ரவூப் ஹக்கீம் என்பவர் ஒரு ஏமாற்று பேர்வழி என்பது நன்றாக தெரிந்தும் கூட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஏமாந்தது கவலை தருவதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களிற்கு இன்று அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது
பாராளுமன்ற தேர்தலில் ஹரீஸூக்கு வேட்பு மனுவில் இடம் தருவதாக ரவூப் ஹக்கீம் கூறி அவரை கடைசி வரை இழுத்தடித்து வேட்புமனு இறுதித் தினமான கடந்த வெள்ளிக்கிழமை (11) புனாணை பகுதியில் உள்ள பிரத்தியேக இடம் ஒன்றில் ஒப்பமிட வரச்சொல்லி இறுதி நேரத்தில் அவரை ஏமாற்றியமை எச.எம்.எம். ஹரீஸூக்கு வாக்களித்த மக்களுக்கு ரவூப் ஹக்கீம் செய்த துரோகங்களில் ஒன்றாகும்.
எம்மைப் பொறுத்தவரை ஹரீஸின் அரசியல் செயற்பாட்டில் அதிருப்தி இருந்தாலும் மக்கள் வாக்குகள் பெற்ற ஒருவரை இவ்வாறு கேவலப்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது.நாம் இந்த சமூகத்துக்கு எவ்வளவோ சொன்னோம். ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசை ஒதுக்கிவிட்டு கல்முனை தொகுதி மக்கள் தலைமையில் புதிய அரசியல் பாதை அமைப்போம் என வலியுறுத்தி வந்திருந்தோம்.இந்த தூரநோக்கு ஹரீஸூக்கும் புரியவில்லை. எவருக்கும் தெரியவில்லை.ஆனால் றவூப் ஹக்கீம் முஸ்லிம் மக்களின் சமூகத்துரோகி என்றும் கிழக்கு மக்களை அவர் மாடுகளாக நினைத்து மேய்க்கின்றார் எனவும் நாம் 2001ம் ஆண்டு முதல் சொல்லி வருகிறோம்.
இப்போது ஹரீஸூம் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும் கல்முனைச் சமூகமும் ஏமாளிகளாக வெட்கித்து நிற்கின்றனர்.இவ்வளவும் செய்த ஹக்கீம் இப்போது ஹரீஸையும் கல்முனையையும் மீண்டும் ஏமாற்ற ஹரீஸுக்கு தேசிய பட்டியலில் இடம் கொடுக்கவிருப்பதாக கூறுகிறார். தேசிய பட்டியலில் ஹரீஸின் பெயர் கூட இல்லாத நிலையில் அப்பாவி மக்களை றவூப் ஹக்கீம் அப்பட்டமாக ஏமாற்ற முனைகிறார்.இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஹரீஸ் முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவர் என்று இரண்டு வருடங்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் இன்னமும் தேர்தல் திணைக்கள இணையத்தில் முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாகத்தில் ஹரீஸ் இல்லை. இதைக்கூட செயலாளரும் தலைவரும் தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்காமல் ஹரீஸை ஏமாற்றியுள்ள நிலையில் இல்லாத தேசியப்பட்டியலை வழங்குவது என சொல்வதன் மூலம் ரவூப் ஹக்கீம் எமது மக்களை தலையாட்டி எருமைகள் என நினைக்கிறாரா என கேட்கிறோம்.ஆகவே ஹரீஸ் அவர்கள் கல்முனை தேர்தல் தொகுதியை மையமாக கொண்ட 'ஐக்கிய முஸ்லிம் காங்கிரஸ்' என்ற பெயரில் கட்சியை பிரகடனப்படுத்த துணிச்சலுடன் முன் வர வேண்டும்.
அதன் பெயரில் கல்முனையில் மேடை போட்டு ஹக்கீமுக்கோ அவர் கட்சிக்கோ மக்கள் ஓட்டுப் போட வேண்டாம் என மக்களுக்கு பிரச்சாரம் செய்ய முடியும்.அதன் மூலம் இதோ கல்முனை மக்கள் விழித்துவிட்டார்கள் என்றும் ஹக்கீமுக்கு எதிராக புதிய கட்சியை பிரகடனப்படுத்தி விட்டார்கள் என்ற செய்தியும் தான் ஹக்கீமின் துரோகங்களுக்கு அவர் தலையில் விழும் இடியாகும்.இதற்கான முயற்சிகளை ஹரீஸ் முன்னெடுத்தால் எம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய உலமா கட்சி தயாராக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment