எண்ணங்களை நிறைவேற்றிவந்த சில மலையக மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளின் ஆதரவினை சஜித் பிரேமதாசாவுக்கு பெற்றுக்கொடுப்பதில் இந்தியா தோல்வியடைந்துள்ளது.
இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசாவை வெற்றிபெற செய்வதற்காக இந்தியாவும், ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெற செய்வதற்காக அமெரிக்காவும், மேற்குலக சக்திகளும் தீவிரமாக செயற்பட்டுவருகின்ற அதேவேளை, அனுரகுமார திசாநாயக்காவின் வெற்றியை சீனா எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது.
இறுதியில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் எந்த நாடு வெற்றிபெறும் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :