காணி உரிமை கோரி ஜனாதிபதியின் வடக்கு பிரதிநிதியை வன்னி தாய்மார் சந்தித்தனர்


யு
த்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் காணியற்ற தமிழ் தாய்மார்கள் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு சென்று பல வருடங்களாக இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனாதிபதியின் மாகாண பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில் இராணுவத் தளம் அமைப்பதற்காக அபகரிக்கப்பட்ட கேப்பாபுலவு தமிழர்களின் காணிகளையும் மகாவலி எல் (L) வலயத்தை உருவாக்கும் போது பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு தமிழர்கள் நேற்று முன்தினம் (ஒக்டோபர் 21) யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு வந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்துடன் முல்லைத்தீவில் இருந்து சென்ற குழுவில் இருவர் மாத்திரமே கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் ஐந்து ஜனாதிபதிகள் பதவியில் அமர்ந்தபோதும் கேப்பாபுலவு மக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லையென, மாகாண ஆளுநருடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விவேகானந்தன் இந்திராணி தெரிவிக்கின்றார்.

“2008ஆம் ஆண்டிலிருந்து இன்று 2024ஆம் ஆண்டும் முடிவுக்கு வந்துவிட்டது. 5 ஜனாதிபதிபதிகள் மாறிவிட்டனர். ஆறு ஆளுநர்கள் மாறிவிட்டனர். ஆனால் இந்த ஐந்து ஜனாதிபதிகள் பதவியில் இருந்தும் எங்களின் கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலைமை. தற்போதைய ஜனாதிபதியை தெரிவு செய்து, அவர் நல்லது செய்கிறார். தென்னிலங்கையில் ஊழலை ஒழிக்கின்றார் என்ற அடிப்படையில் எங்கள் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும்.”

காணிகளை இழந்த குடும்பங்களுக்கு தலா 40 பேர்ச்சஸ் காணியை வழங்கி தம்மை தற்காலிகமாக மீள் குடியேற்றிய, 2010ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளராக இருந்த தற்போதைய வடமாகாண ஆளுநர் வேதநாயகத்தை சந்தித்து தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்ததாக இந்திராணி குறிப்பிடுகின்றார்.

“நாங்கள் பல போராட்டங்களை செய்தும், வீதி வீதியாய் பல போராட்டங்களை செய்தும் ஒரு ஜனாதிபதியாலும் எங்கள் பிரச்சினையை தீர்க்க முடியாத நிலையில், வேதநாயகம் ஆளுனராக பதவியேற்றுள்ளதை அறிந்து, நீங்கள்தான் எங்களை அங்கு குடியேற்றினீர்கள். நீங்கள்தான் எங்களை எங்கள் இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தவே இங்கு வந்தோம்.”

மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை தமக்கு ஒன்றும் புதிதல்ல என்பதை ஆளுநரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

காணியற்ற முல்லைத்தீவு மக்களை வடமாகாண ஆளுநர் சந்தித்து ஒரு நாள் (ஒக்டோபர் 22) கழித்து, ஜனாதிபதி அனைத்து ஆளுநர்களையும் கொழும்புக்கு அழைத்திருந்தார்.

“வடகிழக்கு காணிகள் மற்றும் மாகாண சபை நிதியின் பயன்பாடு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது” என ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டிருந்தது.

இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி 2017 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு முன்பாக காணி உரிமையாளர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டத்தை அடுத்து இராணுவம் இரண்டு கட்டங்களாக காணிகளில் ஒரு பகுதியை விடுவித்திருந்தது.

ஆனால் மத ஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது கட்டிடங்கள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களைக் கொண்ட காணியை ஆக்கிரமித்து இராணுவம் பாதுகாப்பு படை தலைமையகத்தை அமைத்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது விவசாய நிலங்களையும் தமிழ் மக்களின் வருமானத்தையும் இராணுவம் அபகரித்து வருவதாக குற்றம் சுமத்தும் காணி உரிமையாளர்கள், யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்கள் இன்னும் யுத்த அனாதைகளாகவே வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் வலுக்கட்டாயமாக சுவீகரித்து வெளியாட்களுக்கு பகிர்ந்தளித்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்கேணி கிராம மக்கள் தமது விவசாய நிலங்களை விடுவிக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மக்கள் தமது தாயகமாக அங்கீகரிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் சனத்தொகை அமைப்பை மாற்றும் திட்டமாகவே அரசாங்கம் மேற்கொண்ட குடியேற்றத்தை அவர்கள் கருதுகின்றனர்.

வன்னி வாழ் தமிழ் கிராம மக்களுக்கு நான்கு தசாப்தங்களாக இழந்த தமது பூர்வீகக் காணிகளை மீட்டுத் தருமாறு கோரியும், காணி ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், நாளைய தினம் (ஒக்டோபர் 24) யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஏற்றுக்கொண்ட ஆளுநர், நாளைய தினம் அந்த மக்களை மாவட்ட செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அபிவிருத்தி என்ற பெயரில்

மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்துமாறும், தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத் தருமாறும் முல்லைத்தீவிலிருந்து இரண்டு பேருந்துகளில் இவ்வருடம் மே மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகச் சென்ற முல்லைத்தீவு மக்கள் போராட்டம் நடத்தி இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 120ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

1984ஆம் ஆண்டு போரிலிருந்து உயிர் பிழைப்பதற்காக தமது இடத்தை விட்டு வெளியேறிய சுற்றுப்புற கிராம மக்கள், 11 வருடங்களுக்கு முன்னர் (2013) தமது சொந்த கிராமங்களுக்குத் திரும்பிய போதும் அரசாங்கம் அந்த காணிகளை, மகாவலி எல் வலயத்திற்குள் கொண்டுவந்து, சிங்கள மக்களை குடியமர்த்தியதோடு, தமது காணிகளை விடுவிக்கவில்லை என போராட்டத்தின்போது யாழில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட கொக்குத்தொடுவாய் கமநல அமைப்பின் தலைவர் சின்னப்பிள்ளை சிவகுரு தெரிவித்தார்.

“நாங்கள் 84ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மீண்டும் 2013இல் மீள் குடியேற்றம் செய்யப்பட்டோம். அதன்போது எங்களுடைய காணிகள் எல்லாம் மகாவலி எல் வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டிருந்தது. நாங்கள் வயல் காணிகளில் விவசாய நடவடிக்கைக ளில் ஈடுபடுவதற்கு அனுமதிகள் தரப்படவில்லை. எமக்கு சொந்தமான காணிகள் மகாவலி எல் வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டு சிங்கள மக்களுக்கு 25 ஏக்கர் என்ற அடிப்படையில் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாங்கள் எங்கள் காணியை துப்பரவு செய்ய முயன்றால் எமது எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்றார்கள். ஆனால் சிங்கள மக்கள் எங்கள் காணியை துப்பரவு செய்யும்போது அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றார்கள். எங்களிடம் அனுமதிப் பத்திங்கள் காணப்பட்டாலும் அரச திணைக்களங்கள் எங்களுக்கு எதிராக செயற்படுகின்றார்கள். மீள் குடியேறிய நாள் முதல் இந்த பிரச்சினை தொடர்கிறது.” என்றார்.

1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் தமிழர்களை அவர்களது கிராமங்களை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்திய போது முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளின் நூற்றுக்கணக்கான மக்களுக்கு சொந்தமாக சுமார் மூவாயிரம் ஏக்கர் விவசாய நிலம் காணப்பட்டதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்திருந்தார்.

2018ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கமநல சேவைகள் திணைக்களத்தினால் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்ட போதும் தமிழ் மக்களுக்கான காணிகள் மீளக் கையளிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

“2018ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆம் திகதி கமநல சேவை திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமைய 2919 ஏக்கர் காணி 625 பயனாளிகளுக்கு உரியது. ஆனால் அந்த காணிகள் இன்று அந்த மக்களிடம் இல்லை. ஆனால் சிங்கள மக்கள் மகாவலி அதிகார சபையின் துணையுடன் அந்த காணிகளை துப்பரவு செய்து பயிர் செய்கின்றனர்.” என்றார்.

தமது சொந்த கிராமங்களில் மீள்குடியேறி சுமார் 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமது காணி பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் அதன் கீழுள்ள பிரதேச செயலகத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், அதற்கு உரியத் தீர்வு கிடைக்காத நிலையில், யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்களின் பரம்பரையாக வாழ்வதாக உரிமைக்கோரும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் கொக்குத்தொடுவாய் வடக்கு, மத்தி மற்றும் தெற்கு, கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் அமைந்துள்ள பகுதியை அண்மித்து, எண்பதுகளில் நிறுவப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் காணப்படுகின்றன.

சிங்களக் குடியேற்றங்கள், தொடர் தமிழ் இனப்படுகொலைகளால் ஏற்படுத்தப்பட்டவை என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி முல்லைத்தீவு ஒதியமலை கிராம அபிவிருத்தி மண்டபத்திற்கு 32 நிராயுதபாணிகளான தமிழர்களை வரவழைத்து சுட்டுக் கொன்ற அரச இராணுவம், விடுதலைப் புலி உறுப்பினர்கள் மறைந்திருப்பதாக மக்களை அச்சுறுத்தி, தமிழ் மக்களை அவர்களது கிராமங்களை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு-திருகோணமலை மாவட்டங்களின் எல்லையில் உள்ள பல தமிழ்க் கிராமங்களை இலக்கு வைத்து 1984 டிசம்பர் தொடக்கத்தில் இருந்து பதினைந்து நாட்களில் இடம்பெற்ற தொடர் படுகொலைகளில் ஒதியமலை இனப்படுகொலையும் ஒன்றாகும்.

கொக்கிளாய், தென்னைமரவாடி, அமரவயல், கொக்குத்தொடுவாய், அளம்பில், நாயாறு, குமிழமுனை மற்றும் மணலாறு ஆகிய தமிழ்க் கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.

பின்னர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற பிரிகேடியர் ஜானக பெரேரா படுகொலையின் போது பிரதேசத்திற்கு கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்டிருந்தார். தாக்குதலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஒரு சிங்களக் குடியேற்றம் ஜானகபுர என அழைக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், தமது பூர்வீக கிராமங்களை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்கேணி கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த தமிழர்கள் 2010, 2011 மற்றும் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் தமது பூர்வீக நிலத்திற்குத் திரும்பிய போதிலும், முன்னர் அவர்கள் பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 3000 ஏக்கர் காணியில் மீண்டும் பயிர் செய்கையில் ஈடுபடுவதற்கு, இராணுவம், வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பன இடையூறு செய்ததாக முன்னர் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், 1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமக்கு விவசாயம் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அபிவிருத்தி சபை, தொல்பொருள் திணைக்களம், வனவள பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பலவந்தமாக கையகப்படுத்துவதாக தொடர்ந்தும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

அரச பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அரச நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணியை விடுவிப்பதற்கான தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை, 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டிய 'போராட்டம்' என அடையாளப்படுத்தியிருந்தார்.

காணி கச்சேரி மூலம் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

"காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது உண்மையில் ஒரு பெரிய வேலை. தெளிவாகத் தெரியாத விடயங்கள் நிறைய உள்ளன. போரின் போது சிலர் காணியை விட்டு வெளியேறினர். அதன் பிறகு, அவர்களால் திரும்பிச் செல்ல முடியவில்லை. அதன் பின்னர், அங்கு இருந்தவர்கள் காணியை கையகப்படுத்தினார். இப்போது உரிமையாளர் செல்லும்போது வேறுவொருவர் நிலத்தில் குடியேறியுள்ளார். ஆகவே முரண்பாடு ஒன்றுதான் காணப்படுகிறது. ஆகவே அரசு தலையிட்டு ஏதாவது காணி கச்சேரியை நடத்தி தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.’’

யுத்தத்தினால் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ் மக்கள் திரும்பி வந்த போது அவர்களின் பூர்வீக நிலங்கள் பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு காணிகளை கையகப்படுத்தியதை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் குறிப்பிடாமல் மிகக்கவனமாக இந்த செவ்வியில் கருத்து வெளியிட்டிருந்தார்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக சுவீகரிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, 1985ல் வனத்துறை உருவாக்கிய வரைபடத்திற்கு அமைய செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்ததாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், 2023ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :