இலங்கையில் பாகிஸ்தான் இராணுவமும், இந்தியாவின் இராஜதந்திரமும்.



 மூன்றாவது தொடர் 

முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்ட சிந்தனைகளை ஆயுதங்களின்றி ஜனநாயக ரீதியில் மேலெழச் செய்வதற்கு அதிகார சக்திகள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. எப்படியும் இவர்களை அழித்தொழிக்கவே முற்படுவார்கள். 

இதனால் ஆயுதப் புரட்சிதான் இதற்கு ஒரே தீர்வு என்ற அடிப்படையில் மக்கள் ஆதரவுடன் அனைத்து தயார்படுத்தல்களுடனும் முழு நாட்டையும் கைப்பற்றும் புரட்சியில் ரோகன விஜவீர தலைமையிலான ஜேவிபி இயக்க சிங்கள இளைஞர்கள் களத்தில் இறங்கினார்கள்.     

1971.04.05 ம் திகதி அதிகாலையில் வெல்லவாய பொலிஸ் நிலையம்மீது முதன்முதலாக தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதுடன், நாட்டில் தென்பகுதியில் உள்ள 93 பொலிஸ் நிலையங்கள் ஒரே நேரத்தில் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டது. இதில் 35 பொலிஸ் நிலையங்கள் முற்றாக புரட்சியாளர்களிடம் வீழ்ந்தது. பல பொலிஸ் நிலையங்களில் இருந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் நிலையத்திலிருந்து தப்பி ஓடினர்.

ஆரம்பத்தில் இவர்களது தாக்குதல் எதிர்பார்த்ததையும் விட மிக விரைவாகவும், வெற்றிகரமாகவும் அமைந்திருந்தது. தென்னிலங்கையின் பல மாவட்டங்கள் ஜே.வி.பியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மிகவும் திட்டமிடப்பட்ட பாரியளவிலான இந்த தாக்குதல் இந்தளவுக்கு வெற்றியளிக்குமென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. 

ஆனால் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவை சிறைப்பிடிப்பதற்கு அல்லது கொலை செய்வதற்கு இவர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 

ஜே.வி.பியினர் தென்னிலங்கையை கைபற்றிக்கொண்டு கொழும்பை நோக்கி விரைந்தனர். இன்னும் சில மணிநேரங்களில் கொழும்பு முற்றாக வீழ்ந்துவிடும் என்ற பதற்றம் நிலவியது.  

அன்றைய இலங்கை இராணுவத்திடம் இன்று இருப்பதுபோன்று நவீன ஆயுதங்களும், ஆளணிகளும் இருக்கவில்லை. அதனால் ஜே.வி.பியினரை எதிர்த்து போரிடும் ஆற்றல் அவர்களிடம் இருக்கவில்லை. இராணுவத்துக்குள் அவர்களது பலமான ஊடுருவல் இருந்ததுடன் ஜே.வி.பி யினர்களின் திட்டமிடலை அன்றைய அரசு முன்கூட்டியே அறிந்துகொள்ளாதது புலனாய்வுத் தோல்வியாகும்.   

இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களை தோற்கடித்து நாட்டை பாதுகாப்பதென்றால் வெளிநாட்டிடமிருந்து உடனடி இராணுவ உதவியை கோருவதென்று ஆட்சியாளர்களினால் முடிவெடுக்கப்பட்டது. தாமதிக்கின்ற ஒவ்வொரு மணித்தியாலங்களும் ஆபத்தானதாகவே இருந்தது. அன்றைய சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் இலங்கைக்கு நெருக்கமான உறவு காணப்பட்டதுடன், இந்தியாவுடன் சற்று ராஜதந்திர முறுகல் இருந்தது. 

பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரிப்பதற்காக வங்காளதேசில் பாகிஸ்தானுடன் இந்தியா போரில் ஈடுபட்டது. அப்போது பாகிஸ்தானிலிருந்து வங்காளதேஸ் நோக்கி செல்கின்ற பாகிஸ்தானின் போர் விமானங்களுக்கு இலங்கையில் எரிபொருள் நிரப்பப்பட்டது. இதனால் இலங்கைமீது இந்தியா கடும் கோபத்தில் இருந்தது.

அவ்வாறான சூழ்நிலையிலேயே இருபது கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள இந்தியாவிடம் இராணுவ உதவியை கோராமல், இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள பாகிஸ்தானிடம் இராணுவ உதவியை கோரியதற்கு காரணமாகும். 

பாகிஸ்தான் விமானப்படையும், இராணுவமும் குண்டுவீச்சு விமானங்கள், ஹெலிக்கொப்டர்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் அவசர அவசரமாக இரத்மலான விமான நிலையத்தில் வந்திறங்கி ஜே.வி.பி போராளிகளை அழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்த நிலையில் இந்தியா களத்தில் இறங்கியது.   

அதாவது பாகிஸ்தான் இராணுவம் இலங்கையில் வந்திறங்கியது இந்தியாவினால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் மூலமாக இலங்கைக்கு முழுஅளவிலான அழுத்தம் வழங்கியதுடன், தாங்கள் உதவப்போவதாக வலிந்து உதவிக்கரம் நீட்டியது.          

உடனடியாக இந்திய இராணுவத்தினர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கி ஜே.வி.பி யினரின் கிளர்ச்சியினை ஒழிப்பதற்கு உதவிபுரிந்தனர். 


தொடரும்.............

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :