போராளிகளும், பயங்கரவாதமும். யார் அந்த JVP யினர் ?



இரண்டாவது தொடர்
லகில் மனித இனம் உருவானதிலிருந்து புரட்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் குறைவில்லை. வலதுசாரிக் கொள்கைக்கு எதிராக இடதுசாரிகளும், முதலாளித்துவத்துக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தினரும் மற்றும் ஆக்கிரமிப்பு, அடக்குமுறைகளுக்கு எதிராகவும், நீதியை நிலைநாட்டுவதற்காகவும், ஒரு இனத்தை இன்னொரு இனம் ஆழக்கூடாது என்பதற்காகவும் போராட்டங்களும், புரட்சிகளும் அன்றுதொட்டு இன்றுவரை உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் நடந்தவண்ணமே உள்ளன.

அவ்வாறான நியாயமான போராட்டங்களில் தங்களது உயிரை அர்ப்பணித்து போராடுகின்ற போராளிகளை அழிக்கும் நோக்கில் “பயங்கரவாதிகள்” என்று அதிகார வர்க்கத்தினரால் ஊடகங்கள் மூலமாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால் போராட்டத்தை அடக்குவதற்காக முதலாளித்துவ அரச இயந்திரம் மேற்கொள்ளுகின்ற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, காணாமல் ஆக்குதல், மனித உரிமை மீறல்கள் போன்ற அரச பயங்கரவாதச் செயற்பாடுகள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு போராளிகளை பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்தில் அதிகார சக்திகள் வெற்றியடைகின்றன.

அந்தவகையில் ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியபோது தலிபான்களையும் மற்றும் பாலஸ்தீன போராளிகளை இன்றுவரைக்கும் பயங்கரவாதிகள் என்றே பட்டியலிடப்பட்டனர்.

அதுபோலவே இலங்கையில் முதலாளித்துவ சுரண்டல் சக்திகளிடம் இருக்கின்ற ஆட்சி அதிகாரத்தை பறித்து சமஉடமைக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக 1971, 1987, 1988,1989 ஆகிய காலங்களில் ஒரு இலட்சியத்துடன் தங்களது உயிர்களை அர்ப்பணித்து போராடிய ஜே.வி.பி அமைப்பினர் பயங்கரவாதிகள், கலகக்காரர்கள், குழப்பவாதிகள் என்றெலாம் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

ஈரானில் மேற்குலக சக்திகளின் பொம்மையாக இருந்த ஷா மன்னருக்கு எதிராக 1979 இல் ஆயதுல்லாஹ் கொமைனி தலைமையில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

அரபு வசந்தம் என்ற போர்வையில் மக்கள் புரட்சியின் காரணமாக துனிசியா, லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் சிரியா போன்ற சில நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கான புரட்சிகளும் போராட்டங்களும் தோல்வியடைந்தது.

அண்மையில் வங்காளதேசில் ஏற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் புரட்சியின் காரணமாக ஆட்சித் தலைவரான பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினமா செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடினார்.

இங்கே கவனிக்க வேண்டிய விடையம் என்னவென்றால், போராடும் வரைக்கும் போராளிகள் பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்படுவார்கள். போராட்டம் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு “பயங்கரவாதிகள்” என்ற சொல் மறைந்துவிடுவதுடன் அவர்கள் ராஜதந்திரிகளாக பார்க்கப்படுகின்றனர். ஆனால் போராட்டம் தோல்வியடைந்தால் அவர்கள் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் பயங்கரவாதிகளாகவே கான்பிக்கப்படுவார்கள். இதனையே உலகம் நம்புகிறது.

ஒரு இலட்சியத்துடன் நீதியை நிலைநாட்டும் பொருட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக உயிரைப் பணயம்வைத்து நடாத்துகின்ற போராட்டத்தினை வெறும் ஒரே வார்த்தையில் “வன்முறை” “குழப்பம் விளைவித்தல்” என்று கூறுவதானது அறியாமையின் வெளிப்பாடாகும்.

கியூபாவில் சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ ஆகியோர்களின் தலைமையில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு 1959 இல் சோஷலிச சமஉடமை ஆட்சி நிறுவப்பட்டது. அதுபோன்றதொரு ஆட்சியை இலங்கையில் நிறுவுவதற்கு ரோகன விஜயவீர தலைமையில் ஜே.வி.பியினர் திட்டமிட்டனர்.

தொடரும்......


முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :