அரச இயந்திரங்களின் துஸ்பிரயோகமும், JVP யின் பிழையான திட்டமிடலும்.



நான்காவது தொடர்
ந்தியாவின் உதவியுடன் ஜே.வி.பி யின் புரட்சியை கட்டுப்படுத்துவதற்கு இரண்டரை மாத காலங்கள் தேவைப்பட்டது. அதாவது 1971 ஏப்ரல் ஆரம்பம் தொடக்கம் ஜூன் மாதம் நடுப்பகுதிக்கு பின்பு புரட்சி நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பூரண கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த இரண்டரை மாத காலங்களுக்குள் நடைபெற்ற சண்டையில் இரண்டு தரப்பிலிருந்தும் சுமார் இருபதாயிரம் (20,000) பேர்கள் கொல்லப்பட்டனர். இதில் இளைஞர்கள் அதிகம். அரச பயங்கரவாதம் தனது கோரமுகத்தை மக்கள் மீது காண்பித்தது. ஜே.வி.பி யின் வன்முறைகளைவிட அரச இயந்திரங்களின் அத்துமீறல்கள் அதிகளவில் இருந்தன.

இரக்கமின்றி வகைதொகையின்றி சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். ஜே.வி.பி போராளிகள் இராணுவத்தினரையும், பொலிசாரையும் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களையும் குறி வைத்தனர். ஆனால் இராணுவத்தினரோ தாங்கள் சந்தேகப்பட்டவர்கள், ஜே.வி.பி யினர்களுடன் தொடர்பினைக் கொண்டவர்கள் அனைவரையும் அவர்கள் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் வகை தொகையின்றி கொன்று குவித்ததுடன், கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இதில் பல்கலைக்கழக மாணவர்களும் ஏராளம்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பிரபலமான சிங்கள அழகுராணியாக இருந்த இருபத்திரெண்டு வயதுடைய மன்னம்பேரி என்பவள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இரவு முழுவதும் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பின்பு நிர்வானமாக வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அதன்பின்பு பகிரங்கமாக சுட்டுக் கொல்லப்பட்டாள்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா ? இந்த ஜே.வி.பி புரட்சியை அடக்குவதற்கு சோவியத் யூனியன், சீனா போன்ற சோஷலிச சமஉடமைக் கொள்கையை பின்பற்றுகின்ற நாடுகள் இலங்கைக்கு உதவி செய்ததுதான். அதாவது எந்தக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக ஜே.வி.பி யினர் போராடினார்களோ, அதே கொள்கையுடைய நாடுகள் அந்த கொள்கையினை நசுக்குவதற்கு உதவி புரிந்தன என்பதுதான் ஆச்சர்யமானது.

புரட்சி அடக்கப்பட்டு சிவில் நிருவாகம் ஏற்படுத்தப்பட்டதன் பின்பு தென்னிலங்கையில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. அத்துடன் ஏற்கனவே 1971 இல் ஜேவிபி யின் தலைவர் ரோகன விஜயவீர கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்பு ஜே.வி.பி இயக்கம் தடை செய்யப்பட்டது.

இந்த புரட்சியி நடவடிக்கையினை ஜே.வி.பி யினர் மிக துல்லியமாகவும், இரகசியமாகவும் திட்டமிட்டு நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி இருந்தாலும், இறுதியில் அது வெற்றி என்னும் இலக்கை அடைய முடியாமல் தோல்வியடைந்தமைக்கு காரணம் என்ன என்பது பற்றி ஆராய வேண்டும்.

பொதுவாக ஒரு நாட்டை இலகுவாகவும், விரைவாகவும் கைப்பற்றுவதென்றால் அனைத்து சக்திகளையும் பாவித்து முதலில் அதன் தலைநகரை கைப்பற்ற வேண்டும். கட்டளை மைய்யங்களான நாட்டின் ஆட்சித் தலைவர், முப்படைகளின் தலைமையகம், பாராளுமன்றம், திறைசேரி, விமானநிலையம், ஒலி, ஒளி பரப்பு நிலையங்கள் என அனைத்து தலைமை செயலகங்களும் தலைநகரில் அமைந்து உள்ளதனால், தங்களது முழு பலத்தையும் ஒன்றுதிரட்டி கொழும்பை கைப்பற்றி இருந்தால் நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் மற்றும் இராணுவ படைமுகாம்கள் உட்பட அனைத்து அரச இயந்திரங்களும் செயலிழந்திருக்கும்.

அவ்வாறு செய்யாமல் தெற்கின் பெரும்பாலான நிலப்பரப்பை கைப்பற்றியதன் மூலம் தங்களது படைகளை அகலக்கால் ஊன்றச் செய்தனர். அதாவது தென்னிலங்கையில் தங்களால் கைப்பற்றப்பட்ட பெரும்பாலான பிரதேசங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக முக்கிய நிலைகளில் அதிகளவான போராளிகளை அமர்த்தி பாதுகாக்க வேண்டிய நிலை புரட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. இது அவர்களது இராணுவ திட்டமிடலில் உள்ள குறைபாடாகும்.

தொடரும்..........


முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :