சந்திரிக்காவின் கணவர், JVP தலைவர் ஆகியோர்களின் கொலைகளில் உள்ள மர்மங்கள்.



எட்டாவது தொடர்
ந்த சூழ்நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கான திரைப்பட நடிகரும், சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் கணவரும், எதிர்காலத்தில் இலங்கையின் ஜனாதிபதியாக வருவார் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டவருமான விஜயகுமாரதூங்க 1988 பெப்ரவரி 16 ம் திகதி எதிர்பாராதவிதமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் சிங்கள மக்கள் மத்தியில் பாரியளவிலான அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த கொலையை திட்டமிட்டு ஜே.வி.பி யினர்தான் செய்தார்கள் என்று அனைத்து இடங்களிலும் காட்டுத் தீ போன்று கதை பரவியது. இதனால் ஜே.வி.பி யினர்மீது சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் உருவாகியது.

பிரேமதாசா மரணித்ததன் பின்பு சந்திரிக்கா அரசியலுக்கு வந்து வாய் திறக்கும் வரைக்கும் தனது கணவரை கொலை செய்தது பிரேமதாசாதான் என்பதனை அப்போது எவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.

அன்றைய காலகட்டத்தில் தென்னிலங்கையில் அதிகளவில் கொலைகள் நடைபெற்றது. குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கொலை செய்யப்பட்டனர். இவ்வாறான கொலைகளை செய்வது வடகிழக்கில் ஆயுதப் போராட்டம் நடாத்துகின்ற தமிழ் ஆயுத குழுக்களா அல்லது ஜே.வி.பி யினரா என்று உறுதிப்படுத்த முடியாத நிலையில் சம்பவகள் நடந்தேறியது.

ஆனாலும் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களின் கொலைகளில் ஜே.வி.பி இனர்களின் கைவரிசைகளே இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் நவம்பர் 1989 இல் ஜே.வி.பி இயக்க தலைவர் ரோகன விஜயவீர அவர்கள் உலப்பனையில் வைத்து கைதுசெய்யப்பட்டு பின்பு சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இவரது கொலை பல மர்மங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது. அதாவது ரோகன விஜயவீர அவர்கள் அப்போது சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்பட்ட ஒரு புரட்சித் தலைவராக காணப்பட்டதன் காரணமாக ரோகனவின் கொலையில் தங்களுக்கு எந்தவித சம்பந்தமுமில்லை என்று நிரூபிப்பதற்காக பிரேமதாசா அரசு பல நாடகங்களை அரங்கேற்றியது.

“கைது செய்யப்பட்ட ரோகன விஜயவீரவை விசாரணை செய்ததன் பயனாக அவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக அவரை அழைத்துக்கொண்டு ஜே.வி.பி யின் ரகசிய முகாமை கைபற்ற சென்றபோது அங்கிருந்த இன்னுமொரு ஜே.வி.பி உறுப்பினரினால் ரோகன விஜயவீர சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று அன்றைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரஞ்சன் விஜயரத்ன அறிவித்திருந்தார்.

ஆனால் விடையம் அதுவல்ல. ரோகன விஜயவீர கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு உயிரோடு இருந்த நிலையிலேயே பொரல்ல கனத்தை மயானத்தில் உள்ள உடலை எரிக்கும் பகுதியில் வீசப்பட்டு எரிக்கப்பட்டார். இந்த சம்பவங்கள் மிகவும் இரகசியமாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது நடைபெற்றது 1989 நவம்பர் 13 ம் திகதியாகும்.

அப்போது இராணுவத்துக்குள் ஜே.வி.பி யினரின் ஊடுருவல் அதிகமாக இருந்ததென்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அந்தவகையில் ரோகன விஜவீரவின் விசாரணை மற்றும் அவரது கொலையில் சம்பந்தப்பட்ட இரகசிய இராணுவ குழுவுக்குள் இந்திரானந்த டி சில்வா என்னும் இராணுவ வீரரும் இருந்தார். இவர் ஜே.வி.பி யின் உளவாளி என்பது ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு மட்டுமல்ல ரோகன விஜயவீரவுக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர் மூலமாகவே இந்த கொலை பற்றிய அனைத்து இரகசிய தகவல்களும் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியே கசிந்தது. பின்பு இந்திரானந்த டி சில்வா கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

இதில் இன்னுமொரு தகவலும் உண்டு. அதாவது ரோகன விஜவீர கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டபோது தான் ஜனாதிபதி பிரேமதாசாவை சந்திக்க விரும்புவதாக இராணுவ அதிகாரியிடம் அவர் கூறியது பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னவுக்கு கூறப்பட்டதாகவும், அந்த தகவலை பிரேமதாசாவுக்கு எத்திவைக்காமல் ரோகனவை கொலை செய்யும்படி ரஞ்சன் விஜயரத்னவால் உத்தரவு வழங்கப்பட்டதாகவும் பேசப்பட்டது.

பிரேமதாசாவை ரோகன விஜயவீர சந்தித்தால் சில நேரம் அவரை சேர்த்துக்கொண்டு அரசியல் செய்யக்கூடும் என்ற சந்தேகத்திலேயே இதனை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரஞ்சன் விஜரத்ன மறைத்ததாக காரணம் கூறப்பட்டது.
பல வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டு ரோகன விஜவீரவை கைது செய்திருக்கின்ற நிலையில், பிரேமதாசாவுடன் சேர்ந்து அரசியல் செய்வதற்கு ரஞ்சன் விஜயரத்ன துளியளவும் விரும்பியிருக்கவில்லை.


தொடரும்.............


முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :