கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை இஸ்லாமிக் ரிலீப் தொடர்மாடி வீட்டுத் தொகுதியின் கழிவு நீர்க் குழிகள் மற்றும் வடிகான்களை சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (09) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் மற்றும் கணக்காளர் ஏ. ஹபீபுல்லாஹ் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்து நீர்க்கதியடைந்த மக்கள் குடியிருக்கும் இவ்வீட்டுத் தொகுதிக்கான கழிவு நீர்க் குழிகள் அடிக்கடி நிரம்பி வழிவதால் துர்நாற்றமும் டெங்கு அபாயம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அத்துடன் அப்பகுதியிலுள்ள வடிகான்களும் சீரான நீரோட்டமின்றி காணப்படுகின்றன. இவற்றால் பொது மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர ஆணையாளர் நௌபீஸ் அவர்கள் புதன்கிழமை (09) காலை 7.00 மணியளவில், கணக்காளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சசிதம் அங்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்ததுடன் சுத்திகரிப்பு நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்து அங்கு நின்றவாறே மேற்பார்வையாளர்களையும் ஊழியர்களையும் அழைத்து உரிய வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கச் செய்தார்.
இதையடுத்து சுத்திகரிப்பு பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு குறித்த கழிவு நீர்க் குழிகளும் வடிகான்களும் சீரமைக்கப்பட்டுள்ளன.
இத்துரித நடவடிக்கைக்காக இஸ்லாமிக் ரிலீப் தொடர்மாடி வீட்டுத் தொகுதி மற்றும் சுற்றுப் புற மக்கள் கல்முனை மாநகர ஆணையாளர், கணக்காளர் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment