சுருங்கி வரும் பொருளாதாரத்தில் மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மக்களின் வாழ்க்கை கடினமாகிவிட்ட நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் வெளியில் சொல்ல முடியா ஏழ்மையை சந்தித்து வருகின்றனர். கிராமப்புற, நகர்ப்புற மற்றும் தோட்ட வறுமை அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது தலைமையில் நேற்று (28) மத்திய கொழும்பு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
🟩 பொருளாதார வளர்ச்சியே எமது இலக்காகும்.
குறிப்பிட்டதொரு கொள்கையின் மூலம் வறுமையை ஒழித்து, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். பொருளாதார வளர்ச்சியில் இருந்து நாட்டு மக்கள் பயன்பெறும் திட்டம் இதில் அமைந்து காணப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தில் நேர்மறையான இலக்குகள் உள்ளன. பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உட்பட சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியான மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான வாழ்க்கையை ஏற்படுத்தும் பொறுப்புக் கூறல் இதில் அமைந்து காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
🟩 முதலீட்டாளர்களே அச்சமின்றி நாட்டுக்கு வாருங்கள்.
நாம் பின்னடைவைச் சந்தித்தாலும், இந்த நாட்டுக்கு வர எதிர்பார்த்திருக்கும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்து பூரண ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவோம். அன்னிய நேரடி முதலீடுகளை வலுப்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம். ஏற்றுமதி துறையை இலக்கு வைத்து தொழில் முயற்சிகளை தொடங்குவோருக்கு பூரண ஆதரவை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
🟩 வெறுப்பு மற்றும் பொறாமைத்தன அரசியல் எங்களிடம் இல்லை.
அரசியலில் பின்னடைவைச் சந்தித்தாலும், பொறாமைத்தன, வெறுப்பு அரசியல் என்னிடம் இல்லை. அனைவரும் கைகோர்த்து நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு பக்க பலத்தை வழங்க நாமனைவரும் முன்வருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு அழைப்பு விடுத்தார்.
0 comments :
Post a Comment