குறிப்பாக ஜே.வி.பி யினர் இந்த நாட்டை நாசமாக்கிய வன்முறையாளர்கள், கொலைகாரர்கள், குழப்பக்காரர்கள் என்றெல்லாம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
தேர்தல் காலம் என்பதனால் இது அரசியலுக்காக கூறப்பட்டாலும், இன்றை இளைய தலைமுறையினருக்கு உண்மையான வரலாறுகளை எத்திவைப்பது எமது கடமையாகும். அவ்வாறு உண்மைகளை கூறுகின்றபோது இந்த கட்டுரை எழுதுகின்றவரையும் ஜே.வி.பியை சேர்ந்தவர் என்று கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில் கருத்துக்களை துல்லியமாக விளங்கிக்கொள்வதில் மந்தபுத்தியுள்ள பலர் முகநூல் எழுத்தாளர்களாக உள்ளனர்.
ஜேவிபி யின் தலைவர் ரோகன விஜயவீர அன்றைய சோவியத் யூனியனின் தலைநகரான மொஸ்கோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் கல்விகற்றபோது “மாக்சிசம், லெனிநிசம்” ஆகிய அரசியல் சித்தாந்தங்களில் கவரப்பட்டார்.
இவர் இலங்கைக்கு வந்ததன் பின்பு சேகுவேராவின் புரட்சியை பின்பற்றி அதனை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் விதத்தில் 1965 இல் இடதுசாரி அமைப்பினை நிறுவியதுடன் சிங்கள இளைஞர்களுக்கு தனது அரசியல் சித்தாந்தத்தை போதித்தார்.
1970 இல் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) என்ற பெயரில் இயக்கத்தை கட்டியமைத்து அதே ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு எதிரான செயற்பாடுகளை ஆரம்பித்தனர். இதற்காக தெற்கிலுள்ள பெரும் செல்வந்தர்கள் நிதி உதவிகளை வழங்கிவந்தனர்.
உலகில் முதலாளித்துவம், சோஷலிச சமஉடமைக் கொள்கை ஆகிய இரண்டு பிரதான பொருளாதாரக் கொள்கைகள் உள்ளன.
அமெரிக்கா, பிரித்தானிய போன்ற நாடுகள் பின்பற்றுகின்ற முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையானது தனி நபர் முதலாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இங்கே உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு எந்தவித முன்னுரிமையும் கிடையாது.
ஆனால் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் பின்பற்றுகின்ற சோஷலிச சமஉடமைக் கொள்கையானது “கால்மாக்ஸ், லெனின்” ஆகியோர்களின் பொருளாதார சித்தாந்தத்தை பின்பற்றுகின்ற கொள்கையாகும். இங்கே முதலாளிகளுக்கு முன்னுரிமை இல்லை. பாட்டாளி வர்க்கத்தினர்களுக்கே முன்னுரிமை உள்ளது.
உழைக்கின்ற பாட்டாளிகளின் உழைப்பானது முதலாளிகளினால் சுரண்டப்பட்டு செல்வம் தனி நபர்களிடம் குவிக்கப்படுகின்றது. ஆனால் கஷ்டப்பட்டு உழைக்கும் வர்க்கத்துக்கு அவர்களது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. அத்துடன் முதலாளி வர்க்கத்தினர், உழைக்கின்ற பாட்டாளி வர்க்கத்தினை சுரண்டி ஆளும் வர்க்கமாக ஆட்சி செய்வதுடன், உழைக்கும் வர்க்கத்தினர் ஆளப்படுகின்ற அடிமைகளாக வாழ்கின்றனர்.
முதலாளித்துவ வாதிகளின் பொருளாதார சுரண்டல்களையும், ஊழல்களையும் ஒழித்து சம உடமை பொருளாதார கொள்கையினை இலங்கையில் நடைமுறைப்படுத்தி தொழிலாளர்களின் உயர்வினை மேம்படுத்துவதுதான் ஜே.வி.பி யினரின் பிரதான கொள்கையாகும்.
தொடரும்.................
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment