இந்தநிலையில் பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகளினால் யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் ராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது 1983 ஜுலை 23ஆம் தேதி இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த 15 இராணுவத்தினர்களின் சடலங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று கொழும்பு - பொரள்ளை மயானத்தில் அடக்கம் செய்வதன்மூலம் மக்களை திரட்டி வன்முறை ஒன்றினை தோற்றுவிப்பதற்கான சூழலை ஜே.ஆரின் அரசாங்கம் ஏற்படுத்தியது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சிறில் மெத்யு மேற்கொண்டிருந்தார்.
அன்றைய போராட்ட வரலாற்றில் முதன் முறையாக இவ்வளவு பெரியளவில் இராணுவத்தினர் கொல்லப்பட்டது இதுவே முதன்முறையாகும். இதனால் சிங்கள இளைஞர்கள் தூண்டப்பட்டு தென்னிலங்கையில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளில் இறங்கினர். இதுவே ஜூலைக் கலவரம் எனப்படுகிறது.
இந்த ஜூலைக் கலவரத்திற்கும் ஜே.வி.பி யினர்களுக்கும் சம்பந்தம் உள்ளதென்று பாதிக்கப்பட்ட தரப்புக்களான எந்தவொரு தமிழ் இயக்கங்களோ அல்லது தமிழ் கட்சிகளோ அல்லது தமிழ் வரலாற்றுக் குறிப்புக்களிலோ குற்றம் சுமத்தப்படவில்லை. மாறாக ஜே.ஆரின் அரசாங்கத்தை மாத்திரமே குற்றம்சாட்டினர்.
ஆனால் ஜே.ஆரின் அரசாங்கம் ஜே.வி.பி மீது பழியை சுமத்தி அவர்களது இயக்கத்தை முற்றாக தடை செய்ததன் காரணமாக ஜனநாயக அரசியலில் பங்கெடுத்த ஜே.வி.பி யினர் மீண்டும் வன்முறை அரசியலுக்கு தூண்டப்பட்டனர். அதாவது ஜே.வி.பி யை ஜனநாயக அரசியலிலிருந்து வன்முறை அரசியலுக்குள் தள்ளியது ஜே.ஆரின் அரசாங்கம் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை.
அதுமட்டுமல்லாது ஜூலைக் கலவரத்தின் பின்புதான் தமிழர்களின் ஈழப்போராட்டம் புத்தெழுச்சி பெற்றது. இவைகள் அனைத்துக்கும் ஜே.ஆரின் சர்வாதிகார நடவடிக்கைகளே காரணமாகும்.
1987 இல் இடம்பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை ஜே.வி.பி கடுமையாக எதிர்த்ததுடன், இந்திய அமைதிப் படையினரின் இலங்கை வருகைக்கு எதிராக செயற்பட்டது. இதே நிலைப்பாட்டில் பிரேமதாசாவும், விடுதலைப் புலிகளும் இருந்தனர். அத்துடன் இந்தியப் படையை வெளியேற்றும் போராட்டத்திற்காக ஜே.வி.பி க்கு புலிகள் ஆயுதங்களை வழங்கி உதவி புரிந்ததாக அப்போது சில செய்திகள் கசிந்தது.
1987 தொடக்கம் 1989 வரைக்கும் இந்திய அமைதிப் படையினர் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியிலேயே மீண்டும் ஜே.வி.பி யினர் தெற்கில் தாக்குதல்களை ஆரம்பித்தனர்.
ஜே.வி.பி யின் இந்த இரண்டாவது கிளர்ச்சியானது 1971 இல் நடைபெற்ற முதலாவது கிளர்ச்சியை போன்று தங்களது அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி ஒரே தடவையில் ஆரம்பிக்கப்படவில்லை. மாறாக ஆங்காங்கே குண்டுவெடிப்புக்களும், வங்கிக் கொள்ளைகளும், பொலிஸ் நிலையம், இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. இதில் கண்டி பல்லேகல இராணுவ முகாம், கட்டுநாயக்க மற்றும் பண்ணல விமானப்படை தளங்கள், பாராளுமன்றம் மீதான தாக்குதல் மற்றும் இந்திய படையினர் மீதான சில தாக்குதல்களும் முக்கியமான தாக்குதல் சம்பவங்களாகும்.
மூன்றாண்டுகள் நடைபெற்ற ஜே.வி.பி யினர்களுடனான சண்டைகள் 1989 நவம்பரில் இல் அதன் தலைவர் ரோகன விஜயவீர கைது செய்யப்பட்டதன் பின்பு முடிவு நிலையை அடைந்தது. இந்த சண்டைகளில் சுமார் அறுபதாயிரம் (60,000) உயிர்கள் பலியானதுடன் பலர் காணாமல் போனார்கள். ஏராளமான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டது. குறிப்பாக அரச சொத்துக்கள் பெருமளவில் சேதமாக்கப்பட்டன.
தென்னிலங்கையின் பல பிரதேசங்களிலும் ஆங்காங்கே மூலை முடுக்குகளிலெல்லாம் பிணங்கள் வீசப்பட்டுக் கிடந்தது. குறிப்பாக வீதிகளில் டயர்களில் எரிந்த நிலையிலும், குளக்கரைகளிலும் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட பிணங்களுக்கு குறைவிருக்கவில்லை. மேலும் களனி கங்கை, நில்வளவ கங்கை போன்ற கங்கைகளில் அடிக்கடி பிணங்கள் மிதந்து வருகின்ற காட்சிகள் காணப்பட்டது.
ஜே.வி.பி யுடன் சம்பந்தட்டவர் என்று சந்தேகப்பட்ட அனைவரும் பிணமாக காட்சியளித்தனர். இதில் ஏராளமான பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காணமல் ஆக்கப்பட்டனர்.
அவைகள் ஒருபுறமிருக்க உலகை திரும்பிப் பார்க்கச்செய்யும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதுதான் சூரியகந்த மனிதப் புதைகுழியாகும். பாரியளவிலான இந்த மனிதப்புதைகுழி கண்டெடுக்கப்பட்டு தோண்டப்பட்டது. காணாமல் போனவர்கள், தடுத்துவைத்து சித்திரவதை செய்யப்பட்டு பின்பு கொலை செய்யப்பட்டு இரகசியமாக புதைக்கப்பட்டிருக்க முடியும்.
தொடரும்..........
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment