கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழு உறுப்பினர் நியமனம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்;-கிழக்கு கல்வி நிருவாக அதிகாரிகள் சங்க செயலாளர் முக்தார் கோரிக்கை



அஸ்லம் எஸ்.மெளலானா-
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பட்டியல் மீளாய்வு செய்யப்பட்டு இலங்கை கல்வி நிருவாக சேவை மற்றும் சுகாதார சேவை என்பவற்றில் ஓய்வுபெற்ற அதிகாரிகளும் சட்டத்தரணி ஒருவரும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் படி கல்வியும் சுகாதாரமும் மாகாண சபைகளிடம் முழுமையாக கையளிக்கப்பட்டுள்ள நிலையில் 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வருவதானது மிகவும் கவலை தரும் விடயமாகும்.

2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த காலப் பகுதியில் அந்த மாகாண சபையின் அரச சேவை ஆணைக்குழுவில் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற சுகாதார சேவை அத்தியட்சகர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ஆனால் 2006 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் ஓய்வுபெற்ற சுகாதார சேவை அத்தியட்சகர்கள் புறக்கணிக்கப்பட்டு இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த கிழக்கு மாகாணத்தை சாராத தென் மாகாண சகோதர இனத்தின் அதிபர் ஒருவர் சுமார் 15 வருடங்களாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினராக கடமையாற்றினார்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது
நியமனம் செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் மூவர் ஓய்வுபெற்ற இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்களாகவும் ஒருவர் தற்போது அரச சேவையில் உள்ளவராகவும் மற்றவர் ஓய்வுபெற்ற ஆசிரியருமாக மொத்தம் ஐவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரச சேவையில் மத்திய அரசின் கீழுள்ள அமைச்சொன்றில் தற்போதும் கடமையில் உள்ள ஒருவர் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக கிழக்கில் நியமனம் செய்யப்பட்டுள்ளமை மாகாண சபைகளின் 35 வருட வரலாற்றில் முதன்முறையாக இம்முறை
இடம்பெற்றுள்ளது. இது தவறான முன்னுதாரணமாகும்.

மாகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை மாகாண ஆளுனர்தான் நியமனம் செய்கின்றார். இவர்களை ஆளும் அரசியல் கட்சி முக்கியஸ்தர்கள் சிபாரிசு செய்கின்றனர். வழமைக்கு மாறாக இந்த முறை கல்வி சுகாதாரத்துறை அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டு இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாததொரு விடயமாகும்.

ஆகையினால் கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் தற்போதைய உறுப்பினர் பட்டியல் மீளாய்வு செய்யப்பட்டு இலங்கை கல்வி நிருவாக சேவை மற்றும் சுகாதாரத் துறைகளில் ஓய்வுபெற்ற அனுபவமுள்ள அதிகாரிகளும் சட்டத்தரணி ஒருவரும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். இதன் மூலமே கிழக்கு மாகாணத்தின் அரச சேவை ஆணைக்குழுவானது முழுமை பெற்றதாக இருக்கும்.
மாகாண அரச சேவை ஆணைக்குழுவானது மாகாண அரச சேவையிலுள்ள அரச சேவையாளர்களின் பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்கக் கட்டுப்பாடு, நியமனம், மேன்முறையீடு என்பவற்றுக்கு பொறுப்பாகவுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் கீழ் கல்வித்துறை உத்தியோகத்தர்கள் என்ற வகையில் சுமார் 30,000 அதிபர், ஆசிரியர், கல்வி சாரா பணியாளர்களும் சுமார் 15,000 சுகாதார சேவை உத்தியோகத்தர்களும் கடமையாற்றுகின்றனர்.

தற்போதைய ஆளுனர் கல்வித் துறையில் ஆழ்ந்த அறிவுள்ள ஒரு பேராசிரியர் என்ற வகையில் எமது கோரிக்கையிலுள்ள நியாயத்தை விளங்கி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் - என்று மேற்படி சங்கத்தின் செயலாளர் முக்தார் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :