பகிர்ந்து கொள்வதற்கான அரசை அல்லாது பகிர்ந்து கொடுப்பதற்கான அரசையே நாங்கள் அமைப்போம்.-சாய்ந்தமருதில் அநுர.



எம்.வை. அமீர்-
சாதாரண மக்களுக்கு ஒரு பைசிக்கிலையோ அல்லது சிறிய வாகனத்தியோ இறக்குமதி செய்ய முடியவில்லை ஆனால் மரிக்கார் போன்றவர்கள் கார் போமிட் கேட்கின்றனர். நாங்கள் இவ்வாறான அரசை அமைக்கப்போவதில்லை பகிர்ந்து கொள்வதற்கான அரசை அல்லாது பகிர்ந்து கொடுப்பதற்கான அரசையே நாங்கள் அமைப்போம். என்று தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.

"நாடு அநுரவோடு" என்ற தலைப்பிலான மக்கள் கூட்டம் சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கல்முனை தொகுதி மைப்பாளரும், தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், இலங்கை ஆசிரியர் சேவை சங்க பிரதித்தலைவருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் 2024.09.13 ஆம் திகதி இடம்பெற்றது. திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் முன் உரையாற்றியபோதே அநுரகுமார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமானவர்களை துரத்தியடித்து பாராளுமன்றத்தை சுத்திகரிக்கவேண்டிய தேவையுள்ளது. எதிர்கால எங்களது ஆட்சியில் குறைவான அங்கத்தினர்களைக்கொண்ட அமைச்சரவை ஒன்றை அமைப்போம். அங்கு இராஜாங்க அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள். சமமான பிரதி அமைச்சர்களே இருப்பார்கள். அங்கு நாட்டுக்கு தேவையான அவசியமான தீர்மானங்களை மட்டுமே எடுப்போம். கடந்த காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளுக்காக ஒரு லட்சம் வழங்கினார்கள். நாங்கள்தான் அவைகளை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

@ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் ஆக்கப்படும்.

@ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன போமிட் இல்லாமலாக்கப்படும்.

@ 25 பேர்களைக் கொண்ட அமைச்சரவை.

@ இராஜாங்க அமைச்சர்கள் இல்லை.

@ பிரதி அமைச்சர்கள் 25 பேர்.

@ அமைச்சர்களுக்கு பின்னால் ஏழு எட்டு வாகனங்கள் செல்ல முடியாது.

@ அமைச்சர்களுக்கு அரசாங்கத்தினால் வீடு வழங்கப்படாது.

@ அமைச்சர்களுக்கான மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் வழங்கப்பட மாட்டாது.

@ ஜனாதிபதிக்கான ஓய்வூதியமும் இல்லை.

@ முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிக்கும் செலவுகளும் இல்லை.

@ நாடு பூராயும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளை இல்லாமளாக்குவோம்.

@ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்.

@ உறுப்பினர்களின் கார் கதவுகளை திறந்து விடவோ அவர்களது மனைவிமாருக்கு குடை பிடிக்கவோ பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பயன்படுத்த மாட்டோம். பாதுகாப்பு படையினர் நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவே பயன்படுத்தப்படுவர்.


இவ்வாறானதொரு நாட்டையே நாங்கள் உருவாக்க முயல்கிறோம். என்றும் தெரிவித்தார். நாங்கள் நாட்டில் சரியான சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம்.

கொள்ளையிடப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீளக் கொண்டு வருவோம்.

மத்தியவங்கியில் கொள்ளையிடப்பட்டதை நாங்கள் கொண்டுவருவோம். என்றும் தெரிவித்தார்.

இந்த பிரதேசத்தில் ஹிஸ்புல்லாஹ் வருகை தந்து தேசிய மக்கள் சக்தி தொடர்பில் மோசமான உண்மையில்லாத கருத்துக்களை கூறியுள்ளார். அதாவது முஸ்லிம்கள் கொண்டாடும் பெருநாட்களில் ஒன்றை குறைத்து விடுவோம் என்றும் ஐங்கால தொழுகைக்கு இடையூறு விளைவிப்போம் என்று கூறிச் சென்றுள்ளார். அதேபோன்று திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெரஹெராவை நடத்த தடைவிதிப்போம் என்றும் கூறுகிறார்கள். இவ்வாறான எண்ணங்கள் எங்களிடம் இல்லை. எங்களை மத ரீதியாக பிழையாக காண்பித்து இப்போது ஏற்பட்டுள்ள மக்கள் செல்வாக்கை குறைக்க எடுக்கும் முயற்சிகளாகும்.

மதங்கள் தொடர்பில் அரசியல் மேடைகளில் பேசவேண்டிய தேவையில்லை. சமயங்களுக்கும் அரசியல் சாயம் பூச எத்தனிக்கின்றார்கள். இவர்கள் தொடர்பில் நாங்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

இலங்கை பலமத மொழி கலாச்சாரத்தை பின்பற்றுகின்ற மக்களைக் கொண்ட நாடு. இந்த மக்களை நாட்டின் முன்னேற்றத்துக்காக இணைத்துக்கொண்டு பயணிப்பதன் ஊடாகவே முன்னேற்றப்பாதைக்கு நாட்டை இட்டுச்செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி, இலங்கையில் வாழும் அத்தனை மக்களினதும் மொழி, மத மற்றும் கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கும் கடப்பாட்டுடனேயே தனது பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் தெரிவித்தார்.

தெற்கில் எங்களுடம் மக்கள் கூட்டினைந்துள்ளனர் அதேபோன்று கிழக்கு மக்களும் எங்களுடன் ஒன்றிணைய வேண்டும். தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு மக்களின் ஆதரவுடனான அரசாங்கம் ஒன்றை அமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும்.

இந்த பிரதேசங்களுக்கு சஜித் வருவது ஹக்கீமை தோளில் வைத்துக்கொண்டு; ரணில் வருவது அதாவுல்லாஹ்வை தூக்கிக்கொண்டு; ஆனால் நாங்கள் வந்திருப்பது மக்களை நம்பிக்கொண்டு என்றும் தெரிவித்தார்.

கடந்த கால அரசியல் வாதிகள் இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு ஆட்சியை கைப்பற்றினர். கொரோனா காலத்தின்போது அந்த நோயினால் இறந்த முஸ்லிம் ஜனாசக்களை எரித்தார்கள் அப்போதிருந்த மெட்டு அணியினர்தான் இதனை செய்தனர். அந்த கொடூரத்தை செய்தவர்கள் எங்களது அணியில் இல்லை என்றும் தெரிவித்தார். அப்படியானால் நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்கு புரியும். உங்களது தெரிவு தேசிய மக்கள் சக்தியாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்றைய சூழலில் அரசியல் ஒரு சூதுபோல் இருக்கின்றது இவர்கள் அங்கு செல்கிறார்கள் இங்கு செல்கிறார்கள் இவைகள் எல்லாம் மக்களின் நலன்களுக்காகவா? இல்லை அவர்களது பாக்கெட்டுக்களை நிரப்புவதற்காகவே. இவ்வாறான நிலைகளை மாற்ற வேண்டும். நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்கவேண்டும் இதற்காக நாங்கள் ஒன்றுபடுவோம் என்றும் தெரிவித்தார்.

































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :